
இன்றைய உலகில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை லவ், அதாவது காதல். இதற்கு வயது வித்தியாசம் கூட கிடையாது என்று உலக மக்கள் கூறுகிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்ற பெயரில் கொண்டாடும் பலரும், தங்களின் மனதை கவர்ந்தவர்களுக்கு அன்பு பரிசுகளை வழங்குவது நமக்கு தெரியாதது அல்ல.
ஆனால் இந்த உலகத்தில் உள்ள காதலர்களின் அன்பு எவ்வளவு அழமானது என்பதை, தகுந்த சந்தர்ப்பங்களின் போது தான் தெரிந்து கொள்ள முடிகிறது. காதல் என்றவுடன் அது எதிர்பாலரிடம் மட்டுமே தோன்றுவது என்று கூற முடியாது.
தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், உறவினர்கள், மனைவி, கணவன், குழந்தைகள் என்று மனிதன், தன்னை சுற்றிலும் உள்ள பலரையும் காதலிக்கிறான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த காதல் கசக்கிறது. இதனால் பல காதல் திருமணங்கள் பாதியிலேயே முறிந்து விடுகின்றன.
குடும்பத்தில் அன்பாக இருக்கும் உடன்பிறப்புகள், சொத்து பிரச்சனை வரும் போது பிரிந்து செல்கிறார்கள். பெற்றோரை நேசிப்பதாக கூறும் பிள்ளைகள், அவர்களுக்கு வயதாகிவிட்டால் வெறுத்து தள்ளுகிறார்கள். இப்படி இந்த உலகம் அளிக்கும் அன்பு, காதல், நேசம் என்ற எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. ஆனால் நாம் பிறப்பதற்கு முன்னமே நம்மை காதலித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் இயேசு.
இந்த உலகில் பலரும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறுவதோடு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களின் செயல்பாடுகளும், கூறும் வார்த்தைகளும், நம் உயிரையே எடுக்கிறதா என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத இயேசு, நம் மீதான அன்பினால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, நமது பாவங்களுக்காக தனது உயிரை கொடுத்தார் (யோவான்:3.16).
உயிரைக் கொடுத்துவிட்டு விலகி செல்லாமல், திரும்ப உயிர்த்தெழுந்த அவர், இன்றும் நாம் செய்யும் பாவங்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார். இப்படிப்பட்ட இவருக்கு நம் மீது காதல் இல்லாமல் இருக்குமா? இல்லை, அவரது காதல் தான் உண்மையில்லாமல் போகுமா?
இந்த அளவிற்கு நம்மை காதலிக்கும் இயேசு, நம்மிடம் இருந்து பணம், பொருள், ஆடம்பரம் என எந்தொரு காரியத்தையும் எதிர்பார்க்கவில்லை. நாம் அவரை காதலிக்க வேண்டும் என்ற ஒன்றே ஒன்றை தான் அவர் எதிர்பார்க்கிறார்.
இன்றைய கிறிஸ்தவர்கள், தேவனுக்காக நான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று பட்டியலிடுகிறார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேர், அவரை காதலிக்கிறோம்? அவரை நாம் காதலிப்பதாக இருந்தால், நம் செயல்களில் அது தெரியவரும்.
இந்நிலையில் மாறிப் போகும் இந்த உலக உறவுகளான பலரிடமும், ஐ லவ் யூ என்று நாம் கூறுகிறோம். ஆனால் இதே அன்பு மொழியை நம்மை காதலிக்கும் இயேசுவிடம் எவ்வளவு முறை கூறி இருக்கிறோம் என்று யோசித்து பாருங்கள். விரலை விட்டு எண்ணி விடலாம்.
நான் உம்மை காதலிக்கிறேன் இயேசுவே… என்று நாம் கூறுவது கூட ஒரு வகையில் ஒரு அறிக்கை தான். அந்த அறிக்கையை தினமும் நாம் உண்மையாக கூறினால், நிச்சயம் அது நமக்குள் கிரியை செய்யும்.
ஒருவரை காதலிப்பதாக கூறி கொண்டே இருந்தால், அவர் மீதான அன்பு அதிகரிக்கும் என்று மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தான் வழக்கமான காதலர்களிடமும் நடைபெறுகிறதாம். அப்படியென்றால், நாம் ஏன் இயேசுவிடம் காதலிப்பதாக கூற கூடாது?
அவர் செய்தது போல நம்மால், அவருக்காக உயிரையே அளிக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். அது எளிதான காரியமும் அல்ல. ஆனால் அவரை காதலிக்கிறேன் என்று முழு உள்ளத்தோடு கூறுவது எளிதான காரியம் அல்லவா?
இயேசு நமக்காக உயிரை கொடுத்தது மட்டுமின்றி, நாம் வழி தவறாமல் நடக்க போதிக்கவும் செய்கிறார். ஜெபத்தில் நாம் கேட்கும் காரியங்களில் எது நமக்கு நல்லதோ அவற்றை மட்டும் அளிக்கிறார். சில நேரங்களில் நாம் கேட்காத காரியங்களையும், ஆசீர்வாதங்களை கூட அளித்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். தகுதியில்லாத இடத்தில் நம்மை கொண்டு சென்று, எல்லாருக்கும் முன்பாக நம்மை உயர்த்துகிறார்.
இவ்வளவு எல்லாம் செய்யும் உங்கள் அருள் நாதர் இயேசுவிற்கு, ஒரு ஐ லவ் யூ செல்லக் கூடாதா? இன்று முதல் நிச்சயம் சொல்லுகிறேன் என்பவர்கள், என்னோடு சேர்ந்து சொல்லுங்கள். I Love you Jesus
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.