
அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். ஆதியாகமம்:40.8
எந்த தவறும் செய்யாமல் சிறைச்சாலைக்கு செல்லும் யோசேப்பு, தன்னிடம் கனவு கண்டதாக கூறும் இருவருக்கு இப்படி பதில் கூறுவதை நாம் காண முடிகிறது.
அதை கேட்ட பார்வோன் ராஜாவின் வேலைக்காரர்களான பானபாத்திரக்காரின் தலைவனும், சுயம்பாகிகளின் தலைவனும் தாங்கள் கண்ட கனவுகளை கூறி, அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்கிறார்கள்.
நாமும் அவ்வப்போது பல கனவுகளை காண்கிறோம். அதில் பெரும்பாலான கனவுகளுக்கு அர்த்தம் என்ன என்று தெரிவதில்லை. சில கனவுகள் நம்மை சந்தோஷப்படுத்துவதாகவும், சில கனவுகள் நமக்கு சோகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. சில கனவுகள் குழப்பத்தை கூட தருகின்றன.
யோசேப்பிடம் கனவு கூறும் வரை, அதற்கு என்ன அர்த்தமோ? என்று இருவருக்கும் குழப்பமும் மனபாரமும் இருந்தது. ஆனால் அதன் விளக்கத்தை அறிந்த பிறகு, ஒருவருக்கு சந்தோஷமும், மற்றொருவருக்கு துக்கமும் ஏற்படுகிறது. ஆனால் கனவின் நிறைவேறுதலாக, இருவரும் பார்வோன் மூலம் மற்றவர்களின் முன் உயர்த்தப்படுகிறார்கள்.
நாம் காணும் கனவுகளின் மூலம் தேவன் எதிர்கால காரியங்களை நமக்கு வெளிப்படுத்தலாம். சில கனவுகளின் நிறைவேறுதல் பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும். தன் தகப்பன் வீட்டில் யோசேப்பு கண்ட கனவுகளைப் போல. பார்வோனின் அதிகாரிகள் கண்ட கனவுகளைப் போல, சில கனவுகள் மிக குறுகிய நாட்களிலேயே நிறைவேறலாம்.
யோசேப்புக்கு கனவுகளின் அர்த்தத்தை கூறும் ஞானம் இல்லாமல் இருந்திருந்தால், அதிகாரிகளின் கனவுகளை கேட்டு, அவனும் குழப்பம் அடைந்திருப்பான். மேலும் கனவுகளுக்கு யோசேப்பு மனதில் தோன்றிய ஏதாவது கற்பனையான காரியங்களைக் கூறியிருந்தாலும், அது தவறாக போய் இருக்கும்.
எனவே நாம் காணும் கனவுகளால் நமக்கு குழப்பமும் சந்தேகமும் ஏற்பட்டால், உடனே தேவ சமூகத்தில் ஜெபிக்க வேண்டும். நாமாக ஏதாவது காரியங்களை யோசித்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, மற்றவர்களையும் சேர்த்து குழப்பக் கூடாது. வாழ்க்கையில் ஏதாவது மோசமான காரியங்கள் நடந்தால், உடனே தேவன் எனக்கு முன்னமே காட்டிவிட்டார் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கேன்.
ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் பல தவறான முடிவுகளை எடுத்து கொண்டு பிற்காலத்தில் வருத்தப்படுவதை பார்த்திருக்கேன். மேலும் நான் இப்படி கனவு கண்டால், அப்படி தான் நடக்கும் என்று தாங்களாக ஏதாவது யோசித்து கூறுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி கூறும் பலரும் நல்ல காரியங்கள் நடக்கும் போது, அப்படி எதுவும் கூறுவதும் இல்லை, யோசிப்பதும் இல்லை.
தேவன் தீமையான காரியங்களை மட்டுமல்ல, நன்மையான காரியங்களையும் கனவுகள் மூலமாக காட்ட கூடியவர். எனவே நம் கனவுகளுக்கு நாமாக ஏதாவது அர்த்தத்தை எடுத்து கொள்வது சரியான முடிவு அல்ல.
யோசேப்பு கூறுவது போல, கனவுகளின் அர்த்தத்தை கூறுவது தேவனுக்கு உரியது. அவரிடம் நாம் ஜெபத்தில் கேட்கும் போது, அதன் அர்த்தத்தை அவர் தெளிவாக உணர்த்துவார்.
ஒரு கட்டத்தில் யோசேப்பும் சிறு வயதில் நம்மை போல, அவன் கண்ட கனவுகளின் அர்த்தத்தை அறியாமல், சகோதர்களிடமும் பெற்றோரிடமும் கூறினான். அவர்கள் மூலம் அதன் விளக்கத்தை அறிந்து கொண்டான். ஆனால் அதற்காக அவனை வெறுத்த சகோதரர்கள், கொலை செய்ய கூட திட்டமிட்டார்கள்.
எனவே நாம் காணும் கனவுகளின் அர்த்தத்தை அறிய ஊழியர்களிடமும், நமக்கு தெரிந்தவர்களிடமும் ஓடாமல், அதன் அர்த்தத்தை தேவனிடம் ஜெபத்தில் கேட்டு அறிந்து கொள்வோம். அப்போது யோசேப்போடு தேவன் இருந்தது போல, நம்மோடும் இருப்பார்.
சிறைச்சாலைக்கு வந்த போது, யோசேப்போடு தேவன் இருந்தார். இதனால் மற்றவர்களின் கனவுகளுக்கு அர்த்தம் கூறும் ஞானத்தை பெற்றான். இதேபோல, தேவன் நடத்தும் பாதை கஷ்டமாகவோ, நெருக்கமாகவோ இருந்தாலும், அதில் நாம் அமைதியாகவும் பொறுமையாகவும் ஒப்புக் கொடுத்து வாழும் போது, நம் எதிர்காலத்தை குறித்த காரியங்களை மட்டுமன்றி, மற்றவர்களின் காரியங்களையும் தேவன் நமக்கு வெளிப்படுத்துவார்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் பரலோக பிதாவே, எங்களின் எதிர்கால காரியங்களை நீர் கனவுகள் மூலமாகவும் வெளிப்படுத்தி தருகிறீர் என்று பேசியதற்காக ஸ்தோத்திரம். அதற்கான அர்த்தத்தை உம்மிடம் ஜெபத்தில் கேட்டு அறிந்து கொண்டு, அதற்கேற்ப வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.