0 1 min 1 mth

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் எருசலேமிற்கு சமீபமாக வந்த போது, 2 சீஷர்களை அழைத்து, ஒரு கழுதையை அழைத்து கொண்டு வர சில குறிப்புகளைக் கூறுகிறார்.

இயேசுவின் குறிப்புகளை வைத்து, குட்டி உடன் கட்டப்பட்டிருந்த கழுதையை கண்டுபிடிக்கும் சீஷர்கள், அவற்றை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். கழுதையின் மீது துணிகளை விரித்து, அதன் மேல் இயேசு அமர்ந்து பயணிக்கிறார்.

அவர் செல்லும் பாதையில் இருந்த மக்கள், இயேசுவின் வருகையை கண்டு தங்களின் துணிகளையும், மரக்கிளைகளையும் வழியில் விரித்து வரவேற்கிறார்கள். மேலும் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று வாழ்த்துகிறார்கள்.

இந்த காட்சியை கண்ட சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், அதற்கு இயேசு பதில் அளிக்கிறார். இதனால் மக்கள் தொடர்ந்து இயேசுவை வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படியே தேவாலயத்திற்கு செல்லும் இயேசு, அங்கிருந்த தேவையில்லாத காரியங்களை அகற்றுகிறார்.

இந்நிலையில் இயேசு பயணித்த கழுதைக்கும் அதன் குட்டிக்கும் ஒரு வித்தியாசமான யோசனை ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை.

மாத்தி யோசி:

இந்த சம்பவங்களுக்கு பிறகு, இயேசு பயணித்த கழுதையும் அதன் குட்டியும் சீஷர்களால் அப்படியே விடப்படுகின்றன. வந்த வழியை மறக்காத இரண்டும், தாங்கள் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து அடைகின்றன. எப்படியோ பழைய இடத்தை அடைந்துவிட்டோம் என்று எண்ணி மகிழ்கின்றன.

தனது வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான நாளை பார்த்ததாகவும், இது போன்ற ஒரு நாள் மீண்டும் வருமா என்று தெரியவில்லை என கூறியவாறு, இரண்டும் தூங்கி விடுகின்றன.

அடுத்த நாள் காலையிலும், நேற்று கட்டவிழ்த்த அந்த இரண்டு பேர் வருவார்களா? என காத்திருந்தன. ஆனால் யாரும் வரவில்லை. வழக்கம் போல அந்த நாள் முழுவதும் சாதாரணமாக போனது. இரவில் கழுதையும் அதன் குட்டியும் பேசி கொண்டன.

நமக்கு இருக்கும் மரியாதை பற்றி நமக்கு சரியாக தெரியவில்லை. இதனால் தான் ஒரே இடத்தில் இப்படி கிடந்து கஷ்டப்படுகிறோம் என்றது குட்டி. என்ன சொல்கிறாய்? எனக்கு எதுவும் புரியவில்லை என்றது கழுதை.

அதற்கு கழுதை குட்டி, நம்மை ஒரே இடத்தில் கட்டி வைத்து பழக்கிவிட்டார்கள். இதனால் மக்கள் நம் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு பேர் வந்து நம்மை அவிழ்த்து அழைத்து சென்றார்கள்.

அப்போது நம்மை பார்த்த ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்து, நாம் நடக்க வழிகளில் துணிகளையும் மரக்கிளைகளும் போட்டார்கள். நமக்கு எல்லா மரியாதையும் கிடைப்பதை பார்த்து நம் மீது ஒருவர் அமர்ந்து சவாரியும் செய்தார் என்று பெருமையாக கூறியது.

ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இப்படி ஒரு மரியாதை எனக்கு கிடைக்கவில்லை. நம் இனத்தவர்கள் யாரும் கூறி கேட்டதும் இல்லை என்றது தாய் கழுதை.

ஏனெனில் நீங்கள் யாரும் இதை பற்றி சிந்திக்கவும் இல்லை. உணரவும் இல்லை. என்றாவது நீங்கள் வளர்ந்த இடத்தை விட்டு வெளியே போயிருக்கிறீர்களா? என்று கேட்டது குட்டி.

சிந்திக்க ஆரம்பித்த தாய் கழுதை, உண்மை தான். நாங்கள் எங்கு வளர்ந்தோமோ, அங்கேயே இருப்போம். எஜமான்களுக்கு சுமை சுமக்க மட்டுமே உதவுவோம் என்றது.
அந்த பழமைவாத சிந்தனை எல்லாம் மாற்றிவிட்டு, இனி நமக்கு வரும் மரியாதையை நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்றது குட்டி. குட்டியின் இந்த யோசனைக்கு அம்மா கழுதையும் சம்மதித்தது.

அடுத்த நாள் காலையில் எழுந்த இரண்டும், இயேசுவின் சீஷர்கள் அழைத்து சென்ற பாதையில் நடந்து சென்றார்கள். வழியில் பார்த்த சில சிறுவர்கள் கழுதைகளை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் கழுதைகள் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து நடந்தன.

ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதி வழியில் செல்ல ஆரம்பித்த கழுதைகளை, அங்கிருந்த சிலர் ஹேய் ஹேய்… என்று கைகளை தூக்கி காட்டி துரத்தினார்கள். சற்று பயந்த தாய் கழுதை, வழியை விட்டு விலகி ஓரமாக சென்றது.

அப்படி நடந்து தேவாலயத்தையொட்டிய பகுதியின் வழியாக கழுதைகள் செல்ல முயன்றன. அங்கு தங்களுக்கு மக்கள் துணிகளை விரித்து ராஜ மரியாதை தருவார்கள் என்று இரண்டும் நினைத்தன. ஆனால் கழுதைகளை கண்ட அங்கிருந்த சிலர், கற்களை எடுத்து எறிந்தார்கள். சிலர் அடிக்க கட்டைகளுடன் வந்தார்கள்.

அதில் சில கற்கள் கழுதைகளின் மீது விழ, காயமடைந்த இரண்டும் மேற்கொண்டு அந்த வழியாக நடக்க முடியாது என்று தெரிந்து, வந்த வழியாக திரும்பி ஓடின. ஆனாலும் சிலர் துரத்தி கொண்டே ஓடி வந்தார்கள்.

எப்படியோ ஒரு வழியாக, ஆள்நடமாட்டம் குறைந்த ஒரு தோட்டத்தை அடைந்த இரண்டும் இன்று மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று ஆச்சரியப்பட்டன. அப்போது அவ்வழியாக சென்ற இருவர் பேசிக் கொண்டு போவது காதில் விழுந்தன.

இரண்டு நாட்களுக்கு முன் இந்த மக்கள் ராஜ மரியாதை அளித்த ஒருவருக்கு, இன்று மரண தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்துடன் கோட்டைக்கு அழைத்து செல்கிறார்கள். அவரிடம் எந்த தப்பும் காணவில்லை என்று பிலாத்தும் கூறிவிட்டார்கள் என்று பேசி கொண்டு போனார்கள்.

கழுதைகள் ஒரு மரத்தடியில் காயத்துடன் படுத்திருந்த போது, அவ்வழியாக செல்லும் மக்களின் கூட்டம் அதிகமானது. ஒருவர் சிலுவை ஒன்றை தூக்கி கொண்டு வர, போர் சேவகர்கள் அடித்து கொண்டே வந்தார்கள்.

சிலுவை தூக்கி கொண்டு வரும் மனிதரை உற்று கவனித்த போது, தன் மீது பயணித்த மனிதன் அவர் தான் என்பதும், சற்று முன் இருவர் பேசி கொண்டு போனது இவரை பற்றி தான் என்பதும் தாய் கழுதைக்கு புரிந்தது. அப்போது தனது குட்டிக்கு நடந்த சம்பவங்களை தெரிவுப்படுத்தியது கழுதை.

இந்த ஊர் மக்கள் நம்மையோ, நம் அழகையோ பார்த்து நமக்கு மரியாதை தரவில்லை. நம்மை உயர்த்தி வைத்து கொண்டாடவில்லை. மாறாக, நம் மீது அமர்ந்து வந்த அந்த மனிதரை தான் கொண்டாடினார்கள். அவரால் தான் நாம் மரியாதை பெற்றோம்.

நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த போதும், தனது ஆட்களை அனுப்பி அழைத்து வர சொன்னார். மேலும் வாழ்நாளில் நமக்கு கிடைக்காத எல்லாவற்றையும் பெற்று தந்தார். இவ்வளவும் தந்த அவரை மறந்து விட்டு, அவர் இல்லாமல் நாம் தனியாக போனால், ஊர் மக்கள் நம்மை எப்படி மதிப்பார்கள்? அடித்து கொல்லாமல் விட்டது நம் பாக்கியம் என்றது தாய் கழுதை.

கருத்து:

இயேசு இல்லாமல் தனியாக போன கழுதைகளைப் போன்ற நிலை நமக்கு ஏற்படக் கூடாது. நாம் செய்யும் எந்தொரு ஊழியத்திலும் இயேசு இல்லாமல் போக கூடாது. அது நமக்கு பெரிய அவமானத்தையும் வருத்தத்தையும் மட்டுமே பெற்று தரும். ஆனால் நம்மோடு, நமக்குள் இயேசு இருக்கும் போது நாம் கை வைக்கும் எல்லாவற்றிலும் எதிர்பாராத வெற்றியும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *