
என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப் பண்ணுவேன்; …என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். ஏசாயா: 56.7
பொதுவாக இந்த வசனத்தை எல்லா தேவாலயங்களிலும் காணலாம். இதை பார்க்கும் போது, தேவாலயத்திற்கு போனால் மட்டுமே நமக்கு ஆசீர்வாதமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும் என்ற சிந்தனை உண்டாகிறது.
ஊரடங்கு நேரத்தில், பலரும் மனசோர்ந்து போனதை காண முடிந்தது. தேவாலயத்திற்கு போகவில்லை, தேவ வசனத்தை கேட்கவில்லை. அதனால் ஒரு சந்தோஷமும் இல்லை என்று பலரும் கூறினார்கள். ஜெப வீடு என்பது தேவாலயம் என்ற சிந்தை இருப்பதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
அதற்காக தேவாலயத்திற்கு செல்வதை தவறு என்றோ, போகவிட்டாலும் பரவாயில்லை என்றோ நான் கூறவில்லை. ஆனால் தேவாலயத்திற்கு போக முடியாத சூழ்நிலை வந்தாலும், மனம் சோர்ந்து போக கூடாது என கூற விரும்புகிறேன்.
ஏனெனில், நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்று வேதம் ( 2 கொரிந்தியர்:6.16) கூறுகிறது. அப்படியிருக்க, தேவ ஆலயத்திற்குள் தேவன் வாசமாயிருக்க வேண்டும். தேவன் வாசமாயிருக்கும் இடத்தில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் தேவாலயங்கள் மூடப்பட்ட நேரத்தில், பலருக்குள் பதட்டமும் பயமும் ஏற்பட்டதை காண முடிந்தது.
ஏனெனில் புதிய ஏற்பாட்டை பொறுத்த வரை, கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் தேவன் வாசம் செய்வது இல்லை. ஆனால் தேவ ஆலயத்தின் பாகங்களான நாம் பலரும் ஒன்றாக இணையும் போது, அங்கு எழும்பும் துதிகளின் மத்தியில் தேவன் வாசம் செய்கிறார்.
எனவே தேவாலயத்திற்கு செல்லும் ஒவ்வொரு பாகங்களிலும் அந்த தேவ சமூகம் காக்கப்பட வேண்டும். அதாவது, நாம் ஒவ்வொருவரும் தேவ சமூகத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கு பாவங்கள் இல்லாமல் நம்மை காத்து கொள்வது முக்கியம்.
தேவ ஆலயத்தின் ஒரு பகுதியான நாம், தனி ஜெபம், குடும்ப ஜெபம், ஆலயத்தில் ஜெபம் என்று எந்த ஜெபத்தில் இருந்தாலும், நமக்குள் தேவ சமூகம் வர வேண்டும். அப்போது இதயத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகும்.
நாமே ஜெப வீடாக மாறும் போது, தேவன் நம்மை மகிழப் பண்ணுவார். மேலும் இரட்சிக்கப்படாத சகல மக்களுக்கும் அது ஜெப வீடாக மாறும். அதாவது, நம்மோடு தொடர்பில் வரும் அனைவருக்குள்ளும் ஒரு தேவ சமாதானத்தை உண்டாகும். அதனால் பிற்காலத்தில் அவர்களும் தேவ ஆலயமாக (இரட்சிக்கப்பட்டவர்களாக) மாற வாய்ப்பு உண்டாகும்.
இந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு, தேவாலயம் திறக்கவில்லை என்ற புலம்பலும், வருத்தமும் உண்டாகும். இது, அவர்களோடு தொடர்பில் உள்ள மக்களுக்கும் ஆவிக்குரிய சரிவை உண்டாகும்.
எனவே, நாமே தேவனுக்கு ஆலயமாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு, பலருக்கும் ஆசீர்வாதத்தின் வாசலாக மாறுவோம். சூழ்நிலைகளையும், ஆட்சியாளர்களையும் குற்றப்படுத்திக் கொண்டு வாழ்வதை தவிர்ப்போம். அவருக்காக எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எழும்பி பிரகாசிப்போம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, நாங்களே உமக்கு ஆலயமாக இருக்கிறோம் என்பதை உணர்த்திய கிருபைக்காக நன்றி. தேவ ஆலயமாக உம் சமூகத்தை காத்து கொண்டு, பலருக்கும் சாட்சியாகவும், ஆசீர்வாதமாகவும் எங்களை மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.