வேதப் பாடம்


தேவன் மனிதனை சிருஷ்டித்தது முதல், இன்று வரை எப்போதும் அவனோடு இருக்க விரும்புகிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாத மனிதன், அவரை விட்டு தூரமாக போகிறான்.
ஆதாமின் குடும்பத்தில் ஏற்பட்ட தேவனின் ஏமாற்றம், இன்றும் பல லட்சக்கணக்கான குடும்பங்களில் தொடர்கிறது. அன்று ஆதாம், ஏவாளுடன் நேரடியாக பேசின தேவன், இன்று தமது வேதத்தையும், ஊழியர்களையும் கொண்டு பேசுகிறார்.
தேவ வசனத்திற்கு கீழ்படியும் ஜனங்களை, தேவன் சந்தித்து குறைகளை நிறைவாக்கி ஆசீர்வதிக்கிறார். இன்று நம் கையில் கிடைத்துள்ள பரிசுத்த வேதாகமம் – தேவனையும், மனிதனையும் இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது.
பரிசுத்த வேதாகமம் என்பது எத்தனையோ போராட்டங்களை கடந்த பிறகே, நமது கைகளில் வந்து சேர்ந்துள்ளது என்பது வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் இன்றைய கிறிஸ்தவர்களிடையே வேதத்தை படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளது. சிலர் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பைபிளை பயன்படுத்துகிறார்கள்.
மேலும் வேதத்தை பல வகைகளில் இன்று படிப்பவர்களை காணலாம். சிலர் ஆராய்ச்சிக்காகவும், அறிவுக்காகவும், மொழி புலமையை வளர்க்கவும் கூட வேதத்தை படிக்கிறார்கள். சிலர் கடமைக்காக படிப்பவர்களும் உண்டு.
இந்நிலையில் வேதத்தை தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக் கொண்டு நாம் அதை தியானிக்கும் போது, தேவன் உண்மையாகவே நம்மோடு பேசுவார். நமக்குள் கிரியை செய்யும் பிசாசின் போராட்டங்களையும், பாவத்தின் கட்டுகளையும் விட்டு நம்மை விடுவிப்பார். நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்பதற்கு ஒரு உண்மையான அர்த்தத்தை காண முடியும்.
வேதத்தை படித்து அதன் மூலம் தேவன் நம்மோடு பேசும் வார்த்தைகளை அறிந்து கொள்ள இந்த வேதபாட பகுதி உதவும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறோம்.

  • கிறிஸ்துவில் அன்பான சகோதரர்கள்.