0 1 min 3 mths

நம் இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் போடப்பட்ட ஒரு தினத் தியானத்திற்கு ஒரு நண்பர் சந்தேகம் கேட்டார். அதற்கு பதிலளித்த போது, அவரது மனதில் இருந்த பல சந்தேகங்களைக் கேட்டார். அதில் ஒன்றை தான், மேலே தலைப்பாக அளித்துள்ளோம்.

அதாவது, தேவன் இந்த உலகத்தையும், மனிதனையும் படைக்காமல் விட்டிருந்தால், பாவம் என்ற ஒன்று உருவாகி இருக்காது. எனவே பாவத்தின் துவக்கம் அல்லது பாவம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் தேவனே (?) என்று கூறியிருந்தார்.

இந்த சந்தேகம் அவரிடம் மட்டுமல்ல, இன்று கிறிஸ்தவர்களாக இருக்கும் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் இந்த சந்தேகத்தை கிறிஸ்தவர்களும், மற்ற மதத்தினரும் எங்களிடம் கேட்டுள்ளனர். எனவே மேற்கூறிய கூற்று சரியா? தவறா? என்பதை ஆராய்வோம்.

சிந்தித்தது:

தேவன் இந்த உலகத்தை படைத்தது குறித்து ஆதியாகமம் புத்தகத்தில் காண்கிறோம். பூமியையும், அதில் உள்ளவற்றையும் படிபடியாக சிருஷ்டித்த தேவன், முடிவில் எல்லாவற்றையும் நல்லது என்று கண்டார் என்று ஆதியாகமம்: 1.10,12,18,21,25,31 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். எனவே தேவனின் படைப்பில் எந்த ஒரு தீமையோ, கெட்டதோ இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்தபடியாக, ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய காரணமாக இருந்த நன்மை-தீமை அறியும் மரத்தை தேவன் படைக்காமல் இருந்திருந்தால், அவர்கள் பாவம் செய்திருக்கமாட்டார்களே என்று கேள்வி எழுப்பும் நண்பர்கள் இருக்கிறார்கள். இது சரியான கூற்று போல தெரிந்தாலும், அதை ஆராய்ந்தால், இதிலும் தேவன் மீது தவறில்லை என்பது விளங்கும்.

ஏனெனில் ஏதேன் தோட்டத்தில் நன்மை-தீமை அறியும் மரம் மட்டும் இருக்கவில்லை. மற்ற கனி தரும் மரங்களுடன், ஜீவவிருட்சம் என்ற மற்றொரு மரமும் இருந்தது என்று காண்கிறோம். ஆனால் ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த பிறகு, இந்த கனியை சாப்பிட்டுவிட கூடாது என்று தேவன் பேசுவதை ஆதியாகமம்: 3.22-ல் வாசிக்கிறோம்.

மேலும் முந்தைய வேத பகுதிகளை கவனமாக வாசித்தால், தேவன் மனிதனுக்கு கட்டளை அளிக்கும் போது, ஜீவ விருட்சத்தை சாப்பிட கூடாது என்று கூறவில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

இதிலிருந்து தேவன், ஜீவ விருட்சத்தின் கனியையும், நன்மை-தீமை அறியும் விருட்சத்தின் கனியையும் மனிதன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஏதேன் தோட்டத்தில் வைத்திருக்கலாம் என்பதை அறியலாம். ஏனெனில் தேவன் எல்லாவற்றிற்கு காலத்தை குறித்து செய்கிறவர் என்று வேதம் கூறுகிறது.

ஆனால் தேவன் குறித்த காலத்திற்கு முன்னாக அதை சாப்பிட வேண்டும் என்று பிசாசு, அவனுக்கு தந்திர ஆலோசனை கொடுத்தான். அதற்கு கீழ்படிந்த போது, மனிதன் பாவியாக மாறினான்.

இந்த சம்பவத்தின் மூலம் தேவனுக்கும், பிசாசிற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தேவன் எந்த ஒரு காரியத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தமாட்டார். அவர் கட்டளை கொடுத்துவிட்டு, நாம் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற சுதந்திரத்தை அளிக்கிறார்.

ஆனால் பிசாசு, எந்தொரு பாவ காரியத்தையும் நாம் செய்யும் வரை, நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். நாம் பாவம் செய்து பிசாசிடம் சிக்கும் போது, அவன் நமக்குள்ள சுதந்திரத்தை பறித்துவிட்டு, அடிமைகளாக மாற்றி விடுகிறான்.

அவனிடம் நாம் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிசாசு என்ன வேண்டுமானாலும் செய்வான். இதுதான் பிசாசிற்கும், நம் தேவனுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

தேவன், தமது வார்த்தையில் படைத்த உலகத்தின் எல்லா உயிரிகளும், அவர் கூறியதை கீழ்படிந்தன. ஆனால் தன் கையால் மிகவும் தத்துவ ரூபமாக தன்னைப் போலவே படைக்கப்பட்ட மனிதன், தான் சொன்னதை கீழ்படியவில்லை. மேலும் தன்னுடைய தவறை ஒத்துக் கொள்ளாமல், மற்றவரின் மீது அதை சாற்றிவிட்டு, தான் நல்லவனாக விரும்பினான் மனிதன்.

இதனால் ஆதாம்-ஏவாளின் மூலம் பாவம், இந்த உலகத்திற்குள் நுழைந்தது. அவர்களின் மூலம் உலகில் தோன்றிய எல்லா மனிதர்களுக்கும், நரம்பும், சதையும், இரத்தமும் அளிக்கப்பட்டது போல, பாவ எண்ணங்களும், சுபாவங்களும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

அந்த பாவத்தின் கட்டுகளை நம்மை விட்டு நீக்கவே, இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக இந்த உலகில் மனிதனாக வாழ்ந்து மாதிரியை காண்பித்து, பாவிகளான நமக்காக சொந்த ஜீவனை அளித்தார். இதனால் ஆதாமின் மூலம் பாவிகளான நமக்கு, கிறிஸ்து இயேசுவின் மூலம் மீண்டும் அந்த பரலோக சிங்காசனத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே இந்த உலகில் பாவம் தோன்றுவதற்கு தேவன் காரணம் அல்ல. நம் முன்னோர்களின் கீழ்படியாமை தான் காரணம். அந்த முன்னோர்களின் கீழ்படியாமையை நாமும் செய்ய வேண்டும் என்று பிசாசு, அன்று போலவே இன்றும் தந்திரமாக கிரியை செய்கிறான்.

இதனால் தான் இந்த உலகில் பரிசுத்தமாக வாழ ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால் பாவம் செய்ய நினைத்தால், அவன் இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும். அதற்கு 100 வழிகள் கிடைக்கும். பிசாசு அன்று நம் முன்னோர்களை ஏமாற்றி ஜெயித்தான்.

ஆனால் இன்று அவன் ஜெயிப்பதும், தோற்பதும், நாம் இயேசுவை எந்த அளவிற்கு கீழ்படிகிறோம், பின்பற்றுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. இப்போது கூறுங்கள், இந்த உலகில் பாவம் உருவாக தேவனுடைய படைப்பா காரணம்?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *