அப்போஸ்தலர்:3.6

அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்;…என்று சொல்லி.” அப்போஸ்தலர்:3.6

தேவாலயத்திற்கு வந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து, பிச்சை கேட்ட ஒரு சப்பாணியைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை பேதுரு கூறுகிறார். ஏனெனில் சப்பாணிக்கு தற்காலிக சந்தோஷத்தை அளிக்கும் சில்லரை பணம் பேதுருவிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ செய்யும் இயேசு கிறிஸ்துவின் வல்லமை அவர்களிடம் இருந்தது. 

இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்குள், இயேசுவின் சீஷர்களிடம் இருந்த அதே வல்லமை கிரியை செய்கிறதா? இல்லையெனில் அது நமக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய குறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெளிபுறமாக நாம் எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் அந்த சப்பாணியை போல மற்றவர்களின் ஜெபங்களையும், தீர்க்கத்தரிசனங்களையும் நம்பி நாம் வாழ்க்கையை நடத்துகிறோம்.

அந்த பிச்சைக்காரனுக்கு, ஆலயத்திற்கு வந்தவர்கள் சில்லரைகளை அளித்து சென்றது போல, பலரும் நமக்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் அவை மனிதர்களிடம் இருந்து வருவதால், தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே நமக்கு தருகிறது. அது நமக்கு நிரந்தரம் அல்ல.

அந்த சப்பாணி, பேதுருவின் உள்ளே இருந்த இயேசுவின் வல்லமையை பெற்ற போது, அவன் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. அவன் அப்புறம் தேவாலயத்திற்கு வெளியே அல்ல, குதித்து எழுந்து தேவனை துதிக் கொண்டே தேவாலயத்திற்குள்ளே சென்றான் என்று காண்கிறோம்.

இயேசுவின் வல்லமையை பெற, நாம் இயேசுவை நோக்கி பார்க்க வேண்டியுள்ளது. பேதுருவும், யோவானும் ஒரு காலத்தில் அந்த சப்பாணியை போலவே மற்றவர்களை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் இயேசுவோடு நடந்து, பேசி, பழகிய பிறகு பேதுரு உள்ளிட்ட சீஷர்களின் பழக்க வழக்கம், பேச்சு ஆகியவை இயேசுவை போலவே மாறிவிட்டது. இப்போது சீஷர்கள் மற்றவர்களை எதிர்பார்த்து இல்லை. தங்களை எதிர்பார்ப்பவர்களையும், இயேசுவை போல மாற்றுகிறார்களாக மாறிவிட்டார்கள். இந்த அனுபவத்தை தான் தேவன் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

எனவே நாமும் இயேசுவை மாற, தினமும் ஜெபத்தின் மூலம் தேவனோடு பேச வேண்டும். தேவ சித்தத்தின்படி நமது வார்த்தைகள், கிரியைகள் இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். பரிசுத்தாவியின் மூலம் கிடைக்கும் தேவ வல்லமைக்கும், ஐக்கியத்திற்கும் இடமளிக்க வேண்டும். அப்போது நமக்குள் இயேசு கிறிஸ்துவின் சுபாவங்கள் உருவாகும்.

பேதுருவையும், யோவானையும் போல நமக்குள் இயேசு கிறிஸ்துவின் வல்லமை இருக்குமானால், பல ஆவிக்குரிய சப்பாணிகளை உயிர்ப்பிக்க முடியும். நம்முள் இருக்கும் இயேசுவின் வல்லமையை அவர்களுக்கு நம் ஜெபத்தின் மூலமும், நமது சாட்சிகளின் மூலமும் அளித்து உயிர்ப்பிக்க முடியும். அதன்மூலம் பலரும் தேவ வல்லமையை அறிந்து கொள்வார்கள்.

எனவே இன்று முதல் நாம் தேவனுடைய கரங்களில் நம்மையே ஒப்புக் கொடுத்து, கிறிஸ்துவின் சுபாவத்தை தரித்துக் கொள்வோம்.

ஜெபம்:

அன்பான இயேசுவே, எங்களிடம் பேசிய உமது நல்ல வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். உமது சீஷர்களிடம் இருந்த அதே தேவ வல்லமையை நாங்களும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக, உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறோம். அதற்கு எங்களுக்கு உதவி செய்யும். உம்மைப் போல மாறி, உமது நாமத்தை எல்லா வகையிலும் மகிமைப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.