
…உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். 1 பேதுரு: 5.8
கிறிஸ்தவ மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முக்கிய எதிரி என்றால் அது பிசாசு தான் என்பது நாம் யாவரும் அறிந்ததே. நாம் யாரும் தேவனுடைய நகரமாகிய பரலோகத்திற்கு சென்றுவிட கூடாது என்பது தான் அவனுடைய முக்கியமான திட்டம்.
மேலும் அவனுக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நரகத்தில் நாமும் பங்கடைய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். இதற்காக கெர்ச்சிக்கிற சிங்கம் போல அலைந்து திரிகிறான் என்று பரிசுத்த பேதுரு கூறியுள்ளார்.
யூதா கோத்திரத்தின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் இயேசு. தனது பிள்ளைகளை மீட்கும்படி கெர்ச்சிக்கிற சிங்கமாக இயேசு உள்ளார். ஆனால் தியான வசனத்தில் கெர்ச்சிக்கிற சிங்கத்தை போல பிசாசு சுற்றித் திரிகிறான் என்று உள்ளது.
அப்படியென்றால், இயேசுவை போல தன்னை காட்டி கொள்ளும் பிசாசு, எவனை ஏமாற்றி விழுங்கலாம் என்று அலைகிறான். எனவே எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு நாம் வாய்ப்பு தரக்கூடாது. பிசாசின் தந்திரங்களுக்கு நாம் தப்பும்படி, தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என பேதுரு கூறுகிறார்.
இந்நிலையில், நமக்கு ஆலோசனை தருவது இயேசுவா? பிசாசா? என்பதை எப்படி அறிய முடியும்? என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது. எந்தொரு ஆலோசனை யார் மூலமாக கிடைத்தாலும், அது நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை மனதில் எழுப்பினாலே போதும்.
அந்த கேள்விக்கு வேத வசனங்களின் விளக்கில் வைத்து ஆராய்ந்து பார்த்தால், அதற்கு தெளிவான விளக்கமும் கிடைக்கும். இயேசுவை போன்ற உருவத்தில் பிசாசு நேரடியாக வந்து நம்மிடம் பேசினால் கூட, மேற்கூறிய தெளிவு இருந்தால், அது இயேசு அல்ல என்பதை கண்டுபிடித்து விடலாம்.
ஆவிக்குரிய நபர் அல்லது போதகர் என்று நாம் நினைக்கும் சிலர் செய்கிறார்கள் அல்லது ஆலோசனை கூறுகிறார்கள் என்பதால், அதை எந்த யோசனையுமின்றி செய்வது எப்போதும் தேவ சித்தமாக இருக்காது. அது மனித யோசனை அல்லது பிசாசு அளிக்கும் ஆலோசனையாக கூட இருக்கலாம்.
எனவே நமக்கு யார் ஆலோசனைகளைக் கூறினாலும், அது வேத வசனங்களுக்கு ஒத்து போகிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். அது நமக்கு மட்டுமின்றி பிறரின் ஆவிக்குரிய வீழ்ச்சிக்கும் காரணமாக அமையுமா என்று சிந்திப்போம்.
சிங்கமான இயேசுவின் வேஷத்தில் வரும் நரி போன்ற ஏமாற்றும் பிசாசை நாம் இனங்கண்டு கொள்ள முடியும். மேலும் உண்மையான யூதா கோத்திரத்து சிங்கத்தின் ஆலோசனைகளை நாம் பின்பற்றி, இளம் சிங்கங்களாக நாம் மாற முடியும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் ஆண்டவரே, நீர் யூதா கோத்திரத்தின் சிங்கமாக எங்களோடு இருப்பதற்காக நன்றி. சிங்கத்தை போல ஏமாற்றும் பிசாசின் வல்லமைகளை நாங்கள் இனங்கண்டு, அதை ஜெயமெடுக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.