0 1 min 1 yr

கேரளாவின், திருவனந்தபுரத்தை சேர்ந்த சகோதரி அஞ்சனா கூறுகிறார்…

எனது பெற்றோர் ஒரு பெயர் கிறிஸ்துவக் குடும்பத்தில் இருந்து இரட்சிக்கப்பட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு தேவ அழைப்பை ஏற்று, முழுநேர ஊழியத்திற்காக ஒப்புக் கொடுத்தனர். எங்களின் சிறு வயதிலேயே, பெற்றோர் ஊழியத்திற்கு வந்ததால், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் மட்டுமே நகர்ந்தது.

இந்நிலையில் எங்கள் குடும்பத்தில் மூத்த மகளான நான், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல விரும்பினேன். ஆனால் எனது தம்பியும், தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால், பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் இருந்த போதும், படிப்பை தொடர முடியாதது குறித்து கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஜெபித்து வந்தோம்.
எங்கள் சபைக்கு வந்த விசுவாசிகளும், இந்த காரியத்திற்காக ஜெபித்து வந்தார்கள்.

இந்நிலையில் என் தந்தை விசுவாசத்தோடு, ஒரு நர்சிங் கல்லூரிக்கு சென்று, படிப்பிற்கான கட்டண விபரங்களை தெரிந்துக் கொண்டார். ஒரு நாள் நாங்கள் காலை நேரத்தில் ஜெபித்துக் கொண்டிருந்த போது, வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவை திறந்த போது, தபால்காரர் கடிதம் ஒன்றை கொண்டு வந்திருந்தார். அதை வேண்டா வெறுப்போடு பிரித்து படித்த போது, வெளிநாட்டில் இருந்து ஒருவர் எழுதியிருந்தார். அதில், அவரிடம் தேவன் கடந்த சில நாட்களாக பேசி, எங்கள் வீட்டின் முகவரி முதற்கொண்டு அளித்து, படிப்பிற்காக பணம் அனுப்புமாறு தேவன் கூறியதாக எழுதி இருந்தார்.

முதலில் இதையெல்லாம் நம்ப முடியாமல் இருக்கவே, சில நாட்களுக்கு பிறகு, கல்லூரியில் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டுமோ, அந்த தொகை மணியாடராக வந்தது. ஒரு முறை மட்டுமல்ல, நான் படித்த 4 ஆண்டுகளுக்கும் தேவைப்பட்ட பொழுதெல்லாம், அந்த பெயர், முகவரி என எதுவும் தெரியாத நபர் தொடர்ந்து பணம் அனுப்பினார்.

எலியாவை, காக்கை கொண்டு பசி ஆற்றியதை நாம் வேதத்தில் வாசிக்கும் போது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதே தேவன், என் படிப்பிற்கு தேவையான எல்லாவற்றையும், அந்த நபர் மூலம் அனுப்பி தந்தார். எனது படிப்பு முடித்து பட்டத்தையும் பெற்றேன். ஆனால் என் படிப்பிற்காக பணம் அனுப்பி நபர் யார் என்பதை கடைசி வரை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

படிப்பு முடித்த சில வாரங்களில் எனக்கு வேலையும் கிடைத்தது. வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்தன. சில ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் வீட்டு கதவை ஒருவர் தட்டினார். கதவை திறந்த போது, புதுமுகமாக தெரிந்தார். என்னை உங்களுக்கு தெரியுமா? என்றார். இல்லை என்றேன். விசாரித்த போது, எனது முழு படிப்பு செலவையும் பொறுப்பேற்ற, தேவ பிள்ளை அவர் தான் என்பது தெரிந்தது.

கண்களில் கண்ணீர் தழும்ப, அவரை கொண்டு தேவன் செய்த நன்மைகளுக்காக, தேவனை துதித்தோம். தனது பணம் வீணாகி போனதா என்பதை அறியவே வந்ததாக கூறி, எந்த நன்றி கடனையும் எதிர்பார்க்காமல், சில நிமிடங்களில் கிளம்பி போய்விட்டார்.

தேவனுடைய ஊழியத்திற்கு எனது பெற்றோர் ஒப்புக் கொடுக்கும் முன், அதிக சம்பளம் பெறும் நல்ல வேலையில் இருந்தார்கள். ஆனால் தேவ அழைப்பை ஏற்று ஊழியத்திற்கு வந்த போது, எங்கள் குடும்பத் தேவைகளை மட்டுமின்றி, நாங்கள் எதிர்பாராத நன்மைகளாலும் தேவன் நடத்தினார்.

இன்று நானும் எனது தம்பியும், தங்கையும் நல்ல நிலையில் உள்ளோம். எங்களால் முடிந்த தேவ ஊழியங்களை செய்து, தேவ நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறோம். தேவனை நம்பி விசுவாசத்தில் வாழ்கிறவர்களுக்கு, தோல்வியே இல்லை, வெற்றி மட்டுமே கிடைக்கும் என்பதற்கு, என்னை சாட்சியாக நிறுத்திய தேவனை நன்றியுள்ள இதயத்தோடு துதிக்கிறேன். நம் தேவனை தேடுகிறவர்களுக்கு, ஒரு நன்மையும் குறைவுபடாது என்பது 100 சதவீதம் உண்மை.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *