0 1 min 6 mths

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது சரியா, தவறா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, எதையும் கண்டுகொள்ளாத ஒரு கூட்டம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இதில் சிலரது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சர்ச்சில் தொடங்கப்பட்டாலும், சாராய கடையில் தான் முடிக்கிறார்கள். இவர்கள், கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்து தங்களுக்குள் வர மனதை திறக்கிறார்களோ இல்லையோ? நண்பர்களுடன் பாட்டிலை திறப்பதில் தான் அதிக கவனமும், மகிழ்ச்சியும் கொள்கிறார்கள்.

சில கிறிஸ்தவர்களுக்கு பிரியாணி சாப்பிடுவதற்கும், குடும்பத்தில் எல்லாரும் புத்தாடை அணிந்து கொள்வதற்கும் கிறிஸ்துமஸை ஒரு காரணமாக காட்டி கொள்வதை காணலாம்.

இப்படி இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே, கிறிஸ்துமஸ் என்பது பல காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. இதை இன்னொரு விதத்தில் கூறினால், கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்று கூறலாம்.

ஏனெனில் கிறிஸ்துமஸ் என்பது எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை புரிந்து கொண்டால், மேற்கூறிய எந்த விதமான தவறான கண்ணோட்டமும் வர வாய்ப்பில்லை. இயேசு கிறிஸ்து உலகில் பிறந்ததன் மூலம் நமக்கு மீட்பு கிடைக்க வழி பிறந்தது.

அதேபோல நமது இருதயத்தில் இயேசு பிறக்கும் போது, நமக்குள் இருக்கும் பாவத்தின் எல்லா இச்சைகள், பழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவை நம்மை விட்டு நீங்கி, தேவ சமாதானத்தால் நிரம்புகிறது. தேவன் வசிக்கும் இடமே, தேவாலயம் என்பதால், நாம் நடமாடும் தேவாலயமாக மாறுகிறோம்.

நாம் ஒரு கிறிஸ்தவர் என்பதை நம் வீட்டின் முன் கிறிஸ்துமஸ் அன்று ஸ்டாரை வாங்கி தொங்கவிட்டு அறிவிக்க வேண்டியதில்லை. நமது பழக்கவழக்கங்கள் கிறிஸ்துவின் நிழலாக மாறுவதில் இருந்தே, அதை மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். இதை தான் தேவனும் நம்மிடம் விரும்புகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை அணிந்து கொள்ளும் நமது, ஆவிக்குரிய ஆடை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்ப்போம். அதில் பாவ அழுக்குகளை வைத்து கொண்டு, வெளியே ஹேப்பி கிறிஸ்துமஸ் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லையே!

எனவே குழந்தை இயேசுவை, வீட்டில் உருவாக்கும் மாட்டு தொழுவத்தில் கண்டு மகிழ்வதை தவித்துவிட்டு, நமது இதயத்திற்குள் பிறக்க வைத்து மகிழ்வோம்.
இயேசு கிறிஸ்து தனது பிறந்தநாளுக்காக எந்த துணிக் கடைக்கும் சென்று துணி எடுக்கவில்லை. சாராய கடைக்கு சென்று சாராயம் குடித்து மகிழவில்லை.

மற்றவர்களுக்கு பிரியாணியும், கேக்கும் கொடுக்கவில்லை. அவர் தனது பிறப்பின் மூலம் இரட்சிப்பின் நற்செய்தியை உலகிற்கு கொண்டு வந்தார். பாவ இருளில் தவித்த மக்களுக்கு வெளிச்சமாக மீட்பை அளித்து மகிழ்ந்தார்.

சாத்தானின் அடிமைத்தனத்தில் மதிமயங்கி கிடந்த நம்மை, மயக்கம் தெளிய வைத்து உயிர்ப்பித்தார். தனது உடலையும், ரத்தத்தையும், நமக்காக அளித்து பரலோக வாசிகளாக மாற்றினார்.

இதுபோல நமக்காக, தனது பிறப்பின் மூலம் எவ்வளவு காரியங்களை செய்து தீர்த்த இயேசுவிற்கு, நம் இதயத்தில் இடம் அளித்து, பெயருக்கு கிறிஸ்துவனாக வாழாமல், குட்டி கிறிஸ்துவாகவே வாழ்ந்து காட்டுவோம்.

அப்போது உண்மையான கிறிஸ்துமஸ் பண்டிகையின் மகிழ்ச்சி, நம் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், பூமிக்குரிய வாழ்க்கையிலும் பொங்கி வழியும். அந்த ஹேப்பி கிறிஸ்துமஸை எதிர்நோக்கும்…

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *