0 1 min 3 weeks

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உண்டாக்கின மனுஷனை அதிலே வைத்தார். ஆதியாகமம்:2.8

நாம் வாழும் இந்த பூமியை தேவன் வரிசையாக படைத்ததாக, வேதம் நமக்கு உரைக்கிறது. முதல் நாளில் வானத்தையும் பூமியையும் படைத்த தேவன், இரண்டாம் நாளில் அதில் உள்ள தண்ணீரை இரண்டாக பிரிக்கிறார். 3வது நாளில் பூமிக்கு தேவையான வெளிச்சத்தை உருவாக்குகிறார்.

4வது நாளில் வெளிச்சத்தை வைத்து வளரும் செடி, கொடி, மரங்களை உருவாக்குகிறார். கடலில் மீன்களை உருவாக்குகிறார். 5வது நாளில் அதை உண்ணும் பறவைகளையும், விலங்குகளையும் உருவாக்குகிறார். 6வது நாளில் இதையெல்லாம் பார்த்து கொள்ளவும், பராமரிக்கவும் கூடிய மனிதனை உண்டாக்குகிறார்.

இப்படி எந்தொரு காரியத்தையும் தேவன், முன்கூட்டியே செய்து விட்டு தான், அதை பயன்படுத்தும் நபரை, அந்த இடத்தில் உருவாக்குகிறார். மேலும் எதையும் அவசரகதியில் உருவாக்குவதோ, பின்னர் அதை மாற்றியமைப்பதோ தேவனுடைய செயல்பாடுகளில் காண முடிவதில்லை.

நம் வாழ்க்கையில் கூட பல சந்தர்ப்பங்களில், கஷ்டமான பாதைகளின் வழியாக செல்லும் போது, தேவனால் கைவிடப்பட்டதாக உணர்கிறோம். மேலும் எதற்காக இந்த மாதிரியான சூழ்நிலையை தேவன் அனுமதிக்கிறார்? அவர் என்னை மறந்துவிட்டாரோ என்று கூட யோசிக்கிறோம்.

ஆனால் நாம் கடந்து செல்லும் கஷ்டமான பாதைக்கு வந்து சேரும் முன்னமே, அதன் தேவையையும் அதற்கான தீர்வையும் தேவன் முன்கூட்டியே செய்து வைத்திருப்பார். நம்மால் அதை உணர முடியாவிட்டாலும், அவர் சகலத்தையும் நன்றாக செய்கிறவர். தான் படைத்த எல்லாவற்றையும் கண்டு, அது நல்லது என்று கூறுவதாக வேதம் கூறுகிறது.

எனவே நம் வாழ்க்கையில் வரும் சில கடினமான பாதைகள், நமக்கு கெட்டதாக தோன்றலாம். ஆனால் தேவனுடைய பார்வையில், அது வேறு திட்டத்திற்கான பாதையாக உள்ளது. அது நன்மையான காரியமாக உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் தேவைகளை குறித்து தேவனிடம் கேட்கும் முன்னமே, அவர் அதை அறிவார். அதையெல்லாம் ஆயத்தம் செய்து வைத்திருப்பார் என்று தான் கூற வேண்டும். நாம் ஆராதிக்கும் தேவன், எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள்.

சில நேரங்களில், நாம் சரியான பாதையில் செல்கிறோமா? என்று அறிய அவர் தன்னை மறைத்து கொள்வது உண்மை தான். ஆனால் நம்மை கைவிடுகிறவரோ, நடுவழியில் தவிக்க விட்டு செல்கிறவரோ அல்ல.

நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவராக, தமது நோக்கத்தை முற்றிலும் நம்மில் நிறைவேற்றுவார். அதற்கு அவர் வல்லமையுள்ளவராகவும், நீடிய பொறுமையுள்ளவராக உள்ளார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்களை உருவாக்கும் முன்னே, எங்களுக்கான எல்லா தேவைகளையும் நீர் அறிந்து அதை செய்து முடித்திருக்கிறீர் என்று பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எதை குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் உமக்கு ஸ்தோத்திரத்தோட தெரிவித்து, சமாதானமாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *