
அப்பொழுது தாவீது ராஜா… : கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
2 சாமுவேல்: 7.18
தகப்பனுடைய ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீதை அழைத்து, இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக வைத்தார் தேவன். ஆனால் தனது பழைய வாழ்க்கையோ, தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த தேவனையோ, அவர் மறக்கவில்லை.
ஒரு காலத்தில் காட்டில் இருந்து தேவனை துதித்து பாடிய தாவீது, ராஜாவாக மாறிய போதும், ஒரு பாடகனாகவே வாழ்க்கையை தொடர்ந்தார். பல சங்கீதங்களை எழுதினார். தேவனை துதித்து பாடும் சங்கீதக்காரர்களை ஏற்படுத்தினார்.
தாவீதை போல நாமும் ஒரு காலத்தில் யாருக்கும் வேண்டாதவர்களாகவும், கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் இருந்தோம். ஆனால் அப்போது தேவ சமூகத்தில் ஆனந்தமாக பாடி துதித்தோம்.
நம் எளிமையான நிலையை கண்ட தேவன், நெருக்கங்களில் இருந்து விடுவித்து, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார். ஆனால் இன்று நாம் எப்படி இருக்கிறோம்? கஷ்டமான நாட்களில் இருந்த அந்த ஜெபமும், துதியும் இன்றும் நம் வாழ்க்கையில் இருக்கிறதா?
இந்த கேள்வியை கேட்டால், நம்மில் பலருக்கும் வரும் பதில், நேரமில்லை பிரதர் என்பதே. உண்மை தான். தேவனுக்கு அளிக்க கூட நேரம் இல்லாமல் ஓடியாடி வேலை செய்கிறோம், சம்பாதிக்கிறோம். அப்படியே இவை எல்லாம் தந்தவர், தேவன் தான் என்பதை மறந்தும் விடுகிறோம்.
தாவீது முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவான போதும், தானும் தன் வீடும் எம்மாத்திரம்? என்று தன் பழைய நிலையை நினைத்து பார்க்கிறார். அவ்வப்போது, அதே சிந்தனை நமக்கும் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், தேவனை மறந்து இந்த உலகத்தோடு கலந்து ஓட துவங்கி விடுவோம்.
தாவீது தன் வாழ்க்கையின் அனுபவங்களை மகன் சாலொமோனுக்கு கூறினார். தாவீதின் மரணத்திற்கு பிறகு, துவக்கத்தில் சாலொமோனும் சரியாக தான் நடந்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல, தேவனை மறந்தார். அறிவும், ஆஸ்தியும் சேர்ந்து சாலொமோனை மதி மயங்க செய்தது. தேவனே இரு முறை தரிசனம் தந்து எச்சரித்தும், சாலொமோன் திருந்தவில்லை என்று வேதம் கூறுகிறது.
இந்த நிலை நமக்கு ஏற்படக்கூடாது. நம் தாழ்வில் நினைத்த தேவனை மறக்காமல், அவருக்கு முன்பாக உண்மையாக இருக்கும் போது, அவரும் நம்மை கைவிடாமல் இருப்பார். ஆனால் சாலொமோனை போல, நமக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களில் மதி மயங்கினால், நமக்கு நாமே அழிவை தேடி கொள்வோம்.
எனவே தாவீதை போல எப்போதும் தேவனுக்கு முன்பாக உண்மையாக இருப்போம். தேவன் நடத்தி வந்த பாதைகளை நினைத்து எப்போதும் நன்றியுள்ள இருதயத்துடன் துதிப்போம். தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை அவருக்கு செலுத்துவோம். அப்போது நம் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதங்களும் நன்மையும் தொடரும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற ஆண்டவரே, தாவீது மூலமாக எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். தாவீதை போல, எங்களை நீர் நடத்தி வந்த பாதைகளை மறக்காமல், எப்போதும் நன்றியுள்ள இருதயத்தோடு வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.