0 1 min 1 mth

நம் நாட்டில் சுவிசேஷம் கூறுவதை விரும்பாத பலரும் கூறும் ஒரு கூற்று, ஆங்கிலேயரின் கடவுள் எங்களுக்கு தேவையில்லை என்பார்கள். இதை கேட்கும் பல கிறிஸ்தவர்கள் கூட அதை உண்மை என்றே நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கான கடல் வழியை கண்டறியும் முன்பே, கிறிஸ்துவம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தது என்று பல வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

படித்தது:

குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன், தமிழக வரலாற்றை குறித்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதில் தமிழகத்தில் கிறிஸ்துவம் பரவியது குறித்த சில உண்மைகளை படிக்க முடிந்தது. வரலாற்று உண்மைகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இது பயன்படும் என்று எண்ணி, அந்நூலில் வாசித்த சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கூற விரும்புகிறேன்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பே, தமிழகத்திற்கும் – இஸ்ரவேலுக்கும் இடையே வாணிகத் தொடர்பு இருந்துள்ளது. இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனின் நாட்களில், தங்கமும், குரங்கும், மயிலும், யானை தந்தமும், கப்பல்களில் தமிழகத்தில் இருந்து இஸ்ரவேலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளும், பைபிளிலும் (2 நாளாகமம்:9.21) உள்ளன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிந்து கணித்த 3 ஞானிகளில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பிறகு, ரோமர்களின் கொடூர ஆட்சியில் சிதறிய சீஷர்கள், பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். அவர்களில் ஒருவர் சந்தேகத்திற்கு பெயர்பெற்ற புனித தோமா. இவர் இந்தியாவில் கட்டப்பட்டு வந்த சில ராஜ அரண்மனைகளின் மரம் மற்றும் கட்டிட பணியில் ஈடுபட வந்தவர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியாவில் வேலை செய்துக் கொண்டே, தனது குரு இயேசுவை குறித்தும், அவர் மனித குலத்திற்காக பட்ட பாடுகளை குறித்தும், ஆங்காங்கே பிரசங்கித்துள்ளார். இதனிடையே இயேசுவின் நாமத்தில் பல அற்புதங்களையும் செய்துள்ளார்.

இவருக்கு முன்னதாகவே, தமிழகத்தில் இருந்து இஸ்ரவேல் நாட்டிற்கு வியாபாரத்திற்காக சென்ற பலரும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தை குறித்தும், அந்த நேரத்தில் அங்கு நடந்த விசித்திரமான காரியங்களை குறித்தும் கேள்விப்பட்டுள்ளனர்.

இவர்களில் நாடு திரும்பிய பலரும், அதை குறித்து ஆங்காங்கே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புனித தோமாவின் ஊழியத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஒளியேறியது. புனித தோமாவின் மரணத்திற்கு பிறகும், அவர் மூலம் இரட்சிப்பை அடைந்தவர்கள் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவை அறிவித்து வந்துள்ளனர்.

பல தலைமுறைகள் மாறினாலும், ஒரு கூட்டம் மரணத்திற்கு பயப்படாமல் கிறிஸ்துவிற்காக நிமிர்ந்து நின்று ஊழியம் செய்துள்ளது. இதன் பலனாக தான் இன்று நம்மில் பலரும், இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து இரட்சிப்பை பெற்றுள்ளோம்.

இந்த தலைமுறையை சேர்ந்த நமது இரட்சிப்பிற்கு பின்னால், எத்தனையோ போதகர்கள் மற்றும் மக்களின் உயிர் தியாகம் மறைந்து நிற்கிறது. இந்நிலையில் ஐரோப்பியாவில் இருந்து இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வந்து, நாட்டின் செல்வத்தையும், பொருட்களையும் கொள்ளையடித்து சென்ற ஆங்கிலேயர்களுக்கு அந்த புகழையும், கீர்த்தியையும் கொடுப்பது என்ன நியாயம்?

இன்னும் சரியாக கூறினால், இந்தியாவிலேயே முதலில் அச்சிட்ட அச்சு பிரதியான தமிழ் பைபிளை அச்சிட உதவியது கூட போர்ச்சுக்கல் நாட்டினர் தான். முதல் தமிழ் பைபிள் போர்ச்சுக்கல் நாட்டில் அச்சிடப்பட்டாலும், அதன்பிற்கு அச்சு இயந்திரத்தை மிகுந்த சிரமப்பட்டு ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து பைபிளை அச்சிட்டனர்.

தமிழகத்தில் சிரமத்துடன் ஊழியம் செய்த சீகன்பால்கின் வரலாற்றை படித்தால், இது குறித்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆனால் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, பைபிளை அச்சிட்டவர்களுக்கு பெரும் தொல்லைகளை ஆங்கிலேய அரசு அளித்ததாக, வரலாற்று பக்கங்களில் சில கசப்பான உண்மைகள் மறைந்துள்ளது.

சிந்தித்தது:

எனவே இயேசு கிறிஸ்துவை, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. மேலும் இயேசுவும் ஒரு ஆங்கிலேயர் அல்ல. ஆங்கிலேயர்களின் சொந்த நாடான இங்கிலாந்து இருப்பது ஐரோப்பிய கண்டம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த இஸ்ரவேல் நாடு இருப்பதோ, ஆசிய கண்டம்.

பெயருக்கு கிறிஸ்தவர்களாக வாழ்ந்த ஆங்கிலேயர்களில், பெரும்பாலானோரிடம் கிறிஸ்துவில் இருந்த எந்த ஒரு பண்புகளும் இருக்கவில்லை என வரலாறு கூறுகிறது.
இதனால் தான், மகாத்மா காந்தி கூட, நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் எந்த தன்மைகளும் இல்லாத கிறிஸ்தவர்களை (ஆங்கிலேயர்) வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனவே நமது நாட்டிற்கு இயேசுவை அறிமுகம் செய்ததில், புனித தோமா முதல் பல இரத்தச் சாட்சிகளுக்கு பங்கு உண்டே தவிர, ஆங்கிலேயருக்கு தொடர்பு இல்லை. இந்த வரலாற்று செய்திகளின் மூலம், நமது இரட்சிப்பிற்காக பலரும் இரத்தச் சாட்சிகளாக மரித்துள்ளார்கள் என்று தற்போது அறிந்துள்ள நாம், இயேசுவிற்காக இனி என்ன செய்ய போகிறோம்? என்ற கேள்வி நம் முன் நிற்கிறது?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *