0 1 min 1 yr

எனது நண்பர் ஒருவரிடம் சில ஆவிக்குரிய காரியங்களை குறித்து பேசி கொண்டிருந்தேன். அப்போது நாம் தேவனுக்காக எப்படி வைராக்கியமாக வாழ்கிறோம் என்ற விஷயம் பேச்சுவாக்கில் நுழைந்தது.

என்னோடு பேசிக் கொண்டிருந்த சகோதரன், தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட எனக்கு, இப்படியும் தேவனுக்காக வைராக்கியமாக இருப்பார்களா? என்ற சிந்தை ஏற்பட்டது. அவர் கூறிய சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.கேட்டது:

அந்த சகோதரன் இப்படி தன் அனுபவத்தை கூற துவங்கினார். இயேசுவை சொந்த இரட்சகரான ஏற்றுக் கொண்ட பிறகு, தேவனுக்காக வைராக்கியமாக வாழும் பல தேவ ஊழியர்களை சந்தித்துள்ளேன். இதனால் அந்த எண்ணம், என் சிந்தையில் மேலோங்கி நின்றது. பல தேவ ஊழியர்கள் நடத்தும் சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு, தேவன் இன்றும் சுகமளிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட எனக்கு, எந்த நோய்கள் ஏற்பட்டாலும் டாக்டரிடம் செல்வதோ, மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதோ அறவே பிடிக்காது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட பல சந்தர்பங்களில், தேவனிடம் மன்றாடி ஜெபித்து விடுதலையும் பெற்றுள்ளேன். இந்நிலையில் ஒரு முறை கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டேன். என் மனைவியும் பிள்ளையும் வெளியூருக்கு சென்றிருந்தனர். இதனால் என் பக்கத்து வீட்டில் வசித்து வந்த என் அண்ணன் வீட்டார் என்னை பார்த்து கொண்டனர். நான் மருந்து சாப்பிடமாட்டேன் என்பதை அறிந்திருந்த அவர்கள், யாரும் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் எனக்கு காய்ச்சலினால் ஏற்பட்ட உடல் வலி பொறுக்க முடியாமல் அவதிப்படுவதை கண்ட அண்ணி, எனக்கு ஒரு ஆலோசனை கூறினார். அதாவது நீங்கள் மருந்து தான் சாப்பிடமாட்டீங்க. பரவாயில்லை. நான் வைத்து தரும் சுக்கு காபியை குடிங்க, காய்ச்சல் பறந்து போகும் என்றார். இந்த ஆலோசனைக்கு சம்மதித்து, அவர்கள் தந்த காபியை வாங்கி குடித்தேன். அவர்கள் கூறியது போலவே, குடித்த சில மணிநேரங்களில் என் காய்ச்சல் நீங்கியது. எனக்கு ஒரு பெரிய ஆறுதல் கிடைத்தது.

சந்தோஷத்தோடு அடுத்த நாள் காலையில் தேவனுக்கு நன்றி தெரிவிக்கலாம் என்று பாய் போட்டு ஜெபிக்க அமர்ந்தேன். அதை பார்த்த எனது அண்ணி, “ஏப்பா, இப்ப எதற்கு ஜெபிக்க போறீங்க. அதான் நான் போட்டு கொடுத்த சுக்கு காபியை குடித்து காய்ச்சல் போயிருச்சே?” என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், தேவன் தந்த விடுதலைக்கு, ஒரு மனிதனுக்கு மகிமை போகிறதே? என்ற எண்ணம் தோன்றியது.

அண்ணியிடம் பேசுவதை நிறுத்தி விட்டு, துக்கத்தில் தேவனிடம் ஜெபிக்க ஆரம்பித்தேன். “ஆண்டவரே நான் புத்தியில்லாமல் செய்த இந்த குற்றத்தை மன்னியும். தேவன் விடுதலை கொடுப்பவர் என்பதை நிரூபிக்க காத்திருக்காமல், மனித ஆலோசனைக்கு செவிக் கொடுத்து, உமது நாமத்திற்கு வர வேண்டிய மகிமையை ஒரு மனிதனுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டேன்.

இப்போதும் எனக்கு சுகமான காய்ச்சலை திரும்ப தாரும். என் தேவன் உண்மையாய் விடுதலை கொடுக்கிறவர் என்பதை நிரூபிக்க எனக்கு இன்னொரு வாய்ப்பை தாரும்” என்று ஜெபித்தேன்.

ஜெபித்த சில நிமிடங்களில் என் உடல் வெப்பம் அதிகமாகியது. ஓரிரு மணிநேரத்தில் காய்ச்சல் திரும்பவும் வந்தது. போர்வையை போர்த்தி கொண்டு படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பார்த்த என் அண்ணி, முன் போல சுக்கு காபி போட்டு தரட்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என் தேவன் சுகம் தருவார் என்று கூறிவிட்டு கஷ்டத்தோடு எழுந்து அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.

நான் ஜெபிப்பதை அண்ணியும், அண்ணனும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். காய்ச்சலில் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்ததால் போர்வையால் போர்த்தி கொண்டிருந்தேன். ஜெபித்த போது எனக்குள் பரிசுத்தாவியின் அபிஷேகம் இறங்கியது. அப்போது நான் போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்து போட்டேன்.

முழுவதும் வேர்த்து எனக்கு இருந்த காய்ச்சலின் களைப்போ, வேதனையோ எதுவுமின்றி புதிய பெலத்தோடு எழுந்தேன். இதை கண்ட என் அண்ணனும், அண்ணியும் உண்மையில் நீ வணங்குகிற தேவன் சுகத்தையும், பெலத்தையும் தருகிறவர் என்று ஒப்புக் கொண்டனர் என நண்பர் தன் அனுபவத்தை கூறி முடித்தார்.

சிந்தித்தது:
இந்த சம்பவத்தை கூறி முடித்த சென்னையை சேர்ந்த அந்த சகோதரன், என்னிடம் மற்றொரு காரியத்தையும் கூறினார். நாம் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்கும் போது, தேவன் நமக்காக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார். அதன்மூலம் தேவ நாமமும் மகிமைப்படும்.

ஆனால் நாம் தேவனுக்காக வைராக்கியம் காட்டாமல் இருந்தால் கூட விடுதலையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனால் தேவ நாமம் மகிமைப்படுவதற்கு பதிலாக மனிதன் மேன்மை பாராட்ட வழிவகை ஏற்படும். என்றார். இந்த சம்பவத்தை கேட்ட எனக்குள் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்று, அவரது கரத்தில் இருந்து அற்புதங்களை பெற்றுக் கொள்ள விருப்பம் ஏற்பட்டது. அப்ப உங்களுக்கு?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *