0 1 min 7 mths

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; எண்ணாகமம்:23.23

எகிப்தில் இருந்து புறப்பட்டு, பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் நாட்டிற்கு திரும்பி வரும் வழியிலேயே இஸ்ரவேல் மக்களை அழிக்கும் வகையில், அவர்களை சபிக்க அழைக்கப்பட்டவர் தீர்க்கத்தரிசி பிலேயாம். ஆனால் அந்த திட்டத்தை தடுக்கும் கர்த்தர், பிலேயாம் மூலம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக வரும் வசனத்தை நாம் தியானத்திற்கு என்று எடுத்துள்ளோம். மேற்கண்ட இந்த வசனத்தை இன்று பல தேவாலயங்களிலும், குடும்பங்களிலும் பெரும்வாரியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது எனது தொழில்விரோதி, எனக்கு விரோதமாக பில்லிசூனியம் வைத்துவிட்டான். குட்டி சாத்தானை ஏவி விட்டான் என்று கிறிஸ்தவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

அப்படியென்றால் இந்த வசனத்தின் மூலம் கிடைக்கும் தேவனுடைய பாதுகாப்பு, அவர்களுக்கு கிடைக்காமல் போனது ஏன்? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இதன் காரணத்தை குறித்து காண்போம். இதற்கு முதலாவதாக, யாக்கோபு மற்றும் இஸ்ரவேல் என்ற பெயர்களின் பின்னணியை குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

பிறப்பில் இருந்தே ஏமாற்றுக்காரன் என்ற பெயரை பெற்ற யாக்கோபு, கூட பிறந்த அண்ணன், தனது தந்தை, மாமனார் என்று ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றுகிறான். இதனிடையே தேவனுடைய கால நிர்ணயத்திற்கு முன்னதாகவே தனது சொந்த திறமையை பயன்படுத்தி தந்தையின் ஆசீர்வாதத்தையும் பெறுகிறான். இது ஒரு வகையில் தேவனையும் ஏமாற்ற முயற்சி செய்ததை காட்டுகிறது.

ஆனால் அப்படிப்பட்ட யாக்கோபு, யாப்போக்கு ஆற்றை கடக்க வந்த போது, தனது நிலை உணர்ந்து, மேற்கொண்டு செல்ல முடியாது என்று தேவ சமூகத்தை தேடுகிறான். அங்கேயும் தான் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கும் யாக்கோபு, தேவ தூதனிடம் போராடுகிறான். முடிவில் தனது முயற்சியில் தோல்வியை சந்தித்து, தனது பெயர் யாக்கோபு என்று ஒத்துக் கொள்கிறான்.

அதன் பிறகே அவனை ஆசீர்வதிக்கும் தேவன், இஸ்ரவேலாக மாற்றுகிறார். இதனால் இதுவரை ஏமாற்றுகிறான் என்று பெயர் பெற்ற யாக்கோபு, இப்போது தேவனுடைய பிரபு, அதாவது இஸ்ரவேலாக மாறுகிறான். இதனால் யாராலும் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை என்று வேதம் கூறுகிறது.

இந்த காரியத்தை ஏசாயா தீர்க்கத்தரிசன புத்தகத்திலும் நாம் காண முடிகிறது. யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்டவன், இஸ்ரவேலாக உருவாக்கப்பட்டான் என்று காண்கிறோம். இதன் மூலம் நமது வாழ்க்கையில் கூட தேவன் ஒரு மாற்றத்தை செய்ய விரும்புகிறார் என்பது விளங்குகிறது.

நாம் பிறந்து வளர்ந்த போது பாவிகளாக, தேவனை அறியாதவர்களாக இருக்கக் கூடும். உள்ளத்தில் எந்த மாறுதலும் அடையாமல், அதே நிலையில் தொடர்ந்து வாழ்ந்துவிட்டு, வெளிப்புறமாக நான் ஒரு கிறிஸ்தவனாக மாறிவிட்டேன் என்று கூறுவதில் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. பெயர் மாற்றுவதிலும் அர்த்தமில்லை.

தேவனுக்கு முன்பாக நமது நிலையை உண்மையாக எடுத்து காட்ட வேண்டும். நமது குறைகளை தேவனுக்கு முன்பாக நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அப்போது தேவனை ஏமாற்றுகிறவர்களாக இருந்த நம்மை, தேவனுக்கு பயன்படும் ஒரு பிரபுவாக மாற்றுவார். மேலும் இந்த மாற்றத்தை நம் வாழ்க்கையில் சந்தித்தால் மட்டுமே, எந்த ஒரு பிசாசின் பொல்லாத வல்லமையும் நம்மை கண்டு பயப்படும்.

இந்த உள்ளான மனிதனில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் சந்திக்காமல், எவ்வளவு பெரிய ஆவிக்குரிய மனிதனாக நடித்தாலும், அதை பிசாசு கண்டுகொள்ளவே மாட்டான்.

சுருக்கத்தில் கூறினால், உண்மையான இஸ்ரவேலாக இருக்கும் மக்களுக்கு மட்டுமே மந்திரவாதம், பில்லிச்சூனியம், பொல்லாத ஆவியின் போராட்டம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். அதை செய்யாமல், எத்தனை பெரிய தேவ ஊழியர்களை சந்தித்து ஜெபித்தாலும் எந்த பயனும் ஏற்படாது.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, இந்த உலகில் எங்களை படைத்த நிலையிலே நாங்கள் தொடருவதில் எந்த பயனும் இல்லை என்று எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எனவே நீர் விரும்புகிற மாற்றத்தை செய்ய எங்களையே உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். எந்த பொல்லாத வல்லமைகளும் எங்களை மேற்கொள்ளாதபடிக்கு, உமக்கு உண்மையாக வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *