
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…
உலகில் பாவியாக வாழ்ந்து வந்த என்னையும் தேவன், அழைத்து, விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வருகிறார். என் வாழ்க்கையில் தேவன் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்திருந்தாலும், வாக்குத்தத்தம் செய்த நம் தேவன் வாக்கு மாறாதவர் என்பதை உணர வைத்த ஒரு காரியத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, ஆண்டுதோறும் செல்வது போல தேவாலயத்தில் நடந்த புத்தாண்டு ஆராதனைக்கு சென்றேன். 2014-ல் பல சோதனைகளின் ஊடக கடந்து சென்றதால், 2015 ஆம் ஆண்டு ஒரு ஆசீர்வாதமான ஆண்டாக இருக்க வேண்டும் என்று ஜெபித்துவிட்டு, கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.
புத்தாண்டு கூட்டம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. தமது ஊழியர்களின் மூலம் பேசிய தேவன், என்னை பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தினார். 2015 புத்தாண்டு வாக்குத்தத்தமாக, உபாகமம்:28.5 – “உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என்று கிடைத்தது. நான் வழக்கமாக, புத்தாண்டு ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் 2014 ஆம் ஆண்டு என் குடும்பம் சற்று கஷ்டமான சூழ்நிலையில் சென்றதால், 2015-ல் தேவன் தனது ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் மூலம் என்னை ஆறுதல்படுத்துவார் என்று நினைத்த எனக்கு, மேற்கூறிய வசனம் சற்று ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அந்த வசன அட்டையை வீட்டில் ஓர் இடத்தில் வைத்து விட்டு, வழக்கம் போல வேலைக்கு சென்றேன்.
2015 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் பல நாட்கள் வேலையில்லாமல், பெரும் கஷ்டத்தை சந்தித்தேன். பொருளாதார நிலையில் பெரும் குறைவை சந்தித்து, பலரிடமும் கடன் வாங்கி, வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு கட்டத்தில் துக்கம் அதிகமாகவே, தேவ சமூகத்தில் ஜெபிக்க ஆரம்பித்தேன்.
அப்போது புத்தாண்டு கூட்டத்தில் எனக்கு கிடைத்த வாக்குத்தத்த வசனம், என் நினைவிற்கு வந்தது. அதை வைத்து, தேவ சமூகத்தில் தினமும் ஜெபிக்க முடிவு செய்து, அதேபோல செய்ய ஆரம்பித்தேன்.
நாட்கள் செல்ல செல்ல எனக்குள் விசுவாசம் அதிகரித்து, அந்த விஷயத்தில் கருத்தாக ஜெபிக்க ஆரம்பித்தேன். சில நாட்களுக்கு பிறகு, தினமும் வேலைக்கு செல்லும் நிலையில் புதிய வாசல்களை தேவன் திறந்தார். இதனால் வீட்டிற்கு நல்ல வருமானம் கிடைக்க தொடங்கியது. ஒரு சீரான வருமானம் கிடைக்க ஆரம்பித்த போது, பல இடங்களில் வாங்கியிருந்த கடன்களை ஒன்றொன்றாக தீர்க்க தேவன் உதவி செய்தார்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் நான் ஒரு ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் வருமானத்தை தேவன் கட்டளையிட்டார். தேவனுடைய ஆசீர்வாதம் மூலம் நான் அநேகருக்கு கடன் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. முடிவாக 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு கூட்டத்திற்கு வந்த போது, கடந்தாண்டு இதே நாளில் நான் இருந்த நிலையை எண்ணி பார்த்து, நன்றியுள்ள இதயத்தோடு தேவனை துதித்தேன்.
நம் தேவன் அளிக்கும் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவாராக உள்ளார். அவர் எந்த வகையிலும் அதிலிருந்து மாறுவதில்லை. ஆனால் நாம் அதை பெற்று கொள்ளத்தக்கதாக, அதை கூறி ஜெபிக்க வேண்டியுள்ளது. அப்போது தேவன் நம் வாழ்க்கையில் கிரியை செய்து, அந்த வாக்குத்தத்தங்களின் ஆசீர்வாதத்தினால் நம்மை நிரப்புகிறார் என்பதற்கு நானும், என் வீட்டாரும் சாட்சியாக இருக்கிறோம்.
தேவன் செய்த இந்த அதிசயமான கிரியை மூலம் என் வாழ்க்கையில் இருந்த அவிசுவாசம் நீங்கியது. வேத வசனத்தின் மீது விசுவாசமும், மதிப்பும் அதிகரித்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.