0 1 min 2 mths

இரட்சிக்கப்பட்ட எல்லோரும் இயேசுவின் இரண்டாம் வருகையில் செல்ல முடியும் என்று இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதனால் அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் உலக மனிதர்கள், அதாவது இரட்சிக்கப்படாத மக்கள் மட்டுமே கஷ்டபடுவார்கள் என்ற எண்ணம் கிறிஸ்தவர்கள் இடையே மேலோங்கி உள்ளது.

ஆனால் இந்த கூற்று உண்மை என்றால், அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் இயேசுவின் நாமத்திற்காக நிலைநின்று இரத்தச் சாட்சிகளாக மரிப்பவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. எனவே மேற்கூறிய கூற்று சரியா? என்று இந்த செய்தியில் ஆராய்வோம்.

சிந்தித்தது:

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது பாவத்தில் இருந்து விடுதலை பெற, இயேசு இரத்தம் சிந்தி மரித்தார். ஆனால் ஒவ்வொரு மனிதனின் இரட்சிப்பிற்கான அழைப்பும், தெரிந்துக் கொள்ளுதலும் வேறுபடுகிறது. ஆனால் எல்லாருக்கும் தேவன் வைத்திருக்கும் ஆவிக்குரிய இலக்கு பரலோகம் தான்.

இந்த இலக்கை அடைய விரும்பும் ஒருவர், தனது பாவங்களை அறிக்கை செய்து, இயேசுவை தனக்கு மாதிரியாக கொண்டு வாழ்ந்து, தனது வாழ்க்கையில் பரிசுத்தத்தை காத்து, எப்போதும் இயேசுவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் இது குறித்த தெளிவான வெளிப்படுத்தல் இல்லாத சிலர், ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுடன் திருப்திப்பட்டுக் கொண்டு, அப்படியே காலத்தை தள்ளுகிறார்கள். சிலர் இதிலிருந்து பின்வாங்கியும் போகிறார்கள்.

இந்த பின்வாங்குபவர்களையும், குறிப்பிட்ட கட்டத்தோடு நிற்பவர்களையும் தவிர, மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி செல்கிறார்கள். அப்படி கிறிஸ்துவ வாழ்க்கையில் முன்னேறி செல்லும் கிறிஸ்தவர்களில் பொதுவாக ஒவ்வொருவரும், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உறுதியாக இருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, சிலர் தேவனுக்காக வைராக்கியமாக நிற்கிறார்கள். சிலர் பரிசுத்தத்தை காத்துக் கொள்வார்கள். சிலர் மற்றவர்களின் இரட்சிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். சிலர் ஆவிக்குரிய எழுப்புதலுக்கு முக்கியத்துவம் செலுத்துவார்கள். இப்படி இது, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலோ அல்லது மரித்து பரலோகத்திற்கு செல்லும் தகுதியை அடைய, இயேசுவை போல மாற வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது ஆவிக்குரிய வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் ஒரு பூரண வளர்ச்சி நமக்கு தேவை (கொலேசியர்:2.6).

இந்நிலையில் இயேசுவின் வருகையில் செல்ல ஒருவருக்கு முக்கிய தகுதியாக பரிசுத்தம் காணப்படுகிறது. ஏனெனில் பரிசுத்தம் இல்லாமல் தேவனை ஒருவனும் தரிசிக்க முடியாது என்று எபிரேயர்:12.14-ல் வாசிக்கிறோம். மேலும் பரலோகத்தில் உள்ள அனைத்தும் பரிசுத்தமாக இருக்கும் போது, அங்கு செல்ல விரும்பும் நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?

எனவே ஆவிக்குரிய உலகில் என்னதான் ஊழியம் செய்தாலும், அதிசயம் அற்புதங்களை நடத்தினாலும், தீர்க்கத்தரிசனம் உரைத்தாலும், தங்கள் வாழ்க்கையை பரிசுத்தமாக காத்துக் கொள்ளாவிட்டால், இயேசுவின் இரண்டாம் வருகையில் செல்ல முடியாது.

அதே நேரத்தில் சிலரின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தம் சற்று பின்தங்கி இருந்தாலும், தேவனுக்காக வைராக்கியம் காட்டுவதில் நல்ல வளர்ச்சியை பெற்று இருப்பர்.

இயேசுவின் இரண்டாம் வருகை நெருங்கியுள்ள இக்காலத்தில் தேவனுக்காக வைராக்கியமாக நிற்பவர்களுக்கு, பரிசுத்தம் அடைய சில வாய்ப்புகளையும், காலங்களையும் தேவன் தற்போது அளித்து வருகிறார். எனவே இவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில், இயேசுவின் இரண்டாம் வருகை நிகழ்ந்தால், இவர்கள் நிச்சயம் கைவிடப்படுவார்கள்.

தேவனுக்காக பரிசுத்தமாக வாழ்ந்தவர்கள், இயேசுவின் வருகையில் சென்றுவிட, தேவனுக்காக வைராக்கியமாக நிற்பவர்கள் அந்திகிறிஸ்துவின் கொடூர ஆட்சிக்கு எதிர்த்து நின்று, இரத்தச் சாட்சிகளாக மரிப்பார்கள்.

இப்போது தேவ செய்திகளைக் கேட்டு தங்களின் வாழ்க்கையில் பரிசுத்தத்தை காத்துக் கொள்ள தவறிய இவர்கள், அந்தி கிறிஸ்துவின் நாட்களில் பரிசுத்தமாக வாழ்ந்து, தேவனுக்காக இரத்தச் சாட்சியாக மரிப்பார்கள். ஆனால் அந்தி கிறிஸ்துவின் நாட்களில் பரிசுத்த வாழ்க்கையை பாதுகாத்து கொண்டு, தேவனுக்காக வைராக்கியமாக நிற்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே எல்லா கிறிஸ்தவர்களும், இயேசுவின் இரண்டாம் வருகையில் செல்ல முடியாது. இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் கிறிஸ்தவர்களில், வருகைக்கு பிறகு மூன்று குழுவினர் பிரிவார்கள். முதலாவது குழுவினர் பரிசுத்தமாக வாழ்ந்து வருகையில் சென்றுவிடுவர். இரண்டாவது குழுவினர் தேவ வைராக்கியம் காட்டி வருகைக்கு பிறகு இரத்தச் சாட்சிகளாக மரிப்பார்கள். மூன்றாவது குழுவினர் பரிசுத்தமும், வைராக்கியமும் இல்லாமல், அந்தி கிறிஸ்துவின் கொடூர ஆட்சியில் கிறிஸ்துவை மறுதலித்து போவார்கள்.

எனவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, நமக்கு உள்ள பலமான மற்றும் பலவீனமான பகுதிகளை கண்டறிவோம். பலமான பகுதிகளில் சோர்ந்து போகாமல், பலவீனமான பகுதிகளை இயேசு கிறிஸ்துவை மாதிரியாக முன்னிறுத்தி, வசனத்தினால் பலப்படுத்துவோம்.

நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம். எப்படியாவது இயேசுவின் வருகையில் போய்விடலாம் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுவோம். அதற்கான தகுதியாக உள்ள பரிசுத்தம் நம்மிடம் உள்ளதாக என்று ஒவ்வொரு நாளும் நம்மை நாமே சோதித்து பார்ப்போம்.

பரிசுத்தம் மட்டுமின்றி, தேவனுக்காக வைராக்கியமாக நிற்பதிலும் உறுதியாக இருப்போம். மேலும் வருகையில் கைவிடப்பட்டால் என்ன? நான் இயேசுவிற்காக இரத்தச் சாட்சியாக மரிப்பேன் என்று கருத வேண்டாம். இயேசுவின் 2வது வருகையிலேயே சென்றுவிட வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி வாழ்வோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *