0 1 min 1 mth

லேகியோன் பிசாசு பிடித்த மனிதனை விடுவிக்க வந்த இயேசுவிடம், தங்களை அப்பகுதியில் இருந்த பன்றிகளின் மீது செல்ல அனுமதிக்கமாறு பிசாசுகள் வேண்டிக் கொண்டன என்று மாற்கு:5.12-ல் காண்கிறோம். அதற்கு முந்தைய வசனத்தில் (மாற்கு:5.10), தங்களை அப்பகுதியில் இருந்து அனுப்ப வேண்டாம் என்று பிசாசுகள், இயேசுவிடம் வேண்டுகின்றன.

இந்நிலையில் பன்றிகளின் மீது செல்ல இயேசு அனுமதி அளிக்கிறார். அதனால் அவை அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 2 ஆயிரம் பன்றிகளின் மீது பிசாசின் தாக்கம் ஏற்பட்டு, பன்றிகள் கடலில் மூழ்கி இறந்தன.

வேறு எவ்வளவோ இடங்கள் இருக்கும் போது, பிசாசுகள் ஏன் பன்றிகளின் மீது செல்ல வேண்டும்? பன்றிகள் என்பது உலக சிந்தையையும், கடல் என்பது உலகத்தையும் குறிக்கிறது. ஏனெனில் பன்றிகள் மேலே பார்ப்பதில்லை. அவை எப்போதும் பூமியை மட்டுமே பார்த்துக் கொண்டு நடப்பவை.

ஆனால் தேவனுடைய பிள்ளைகள் மேலானவைகள், அதாவது பரலோகத்திற்கு உரியவைகளை பார்த்து வாழ வேண்டியவர்கள். இதிலிருந்து பிசாசு பிடித்த மனிதனிடம் இருந்த எல்லா ஆவிகளும், அவனை பரலோகத்தை குறித்த சிந்தையை அடையவிடாமல் எந்த அளவிற்கு தடுத்திருந்தன என்பதை அறியலாம்.

கடந்த வாரத்தில் நாம் படித்தது போல, லேகியோன் என்பதற்கு 6 ஆயிரம் என்று பொருள். அப்படியென்றால், ஒரு பன்றியின் மீது 3 அசுத்த ஆவிகள் என்ற எண்ணிக்கையில் நுழைந்து கூட, அவைகளால் உயிர் வாழ முடியவில்லை. இதிலிருந்து மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காணலாம்.

மனிதனுக்குள் மட்டுமே அசுத்தாவிகள் கிரியை செய்கின்றன. ஆனால் இன்று பலரும், தங்கள் ஊரில் இருந்த மரத்தில், ஒரு மிருகத்தின் மீதெல்லாம் அசுத்தாவி கிரியை செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அசுத்தாவிகள் அப்படி கிரியை செய்வதில்லை.
ஏனெனில் மனிதனுக்கு மட்டுமே மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது.

மிருகங்கள் செத்தவுடன் அவை மண்ணுக்கு திரும்புகின்றன. இதனால் மனிதன் மரித்த பிறகு மறுஜென்மத்தில், மிருகமாக, ஒரு மரமாக பிறக்கலாம் என்று கூறப்படும் தவறான கருத்துகளை நாம் கேட்க கூடாது. அது போன்ற காரியங்களை நாம் வேதத்தில் எங்கேயும் காண முடிவதில்லை.

லேகியோன் பிசாசு பிடித்த மனிதனின் விடுதலையை குறித்தும், பன்றிகளின் இறப்பை குறித்தும், அவற்றை மேய்த்தவர்களின் மூலம் ஊர் மக்களுக்கு கூறப்பட்டதாக மாற்கு:5.14-ல் காண்கிறோம். ஆனால் அதை காண வந்த மக்கள், இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல், தங்களை விட்டு போகும்படி கூறினார்கள். இயேசு அந்த ஊரை விட்டு சென்ற பிறகு, பிசாசு பிடித்த மனிதன் சென்று ஊர் மக்களுக்கு அறிவித்த போது, அப்பகுதியில் பெரிய எழுப்புதல் உண்டானது.

மேற்கண்ட இருவரும் ஒரே காரியத்தை தான் கூறினார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் பன்றிகளை மேய்த்தவர்கள் கூறிய போது மட்டும், ஏன் இயேசு நிராகரிக்கப்பட்டார்? ஏனெனில் இயேசுவின் செய்கையை அவர்கள் கண்டார்களே ஒழிய, அதை அனுபவிக்கவில்லை. மேலும் முக்கியத்துவம் வகிக்கும் இயேசுவின் கிரியை மட்டும் அவர்கள் கூறாமல், தங்களின் சொந்த இழப்பையும் சேர்த்து கூறினார்கள்.

ஆனால் லேகியோன் பிசாசுகளிடம் இருந்து விடுதலை பெற்ற மனிதன், இயேசுவிடம் தான் பெற்ற விடுதலையையும், தனக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் எடுத்துக் கூறினான். இதனால் அப்பகுதியில் பெரிய எழுப்புதல் உண்டானது.

இன்றைய கிறிஸ்தவ ஊழியங்களிலு இந்த வேறுபாட்டை காண முடிகிறது. தேவ ஊழியங்களில் ஈடுபடும் சிலர், தேவனிடம் இருந்து எந்த அனுபவத்தையும் பெறாமல், மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தங்களின் சொந்த இழப்புகள், செலவுகள் ஆகியவற்றை குறித்தும் கூறுகிறார்கள். இதனால் அந்த ஊழியங்களில் வளர்ச்சியை காண முடிவதில்லை.

ஆனால் சிலர் தேவனுக்காக காத்திருந்து உண்மையாக அவருக்காக பாடுபட்டு, அவர் செய்த நன்மைகளை அறிவிக்கும் போது, அவர்களின் ஊழியங்கள் அபார வளர்ச்சி அடைகிறது. தேவனின் நாமமும் மகிமைப்படுகிறது.

எனவே தேவ ஊழியத்தில் ஈடுபடும் நாம், இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நமது சொந்த காரியங்களை கூறி, மக்களிடையே பரிதாப உணர்வை ஏற்படுத்தி இயேசுவை ஏற்றுக் கொள்ள வைக்க முயற்சி செய்யாமல், தேவனுடைய கிரியைகளை எடுத்துக் கூறினால், நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும். மேலும் நாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பரலோகத்திற்குரிய காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
– – – – – – –

யாருடைய ஆதரவுமின்றி தனிமையில் வாழ்ந்து வந்த லேகியோன் பிசாசு பிடித்த மனிதனை, இயேசு சந்தித்த சம்பவத்தின் பின்னணியில் மேற்கண்ட 8 காரியங்களை கற்றுக் கொள்ள தேவன் நமக்கு உதவி செய்தார். இந்த காரியங்களை நம் வாழ்க்கையில் பயன்படுத்தி ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *