0 1 min 8 mths

மாற்கு: 5.5-ம் வசனத்தின் கடைசி பகுதியில் லேகியோன் பிசாசு பிடித்த மனிதனின் மற்றொரு குணமான கல்லுகளினாலே தன்னையே காயப்படுத்திக் கொண்டிருந்ததை காண முடிகிறது. வேதத்தில் ‘கல்’ என்ற வார்த்தையின் மூலம் ஒரு சில இடங்களில் கர்த்தராகிய இயேசு குறிக்கப்படுகிறார்.

தானியேல் புத்தகத்தில் நேபுகாத்நேச்சார் ராஜா கண்ட ஒரு கனவில், வரலாற்றில் முக்கியத்துவம் வகித்த சாம்ராஜ்ஜியங்களை பற்றிய ஒரு சிலையை காண்கிறார். இந்த கனவை தானியேல் விளக்கிய முறையில் உள்ள சிறப்பை குறித்து, ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் படிக்க தேவன் நமக்கு உதவி செய்தார்.

இந்நிலையில் அந்த கனவின் கடைசியில் வரும், ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல், மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்து (தானியேல்:2.34,35 மற்றும் 44) என்று வாசிக்கும் அந்த கல், இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு முதல் முறையாக மன்னிக்கிறவராகவும், இரட்சிக்கிறவராகவும் வந்தார். ஆனால் இரண்டாவது முறையாக உலகிற்கு, தமது பரிசுத்தவான்களுடன் சேர்ந்து அவரது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கும்படி வர இருக்கிறார். இதற்கு முன் இந்த உலகம் காணவிருந்த பல சாம்ராஜ்ஜியங்களை குறித்து தான், ராஜாவின் கனவு விளக்கியது.

இந்நிலையில் இயேசு கிறிஸ்துவை இதுவரை இரட்சகராகவே பார்த்து வரும் நாம், அவரை ராஜாவாக பார்க்க நம்மை நாமே ஆயத்தப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு தகுதியுள்ளவர்களை தவிர, மற்றவர்கள் அவரை வெள்ளை சிங்காசானத்தில் அமர்ந்த நியாயாதிபதியாக மட்டுமே பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏசாயா:28.16-ல் திட அஸ்திபாரம் கொண்ட ஒரு கல் சீயோனில் வைக்கப்பட்டதாக காண்கிறோம். இது கூட இயேசு கிறிஸ்துவை குறிக்கப்பட்ட நிலையில், உலக அதிபதிகளால் அவர் தள்ளப்பட்டார். இருப்பினும், பரலோக தேவனால் தலைக்கு மூலைக்கல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது.

இதை குறிக்கும் வகையில் இயேசுவும், மத்தேயு:21.42-44 ஆகிய வசனங்களில், இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கி போவான். அது எவன் மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப் போடும் என்று கூறியுள்ளார். மேற்கண்ட வசனங்களின் மூலம் ‘கல்’ என்ற வார்த்தை இயேசுவை குறிப்பது தெரிகிறது.

இந்த கல்லாகிய இயேசுவின் மீது கட்டப்பட்டிருக்க வேண்டிய லேகியோன் பிசாசு பிடித்த மனிதன், அந்த கல்லினால் தன்னையே காயப்படுத்தி கொண்டான் என்று காண்கிறோம். அப்படியென்றால், தேவனுக்கும் அவனுக்கும் இடையிலான உறவில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏனெனில் அந்த கல்லின் (இயேசு) மூலம் ஜீவனை அடைய வேண்டிய அவன், தன் ஜீவனை போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான்.

இது நம்மில் பலருக்கும் நிகழக் கூடிய ஒரு காரியம் ஆகும். கிறிஸ்துவ வாழ்க்கையின் பல நிலைகளில் நாம் எண்ணற்ற தீர்மானங்களை எடுக்கிறோம். அந்த தீர்மானங்களின் மூலம், கிறிஸ்துவ வாழ்க்கை அனுதினமும் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் சில தீர்மானங்களில் நாம் உண்மையில்லாமல் செயல்படும் போது, அந்த இடத்தில் ஆவிக்குரிய சரிவு நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, புதுவருட ஆராதனையில் பொதுவாக, சில பாவ பழக்கங்களை விட்டுவிடுவதாக தேவ சமூகத்தில் தீர்மானம் எடுக்கிறோம்.

தேவனும் அதை ஏற்றுக் கொண்டவராக நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த தீர்மானத்தை மீறி நாம் செயல்படுகிறோம். அப்படி செயல்படும் போது, நமக்குள் கிரியை செய்த அந்த பழைய பாவ வல்லமை இன்னும் அதிகமாக போராட்டங்களை கொண்டு வந்து, தேவனை விட்டே நம்மை அகற்றி விடுகிறது. இதனால் நமது ஆவிக்குரிய மனிதன் பாதிக்கப்படுகிறான்.

மூலைக் கல்லாகிய இயேசுவை முன்னிறுத்தியே நாம் தீர்மானங்களை எடுப்பதால், அந்த கல்லின் மூலம் நம் ஆவிக்குரிய மனிதனின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தீர்மானத்தை மீறி அழிவுக்கு வழி வகுக்கிறது. ஏற்கனவே மத்தேயு:21.42-44-ல் கண்டது போல, இந்த கல்லினால் மோதியடிக்கப்பட்டு நாம் நொறுங்கி போக வேண்டிய நிலை உருவாகிறது.

எனவே இயேசு கிறிஸ்துவை அடிப்படையாக கொண்டு, அவரை முன்னிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் உண்மையாக இருப்போம். தீர்மானங்களில் கீழ்படியாமை காட்டி, நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளை கண்டறிவோம்.

அவற்றை தேவனிடம் அறிக்கையிட்டு, தீர்மானங்களை புதுப்பித்து, நம்மிடம் தேவன் எதிர்பார்க்கும் ஜெயமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வோம். அப்போது லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனின் நிலை, நமக்கு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

(பாகம்-7 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *