0 1 min 11 mths

நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? ஆதியாகமம்: 18.18

நமது குடும்பம், சபை, சொந்தக்காரர்கள் ஆகியவற்றை கடந்து, நாம் இருக்கும் ஊருக்காகவும், நாட்டிற்காகவும் ஜெபிக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. அதற்காக நாங்கள் ஏற்கனவே ஜெபித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்று சிலர் கூறுவது கேட்கிறது.

இருந்தாலும் நாம் இருக்கும் ஊரில் பல அழிவுகள் நடக்க தான் செய்கின்றன. அதில் சில காரியங்கள் நமக்கு தெரிவதே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் தியான வசனத்தில் தேவன் கூறும் காரியத்தைப் பாருங்கள்.

ஆபிரகாமிடம் இருந்து பிரிந்து போன லோத் வசிக்கும் சோதோம், கொமோரா பட்டணங்களின் பாவத்தை கண்டு கோபமடையும் தேவன், அதை அழிக்க திட்டமிடுகிறார். ஆனால் அதை ஆபிரகாமிற்கு கூறாமல் எப்படி செய்வது என்று யோசிக்கிறார்!

அதாவது நாம் செய்யப் போகும் ஒரு காரியத்தை, மிகவும் அன்பு செலுத்தும் ஒரு நபரிடம் கூற துடிப்பது போல. அந்த அளவிற்கு ஆபிரகாமிற்கு, தேவனோடு உள்ள உறவு இருந்துள்ளது.

ஆதியாகமம்:18.21-ல் அந்த ஊர்களின் அழிவைக் குறித்து அறிவித்த பிறகு, இரண்டு தூதர்கள் சோதோமை நோக்கி சென்ற போதும், ஆபிரகாம் கர்த்தருடைய சந்நிதியில் இருந்து போகவில்லை என்று காண்கிறோம். இதில் இருந்து தேவனோடு உள்ள ஐக்கியத்தில் இருந்து விலக ஆபிரகாம் விரும்பவில்லை என்று அறியலாம்.

அப்படிப்பட்ட நிலையில் தான், சோதோமை அழிக்காமல் இருக்க, ஆபிரகாம் தேவனிடம் பரிந்து பேசுகிறார். 50 பேரில் இருந்து ஆரம்பித்து, கடைசியாக 10 பேர் இருந்தால் அழிக்கமாட்டேன் என்று தேவன் கூறிய போதும், அந்த ஊரில் 10 நீதிமான்களைக் கூட இருக்கவில்லை.

ஆபிரகாமிடம் இருந்த இந்தத் தன்மையைத் தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று கடமைக்காக ஜெபிக்காமல், தேவ சமூகத்தில் நாம் காத்திருந்தால், நாம் இருக்கும் தேசத்தில் நிகழ உள்ள அழிவுகள், நியாயத்தீர்ப்புகள் குறித்து நமக்கு வெளிப்படுத்துவார்.

ஆதியாகமம்:18.19-ல் கர்த்தருடைய வழியைக் குறித்து, பின்வரும் சந்ததிக்கு ஆபிரகாம் உபதேசம் செய்வார் என்ற மற்றொரு ஆபிரகாமின் சிறப்பு குறித்து தேவன் குறிப்பிடுகிறார்.

தேசத்தில் தேவனுடைய திட்டங்களைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால், நம் மீதும் இது போன்ற நம்பிக்கை தேவனுக்கு உண்டாக வேண்டும். நமது செயல்பாடுகள், எண்ணங்கள், நடவடிக்கைகள் ஆகியவை, தேவனுக்கு நம்பிக்கை அளிப்பவையாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவன் நம்மோடு பேசுவார்.

கடமைக்காக ஜெபிப்பதை விட, அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்று தேவனால் வெளிப்படுத்துதலைப் பெற்று, அதற்காக பரிந்து பேசுவது சிறப்பாக அமையும் அல்லவா? தேவனிடம் இருந்து அழிவின் செய்தியை அறிந்த ஆபிரகாம், சோதோமில் உள்ள லோத்தின் குடும்பத்திற்கோ அல்லது தனது ஊர்க்காரர்களுக்கோ அறிவிக்கவில்லை.

ஏனெனில் அதனால் எந்த பிரயோஜனமும் உண்டாகப் போவதில்லை என்பதை ஆபிரகாம் நன்றாக அறிந்து வைத்திருந்தார். எனவே அந்த அழிவைத் தடுக்க வல்லமை உள்ள தேவனிடம் மட்டும் பரிந்து பேசுகிறார்.

ஆனால் இன்று பலரும், தேவன் வெளிப்படுத்திய காரியங்களை எல்லாருக்கும் அறிவித்து, தாங்கள் பெரிய தீர்க்கத்தரிசிகள் என்று காட்ட விரும்புகிறார்கள். அதற்கு பதிலாக, தேவ சமூகத்தில் காத்திருந்து, அந்த அழிவை தடுத்து நிறுத்த பரிந்து பேச வேண்டியுள்ளது. அப்போது தான் தேவனுக்கு நாம் நம்பிக்கைக்குரிய பாத்திரங்களாக மாற முடியும்.

எனவே தேவ சமூகத்தில் ஜெபத்தின் மூலம் முதலில் காத்திருக்க பழகுவோம். நம்மைச் சார்ந்த மக்களைத் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக நிறுத்தும் வகையில், மாதிரியான வாழ்க்கையை வாழ்வோம். அப்போது தேவனுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரங்களாக நாம் மாறுவோம். தேசத்தின் காரியங்களைத் தேவன் வெளிப்படுத்தும் போது, அதற்காக மறக்காமல், யோசிக்காமல் பரிந்து பேசி ஜெபிப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள பிதாவே, ஆபிரகாமைப் போல நாங்களும் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாற உதவி செய்யும். நாங்கள் வாழும் தேசத்தின் காரியங்களை உம்மிடம் இருந்து அறிந்து கொண்டு, அதற்காக பரிந்து பேசுபவர்களாக எங்களை மாற்றும். தேசத்தில் எழும்பி பிரகாசிக்கும் விளக்குகளாக திகழ கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *