0 1 min 4 mths

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.” யாத்திராகமம்.14.14

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான பிரச்சனைகள் உள்ளன. அதில் சில போராட்டங்கள், கஷ்டங்கள் நமக்கு பெரிய யுத்தமாகவே தெரிகின்றன. இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் இன்று அநேகர் தற்கொலை முடிவுக்கு சென்று விடுகிறார்கள்.

சிலர் தங்களின் சொந்த பலத்தையும், அறிவையும் பயன்படுத்தி, அவற்றை எப்படியாவது ஜெயித்துவிடலாம் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் சொந்த முயற்சி, நமக்கு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே வெற்றியை தருகிறது. இந்நிலையில் யுத்தம் போல தெரியும் நம் பிரச்சனைகளில் வெற்றி பெற வேதம் நமக்கு ஒரு எளிய வழியை கூறுகிறது.

கர்த்தர் நமக்காக யுத்தம் (கிரியை) செய்கிறார் என்ற விசுவாசத்தை உறுதியாக பிடித்து கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதே அந்த வழியாகும். சும்மா இருப்பது என்றவுடன் எதுவும் செய்யாமல், மெளமாக இருப்பது என்ற பொருளை எடுத்து கொள்ளக் கூடாது. இந்த வசனத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் hold your peace என்று எழுதி இருப்பதை காணலாம். அதாவது உங்கள் சமாதானத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. எனவே சும்மா இருப்பது என்றால், கர்த்தருடைய சமூகத்தில் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்வது என்பதே சரியான பொருளாகும்.

அதாவது பிரச்சனைகள் அதிகரிக்கும் போது, பெரும்பாலானோர் அதை குறித்து யோசித்து கொண்டே இருப்பார்கள். அப்படி செய்யாமல் தேவ கரங்களில் பிரச்சனைகளை ஒப்புக் கொடுத்து விட்டு, கர்த்தர் பார்த்து கொள்வார் என்ற விசுவாசத்தை நமக்குள் கட்டியெழுப்ப வேண்டும். அப்போது, தேவ சமாதானம் நம் இருதயத்திற்குள் வந்து விடுகிறது. அதே வேளையில் நம் விசுவாசத்தை பார்க்கும் தேவன், நமக்காக அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்கிறார்.

பிரச்சனைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதற்கு முடிவு வராது. ஆனால் பிரச்சனைகளை நீக்க திறன் கொண்ட இயேசுவை நோக்கி பார்த்தால், நமது அறிவுக்கும் எட்டாத அதிசயங்களை தேவன் செய்கிறார். தேவன் நம் வாழ்க்கையில் கிரியை செய்யாதபடிக்கு, நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை பிசாசு பெரியதாக காட்டுகிறான். அதை புரிந்து கொள்ளாத நிலையில் பிரச்சனைகளினால், மன சமாதானத்தை இழந்து தவிக்கிறோம்.

இன்று பலரும் பிரச்சனைகளில் தேவனை நோக்கி பார்ப்பதை காட்டிலும், மனிதர்களின் உதவியை நாடி ஓடுகிறார்கள். அதனால் சில நேரங்களில் தேவ சித்தமில்லாத காரியங்களில் கூட நாம் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் நம் வாழ்க்கையில் தேவ அன்பு குறைந்து, நன்றியுள்ள இதயம் இழந்து, உலக அன்பிற்கு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக செல்ல நேரிடுகிறது.

இந்த நிலை நமக்கு ஏற்படாத வகையில், யுத்தம் போன்ற பிரச்சனைகளில் தேவனை நோக்கி பார்ப்போம். சொந்த முயற்சிகளையும், மனிதர்களின் மீதான நம்பிக்கையும் கைவிடுவோம். பிரச்சனைகளில் தத்தளிக்கும் போது வரும் தற்கொலைக்கு தூண்டும் ஆவிகளை, இயேசுவின் நாமத்தில் கடிந்து ஜெயமெடுப்போம். தேவன் மீதான விசுவாசத்தை கட்டியெழுப்பி, தேவ பிள்ளைகளாக சமாதானத்தோடு வாழ்வோம்.

ஜெபம்:

அன்பான இயேசுவே, நீர் எங்களுக்காக யுத்தம் செய்கிறீர் என்பதை மறந்து, நாங்களே போராடி தோல்விகளை சந்திக்கிறோம் என்பதை உணர்த்திய கிருபைக்காக ஸ்தோத்திரம். பிரச்சனைகளின் மத்தியில் உம்மை மட்டுமே நம்பி, எங்கள் சமாதானத்தை பாதுகாத்துக் கொண்டு, விசுவாசத்தில் பெலமடைந்து உமது கரத்தில் இருந்து அதிசயங்களையும், அற்புதங்களையும் பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *