
பரிசுத்தாவியில் நிரம்பும் போது, பேசப்படும் அந்நிய பாஷை புரிவதில்லையே ஏன்? அதன் பின்னணி என்ன? புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பல பழைய விசுவாசிகளுக்கும் உள்ள ஒரு நீண்டநாள் சந்தேகம் இது.
கேட்டது:
சமீபத்தில் ஒரு தேவ ஊழியரோடு பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஊழியத்திற்கு வந்த சூழ்நிலை குறித்து கூறினார். தனது இளம் வயதிலேயே ஊழியத்திற்கு வர வேண்டும் என்ற விருப்பத்தோடு ஒரு ஸ்தாபனத்திற்கு சென்று கேட்டதாகவும், அங்கு அவரை ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.
இதற்கு காரணமாக, அவர் ஜெப நேரத்தில் ஆவியில் நிரம்பிய போது, பேசிய அந்நிய பாஷை சரியில்லை என்று கூறியுள்ளனர். இதில் மிகவும் மனமுடைந்த அவர், ஊழியத்திற்கு போக வேண்டும் என்ற விருப்பத்தை இழந்து சோர்ந்து போயுள்ளார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகள் மீண்டும் தேவனால் உணர்த்தப்பட்டு தன் ஊழிய அழைப்பை உறுதி செய்து, தற்போது ஊழியம் செய்து வருவதாக கூறினார். நீங்கள் பேசிய அந்நிய பாஷை இப்போது சரியாக உள்ளதா என்று கேட்டதற்கு, அவரிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ஊழியத்திற்கு வர, அந்நிய பாஷை சரியில்லை என்பது ஒரு காரணமா என்று கேட்டதற்கு, அதுவும் புரியாத புதிர் தான் என்று பதில் கூறினார்.
அந்த ஊழியரை போல, அந்நிய பாஷை குறித்து கேட்டால், பலரிடமும் ஒரு தெளிவான பதில் இல்லை. ஏனெனில் அது புரிந்தால் தானே, அதற்கு விளக்கம் தர முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. இது குறித்து வேதம் என்ன குறிப்பிடுகிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது என தோன்றியது.
சிந்தித்தது:
அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஆவிக்குரிய ரகசியங்களை பேசுவதாகவும், பேசுகிற நபர் தேவனோடு பேசுவதாகவும் 1 கொரிந்தியர் 14.2 வசனத்தில் காண்கிறோம். அதை மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாது என்றும் அதே வசனம் கூறுகிறது. அதே அதிகாரத்தின் 4வது வசனத்தில், அந்நிய பாஷை பேசினால் பக்தி விருத்தி உண்டாகும் என்று காண்கிறோம்.
அப்படியானால், ஒருவர் கூறும் அந்நிய பாஷை சரியானது அல்லது தவறானது என்று நாம் எப்படி கூற முடியும்? அது தேவனோடு உள்ள அவர்களின் உறவை பொறுத்தது. தேவனோடு ஒரு மனிதன் பேசும் போது, இருவருக்கும் இடையே பல ரகசியங்கள் பரிமாறப்படுகின்றன.
அதை 3வது நபரால் அறிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிய வேண்டுமானால் தேவனால் வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கு வியாக்கியானம் செய்யும் வரம் பெற்றிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் காணும் கனவை போன்றது. அதை. வேறொரு நபர் கேட்டு அறியலாமே தவிர, அதை அப்படியே பார்க்க முடியாது. கனவை கேட்டு அர்த்தம் சொல்ல முடியும். ஆனால் இதில் யோசேப்பு, தானியேல் போன்ற நபர்களுக்கு தேவன் பிறரின் கனவை வெளிப்படுத்தி தருகிறார் என்பது விதிவிலக்கு.
அப்போஸ்தலர்: 2.8 வசனத்தில் ஆதி திருச்சபையின் மக்கள், பரிசுத்தாவியில் நிரம்பி அந்நிய பாஷையில் பேசியதை கேட்ட பலரும், நம் ஜென்ம பாஷையில் பேசுவதை கேட்கிறோமே என்று கூறுகிறார். அதாவது தேவன், அவர்களுக்கு வெளிப்படுத்தி தருகிறார். அதன்மூலம் வேறு பாஷை பேசிய மக்கள் இரட்சிக்கப்பட்டார்களே தவிர, அவர்கள் பேசுவதை தவறாக கூறவில்லை.
எடுத்துக்காட்டாக, அந்நிய பாஷையில் பேசும் போது, ஒருவர் தமிழில் பேசுகிறார் என்று வைத்து கொண்டால், அந்த பேச்சை இந்தியில் பேசும் வேறொருவர் தவறு என்று கூறினால், அதை எப்படி ஏற்க முடியும்?
அந்நிய பாஷை குறித்த தெளிவு இல்லாத பலரும், மற்றவர்கள் பேசும் அந்நிய பாஷையை கிண்டல் செய்யும் அவலமும் உள்ளது. இதுவும் தவறு. அவர் தேவனோடு என்ன பேசினார் என அறியாமல், கிண்டல் செய்தால், அது தேவனையே கிண்டல் செய்வது போலாகிவிடும்.
சிலர் அந்நிய பாஷை பேச கற்றுத் தருகிறோம் என்று கூட ஊழியங்களை நடத்துவதாக விளம்பரங்களைப் பார்த்திருக்கிறேன். மேற்கண்ட விளக்கத்திற்கு பிறகு, அது உண்மையில் சாத்தியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
எனவே, அந்நிய பாஷையில் பேசுவது என்பது, தேவனோடு பேசும் ஒரு ரகசிய பாஷையாக உள்ளது. அது ஒவ்வொருக்கும் வேறுபடும். அதை கற்றுக் கொள்ளவோ, அதை பயன்படுத்தி பேசவோ முடியாது. அந்நிய பாஷை பேசும் போது, பல ரகசியங்கள் பேசப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள தேவன் உதவினால் மட்டுமே முடியும்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.