0 1 min 12 mths

இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. தேவனை துதிக்கும் பாடல்கள் எத்தனையோ இருக்கும் போது, சினிமா பாடல்கள் அதைவிட இனிமையாகவும், மனதில் வேகமாக பதிந்தும் விடுவது ஏன்? இந்த கேள்வியை, சமீபகாலமாக எங்களிடம் அநேகர் கேட்டு வருகிறார்கள். இதை குறித்து சிந்திப்போம்.

சிந்தித்தது:

இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன், இவ்விரு பாடல்களால் ஏற்படும் விளைவுகளை குறித்து முதலில் பார்த்து விடுவோம். ஏனெனில் அதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், அதில் வரும் காட்சிகளும், பாடல்களும் முழுக்க முழுக்க உலக காரியங்களையும், உலக மக்களையும் மட்டுமே வர்ணிக்கின்றன. மேலும் நம் மாம்சீக சரீரத்திற்கு தேவைப்படும் எல்லா இச்சைகளையும், விருப்பங்களையும் அவை நிறைவு செய்வதாக அமைகின்றன.

இதனால் நாம் சினிமாக்களை பார்த்து, அதன் பாடல்களை பாடும் போது, உலகம் மற்றும் மாம்சத்தை குறித்த சிந்தனைகள் நமக்குள் அதிகமாகி முழுமையான உலக மனிதனாக மாறுகிறோம்.

தேவனுடைய வசனம் மற்றும் பாடல்கள், இதற்கு தலைகீழான அனுபவத்தை நமக்குள் உண்டாக்குகிறது. வேத வசனங்களை தினமும் வாசிக்கும் போது, நமது ஆவிக்குரிய மனிதன் பலம் அடைகிறான். பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும், நியாயதீர்ப்பை குறித்தும் பரிசுத்தாவியின் எச்சரிப்பு நமக்குள் உண்டாகிறது.

இதோடு தேவனை துதிக்கும் பாடல்களை பாடும் போது, ஆவிக்குரிய சமாதானமும், வல்லமையும், அபிஷேகமும் கிடைத்து, பரலோக சிந்தனை நமக்குள் அதிகரிக்கிறது. தேவன் மீதான விசுவாசம், அன்பு ஆகியவை அதிகரித்து, இயேசுவை போல மாறுகிறோம்.

இதனால் தான் தேவ ஊழியர்களில் பலரும் சினிமா பார்க்க கூடாது என்று தேவ செய்திகளில் போதித்து வருகிறார்கள். ஆனால் இன்றைய உலகில் சினிமா பாடல்களை கேட்காமலோ, பார்க்காமலோ வாழ்வது மிகவும் கஷ்டம் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் அவற்றை தவறுதலாக ஒரு முறை பார்த்தாலோ, கேட்டாலோ, அப்படியே நம் மனதில் பதிந்து விடுவதன் பின்னால், பிசாசின் செயல் கிரியை செய்கிறது.

இது குறித்து தெளிவாக அறிய நாம், பிசாசின் உருவ அமைப்பை முதலில் கவனிக்க வேண்டியுள்ளது. அவனது அமைப்பை குறித்தும், பரலோகத்தில் அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த பணிகளை குறித்தும் – ஏசாயா: 14.11ல் “உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டு போயிற்று;” என்று வாசிக்கிறோம். இதில் வாத்தியங்கள் என்ற வார்த்தையை கவனியுங்கள்.

மேலும் ஏசாயா: 14.9-20 ஆகிய வசனங்களை வாசிக்கும் போது, பிசாசின் பல கிரியைகளை காணலாம். எனவே பிசாசிடம் வாத்தியங்கள் அதாவது இசைக்க பயன்படும் கருவிகள் இருந்திருந்தன என்பதை அறியலாம்.

எசேக்கியல்:28.12-19 வரையுள்ள வசனங்களை வாசிக்கும் போது, அங்கேயும், “நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்… உன் மேளவாத்தியங்களும், உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.” என்று காணலாம்.

தற்போது பிசாசு அல்லது சாத்தான் என்று நாம் அழைக்கும் நபர், முற்காலத்தில் அதாவது தேவன், மனிதனை உண்டாக்குவதற்கு முன் பரலோகத்தில், தேவ சமூகத்தில் எப்போதும் தேவனை பாடி துதிக்கும் தூதர் கூட்டத்திற்கு தலைமை வகித்தவன். இவன் பெயர் லூசிபர் என்பதாகும். தேவனை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் துதிக்கும் தன்மையின் மூலம் தேவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவன்.

இவனது உடல் முழுவதும் ரத்தினங்களாலும், விலையேறப்பட்ட கற்களாலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதில் பல இசைக் கருவிகளும் இருந்ததாம். இவன் பரலோகத்தில் பாடிக் கொண்டே நடந்து சென்றால், ஏற்படும் இனிய இசையை கேட்டு, பரலோகமே மகிழ்ந்ததாம்.

ஆனால் மேலே வாசித்த வசனங்களில் உள்ளது போல, தனது இருதயத்தில் தேவனுக்கு விரோதமான சிந்தையை யோசித்த போது, அவன் பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டான். அவனோடு சேர்ந்து ஒரு கூட்டம் தூதர்களும், பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், தனக்கு பதிலாக மண்ணினால் உருவாக்கப்பட்டு, தேவனால் நேசிக்கப்பட்ட மனிதனை கண்டு, பிசாசினால் சகிக்க முடியவில்லை. இந்த தேவனுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை கெடுக்கும் முயற்சியில், ஆதாம்-ஏவாளிடம் வெற்றிப் பெற்றான். இன்றும் நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தின் மூலமும், அவன் தனது முயற்சியில் வெற்றிப் பெற்றுக் கொண்டே இருக்கிறான்.

அவன் பரலோகத்தில் இருந்த போது, தேவனால் அளிக்கப்பட்ட இசைக்கும் வாத்தியங்களை கொண்ட உடலும், திறமையும் இப்போதும் அவனுக்கு உண்டு. இதனால் அவனது விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும் ஏற்ப வாழும், உலக மக்களுக்கு தனது திறமையை அவன் அளிக்கிறான்.

அதன்மூலம் தேவனிடமிருந்து மனிதர்களை பிரிக்கும் வகையிலான பாடல்கள், காட்சிகள், கற்பனைகளை உருவாக்கும் கதைகள், இச்சையை, உலக சிந்தையை தூண்டும் செயல்கள் ஆகியவற்றை செய்ய பிசாசு உதவுகிறான்.

சினிமா துறையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், உலக புகழையும், பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னால் பிசாசின் ஆலோசனையும், செயலும் உள்ளது. இதனால் சினிமா பாடல்கள், காட்சிகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு மிகவும் இனிமையாக தெரிகிறது.

தேவ பிள்ளைகளான நாம் சினிமா பாடல்களையும், இசையையும் கேட்கும் போது, அந்த பாடல்களின் பின்னால் மறைந்துள்ள பிசாசின் ஆவி நம்மை தாக்குகிறது. இந்த தாக்குதலை எதிர்கொள்ள தகுந்த தேவ ஆவியின் வல்லமை தேவை. இல்லையெனில், அவனது தந்திர வலையில் நாமும் சிக்கி கொள்ள நேரிடுகிறது.

மேலும் நாம் மாம்சத்தில் இருப்பதால், பிசாசின் கிரியைகள் அனைத்தும் மாம்சத்தை திருப்திப்படுத்துவதாக அமைந்து விடுதால், நம்மை வீழ்த்துவது எளிதாக உள்ளது.
சினிமா பாடல்களை ரசித்து பாடி, சினிமா கதைகளை பேசும் நண்பர்களை உற்று கவனித்தால், அவர்களுக்குள் பிசாசின் ஆவி கிரியை செய்வதை காண முடியும்.

மேலும் அந்த காரியங்களை நாமும் செய்ய அவர்கள் தூண்டுவார்கள். நாமும் அவர்களை போல நடந்து கொண்டால், நமக்குள்ளும் அந்த பிசாசின் ஆவி இறங்கி, கிரியை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இன்று தேவ ஊழியர்கள் என்று கூறி கொள்ளும் பலரும், சினிமா பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிடுகிறார்கள்! மேற்கூறிய காரியங்களை வாசித்த உங்களுக்கே, அவர்கள் யாரால் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *