0 1 min 6 mths

பழைய ஏற்பாட்டில் வரும் தேவாலயத்தில் கர்த்தருடைய பெட்டி இருந்ததாக காண்கிறோம். இது மோசேயின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்று வேதம் நமக்கு கூறுகிறது. இப்படியிருக்க, புதிய ஏற்பாட்டு காலமான இன்று கர்த்தருடைய பெட்டி எங்கே போனது.

தற்போதைய புதிய ஏற்பாட்டு தேவாலயங்களில் காணிக்கைப் பெட்டி என்பது பொதுவான ஒன்றாக உள்ளது. உபதேசத்தில் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், காணிக்கைப் பெட்டி வைப்பதில் எந்த வித வேறுபாடும் கிறிஸ்துவ சபைகளில் காண முடிவதில்லை. பிற மத வழிப்பாட்டு தலங்களிலும் காணிக்கைப் பெட்டியை காணலாம்.

படித்தது:

இந்நிலையில் சமீபத்தில் நமது இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடும் போது, ஏதார்த்தமாக ஒரு பதிவை காண முடிந்தது. ஒரு நண்பர் மேற்கூறிய இரண்டு பெட்டிகளையும் முன்னிறுத்தி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கான பதிலையும் அளித்திருந்தேன்.

அந்த நண்பரின் கேள்வியை சிலரிடம் கேட்ட போது, பெரும்பாலானோருக்கு பதில் தெரியவில்லை. இதன்மூலம் கர்த்தருடைய பெட்டிக்கும், காணிக்கை பெட்டிக்கும் உள்ள தொடர்பு மற்றும் வேறுபாடு குறித்து கிறிஸ்தவர்கள் இடையே குழப்பம் இருப்பது தெரியவந்தது. அது குறித்து வேத அடிப்படையில் அளித்த விளக்கத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

கர்த்தருடைய பெட்டி அல்லது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி என்று அழைக்கப்படும் பெட்டியை உருவாக்கும் குறிப்பை பெற்றவர் மோசே. அதை யாத்திராகமம்.25.10-16 வரையிலான வசனங்களை படித்தால் அறியலாம். இந்த பெட்டியை லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுமக்க வேண்டும். வேறு யாரும் அதை தொடக் கூடாது.

கர்த்தருடைய பெட்டியின் மூலம் இஸ்ரவேல் மக்களிடம் தேவன் பேசினார். யோசுவாவின் நாட்களில் (யோசுவா.4.11) யோர்தானை கடக்க உதவியது கர்த்தருடைய பெட்டி. இது குறித்து ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் பார்த்திருந்தோம்.

பெலிஸ்தலரின் கையில் சிக்கிய கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக, தாகோன் சிலை முகங்குப்புற விழுந்ததாக 1 சாமுவேல்.5.3ல் காணலாம். 2 சாமுவேல்.6.11ல் ஓபேத்ஏதோமின் வீட்டில் இருந்த கர்த்தருடைய பெட்டியால் ஆசீர்வாதம் வந்தது.

இவ்வளவு ஆசீர்வாதமாக இருந்த கர்த்தருடைய பெட்டியில், மோசே மூலம் கிடைத்த 10 கட்டளைகள் எழுதிய கற்பலகைகள், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், ஆரோனின் துளிர்த்த கோல் ஆகிய 3 பொருட்கள் மட்டுமே இருந்தது என்கிறது வேதம்.

இந்த காரியங்களை அறிந்தவுடன் கர்த்தருடைய பெட்டி தான் பிற்காலத்தில் காணிக்கை பெட்டியாக மாறி இருக்குமோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். சந்தேகமே தேவையில்லை, இரண்டும் வெவ்வேறு பெட்டிகள் தான்.

அப்படியென்றால், இந்த காணிக்கை பெட்டி எங்கிருந்து வந்தது? அதை நாம் 2 ராஜாக்கள்.12.9 வசனத்தில் காணலாம். ராஜா யோவாஸின் நாட்களில் தேவாலயத்தை பழுது பார்க்க தேவையான பணத்தை மக்களிடம் காணிக்கையாக வசூலிக்க, ஆசாரியனாகிய யோய்தா உருவாக்கிய பெட்டி தான் முதல் காணிக்கை பெட்டி ஆகும்.

காணிக்கைப் பெட்டி அப்படியே பல தலைமுறைகளாக தேவாலயத்தில் தொடர்ந்தது. ஏனெனில் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் இருந்த 2வது தேவாலயத்தில் கூட காணிக்கை பெட்டி இருந்தது. அதில் தான் 2 காசுகளை ஒரு விதவை பெண் போடுகிறார் என்று லூக்கா.21.1-3 வசனங்களில் காணலாம்.

இப்படி தேவனுடைய பெட்டியும் காணிக்கை பெட்டியும் வேறுபாட்டை கொண்டிருக்கிறது. சாலொமோன் கட்டிய முதல் தேவாலயத்தில் இருந்த கர்த்தருடைய பெட்டி, இயேசுவின் காலத்தில் இருந்த தேவாலயத்திலும் இருந்தது. அதேபோல, காணிக்கைப் பெட்டியும் இயேசுவின் காலத்தில் இருந்த தேவாலயத்தில் இருந்தது.

மேலும் அந்தி கிறிஸ்துவின் நாட்களில் இஸ்ரவேலில் கட்டப்பட உள்ள 3வது தேவாலயத்தில் கர்த்தருடைய பெட்டி இருக்கும் என்பது உறுதி. ஆனால் காணிக்கைப் பெட்டி இருக்குமா என்பதை இயேசுவின் இரண்டாம் வருகையில் எடுத்து கொள்ளப்படும் நாம், தேவனோடு இருந்தவாறு தான் பார்க்க முடியும்.

சிந்தித்தது:

பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாட்டிற்கு வந்த காணிக்கைப் பெட்டி, இன்றைய தேவாலயங்களிலும் இடம்பெற்றுள்ளன. காணிக்கைப் பெட்டியில் வரும் பணத்திற்கு, தேவ ஊழியர்கள் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியுள்ளது.

தேவ ஊழியர்களிடம் மட்டும் அல்ல, தேவாலயத்தில் வேலை செய்ய அளிக்கப்படும் காணிக்கை பணத்தை பயன்படுத்தும் எந்தொரு நபரும், அதை சரியாக கையாளவில்லை எனில், தேவன் நிச்சயம் கணக்கு கேட்பார். அதற்கான பிரதிபலனை பெறவும் நேரிடும். எனவே கர்த்தருடைய காரியங்களில் யாரையும் பார்த்து ஏமாற வேண்டாம். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *