2 பேதுரு:3.9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” 2 பேதுரு:3.9

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்த எதிர்பார்ப்பு, பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இயேசுவின் வருகையை குறித்த வாக்குத்தத்தங்களை ஒரு குழுவினர் தொடர்ந்து விசுவாசித்து, அதற்காக காத்திருக்கின்றனர். இன்னொரு குழுவினர், அதை விசுவாசிக்காமல் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

மேற்கூறிய இரு குழுவில் சேர்ந்தவர்களும், சமீப காலத்தில் தோன்றியவர்கள் அல்ல. ஆதி கிறிஸ்தவ நாட்களில் இருந்தே இருக்கிறார்கள் என்பதை நமது தியான வசனத்தின் மூலம் அறிய முடிகிறது. இதில் நாம் எந்த குழுவில் சேர்ந்திருக்கிறோம் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

ஏனெனில், நாம் இருக்கும் இந்த கடைசி காலத்தில், கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களே, இதை நம்பாமல், இயேசுவின் வருகையை விசுவாசிக்கிறவர்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு கூட்டம் கிறிஸ்தவர்களுக்கு, பிறந்தது முதல் இதையே கேட்டு வந்ததால், அது ஒரு சாதாரண பேச்சாக மாறியுள்ளது. அதன் முக்கியம் அவர்களுக்கு தெரியவில்லை.

மற்றொரு குழுவினருக்கு, தியான வசனத்தின் முதல் பகுதியில் “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி” – என்பது போல, இயேசுவின் வருகையை குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கேட்டும், அவரது வருகை சம்பவிக்கவில்லை. இதனால் இனியும் அப்படி நடக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிலர் கொஞ்சம் நாட்கள் அதை விசுவாசித்த பிறகு, ஆவியில் சோர்ந்து போனவர்களாகி, இயேசுவின் வருகை நிச்சயம் இருக்கும். ஆனால் இப்போது அல்ல, அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

சில கிறிஸ்தவர்களுக்கு இரண்டாம் வருகையை குறித்தும், அதன்பிறகு உலகில் என்னென்ன நடக்கும் என்பதும் நன்றாக தெரியும். ஆனால் அதற்கான எந்த ஆயத்தமும் அவர்களிடம் இருக்காது. இது குறித்து கேட்டால், தேவனின் வருகையின் போது மன்னிப்பு கேட்டு, அவரோடு எடுத்துக் கொள்ளப்படுவேன். இல்லாவிட்டால் அந்தி கிறிஸ்துவின் நாட்களில் இரத்த சாட்சியாக மரிப்பேன் என்று தைரியமாக கூறுகிறார்கள்.

ஆனால், ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அவர் வந்து போனது கூட தெரிய போவதில்லை. அதேபோல, அந்தி கிறிஸ்துவின் கொடூர ஆட்சியில் இரத்த சாட்சியாக மரிப்பது அவ்வளவு எளிய விஷயமல்ல. அந்த நாட்களை குறித்து, இதுவரை உலகம் கண்டிராத கொடூரமாக நாட்கள் என்று வேதம் கூறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னும் சில கிறிஸ்தவர்களுக்கு, உலகில் நல்ல வீடு, ஆஸ்தி, பணம் ஆகியவை இருக்கிறது. தேவாலயத்திற்கு கடமைக்கு போகிறோம். இது போன்ற காரியங்களை யோசித்து மனதை குழப்பி கொள்ள கூடாது என்று இருக்கிறார்கள். வருகையை குறித்த செய்திகளை, இவர்கள் கேட்பதில்லை. ஆசீர்வாதம் குறித்த செய்திகள் தான் இவர்களுக்கு விருப்பம்.

இன்றைய கிறிஸ்தவர்களில் இதுபோல பல குழுவினர் இருக்க, இயேசுவின் வருகை ஏன் தாமதப்படுகிறது என்பதற்கு தியானம் வசனம் பதிலளிக்கிறது. ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, இயேசுவின் வருகை தாமதப்படுகிறது. ஆனால் இது குறித்து மேற்கூறிய கிறிஸ்தவர்களிடம் நாம் பேசினால், நம்மையும் சேர்த்து குழப்பி விடுவார்கள்.

ஏனெனில் அவர்களின் உள்ளே இருந்து கிரியை செய்யும் பிசாசு, நம்மையும் அவனிடம் இழுத்து கொள்ள பார்க்கிறது. அது போன்ற வல்லமைகளுக்கு விலகி, இயேசுவின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஆயத்தப்படுவோம். யாருக்கு தெரியும் ஒரு வேளை, நாம் ஆயத்தப்படுவதற்காக, இயேசுவின் வருகையின் தாமதமாகிறதா என்னமோ?

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே உமது வருகையின் தாமதம் ஏன் என்பதை குறித்து, எங்களோடு பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களை சுற்றிலும் குழப்ப பல குழுவினர் உலா வந்தாலும், உமது வருகையை குறித்த விசுவாசத்தில் உறுதியாக இருந்து, எக்காள சத்தத்தை கேட்டு, உம்மோடு வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். நல்ல பிதாவே, ஆமென்.