1 சாமுவேல்:10.6

அப்போது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடே கூடத் தீர்க்கத்தரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்” 1 சாமுவேல்:10.6

இஸ்ரவேல் மக்களின் கோரிக்கையை ஏற்று, தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட முதல் ராஜா சவுல். பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீஸ் என்பவரின் மகனான இவர், ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, தீர்க்கத்தரிசி சாமுவேல் கூறிய வார்த்தைகளை தான் நாம் தியான வசனமாக எடுத்துள்ளோம்.

புதிய ஏற்பாட்டு சபையில், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அனைவரும், ராஜாக்களும், ஆசாரியர்களுமாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் (வெளிப்படுத்தின விசேஷம்:1.6) கூறுகிறது. எனவே சவுலுக்கு அளிக்கப்பட்டது போல, நமக்கும் ஒரு அபிஷேகம் தேவைப்படுகிறது.

தியான வசனத்தின் முதலில் கர்த்தருடைய ஆவி என்று குறிப்பிடப்படுவது பரிசுத்தாவியை குறிக்கிறது. இன்று பலருக்கும் பரிசுத்தாவியின் நடத்துதல் இல்லாததால், அவர்களுக்கு விரும்பிய வழியில் நடக்கிறார்கள். முடிவில் ஏதாவது ஆபத்தில் சிக்கி கொண்டு தவிக்கிறார்கள்.

பரிசுத்தாவியின் அபிஷேகம் என்றால், அந்நிய பாஷையில் சத்தமாக பேசுவது மட்டுமல்ல, தியான வசனத்தின் 2வது காரியமான தீர்க்கத்தரிசனம் கிடைக்க வேண்டும். தீர்க்கத்தரிசனம் என்றவுடன், சபையில் இருப்பவர்களை குறித்தும், தேசத்தில் நடக்க போகும் சம்பவங்களை குறித்தும் கூறுவது மட்டுமல்ல. தனது சொந்த ஆவிக்குரிய நிலையையும், அதன் எதிர்காலத்தையும் குறித்து உணர்த்தப்படுவது கூட, ஒரு வகையில் தீர்க்கத்தரிசனத்தை சேர்ந்தது தான்.

தியான வசனத்தில் 3வது அனுபவமாக, கர்த்தருடைய ஆவியை பெற்று, தீர்க்கத்தரிசனம் கூறி, வேறு மனுஷனாக மாற வேண்டும். ஏனெனில் பரிசுத்தாவி நமக்குள் வரும் போது, நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். அந்த வழிநடத்துதலுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது நமது சரீர பழக்க வழக்கங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவை ஒவ்வொன்றாக மாற்றம் அடையும்.

பரிசுத்தாவியை பெற்றும், தீர்க்கத்தரிசனம் உரைக்கும் வரத்தை பெற்றும், பழக்கவழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாவிட்டால் அதனால் எந்த பயனும் இல்லை.

ஏனெனில் தீர்க்கத்தரிசி சாமுவேல் கூறிய இம்மூன்றும் நடந்தால் மட்டுமே சவுல் ராஜாவாக மாற முடியும். அதேபோல மேற்கூறிய மூன்று அனுபவங்களும் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்தால் மட்டுமே, பரலோக ராஜாவான இயேசுவோடு சிங்காசனத்தில் அமரும் தகுதியை பெற முடியும்.

எனவே முதலில் பரிசுத்தாவியை பெற ஆதி அப்போஸ்தலர்களை போல, தேவனுடைய சமூகத்தில் காத்திருப்போம். ஏற்கனவே பரிசுத்தாவியை பெற்றிருந்தால், அதை காத்திருந்து புதுப்பித்து கொள்வோம். அதன்பிறகு தேவ சித்தமில்லாத காரியங்கள், நம் வாழ்க்கையில் இருக்கிறதா என்று தேவன் உணர்த்துவதற்கு ஒப்புக் கொடுப்போம். தேவன் உணர்த்தும் காரியங்களை வாழ்க்கையில் சரி செய்து, அந்த இயேசு ராஜாவை போல மாறுவோம்.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். பரிசுத்தாவியினால் நிரப்பி, எங்களை குறித்து எங்களுக்கே தெளிவான தீர்க்கத்தரிசனத்தை அளித்து, நீர் விரும்பும் வேறு மனிதனாக, இயேசுவை போல மாற்றும். அதற்கு எங்களை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.