
நவீன காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி வியப்பை அளிக்கிறது. கல்வி, அறிவாற்றல், அவர்களின் பேச்சு திறமை, செயல்பாடு என எல்லாவற்றிலும் அந்த வளர்ச்சியை காண முடிகிறது. ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இது குறித்து கூறும் போது, மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அதை இணையதள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதால், அந்த தவறு நம் குடும்பத்தில் யாரும் செய்யாமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
பார்த்தது:
சமீபத்தில் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட 3 நாட்களான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் 6 வயதில் இருந்து 16 வயது வரையிலான பிள்ளைகள் கலந்து கொண்டார்கள். ஆவிக்குரிய பாடல்கள், கதைகள், கலந்துரையாடல்கள் என நேரம் போனதே தெரியாமல் 3 நாட்கள் கடந்தன.
3வது நாளின் முடிவில் பிள்ளைகளுடன் வந்த பெற்றோருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு வாங்க வரிசையில் நின்ற போது, பல பிள்ளைகளும் என்னை கண்டு சந்தோஷம் ஆனார்கள். இனி மீண்டும் எப்போது சந்திக்கலாம் என்று சிலர் வருத்தமாக கேட்டார்கள்.
நான் நின்றிருந்த பக்கத்து வரிசையில் இருந்த அண்ணன்-தம்பியான இரு பிள்ளைகள், என்னிடம் பேசினார்கள். நான் சொல்லி தந்த பாடல்களையும் பாடி காட்டி, தாங்கள் இருவரும் இதை மிகவும் விரும்புவதாகவும் கூறினார்கள். கதையில் கூறிய சில கருத்துகளையும் கூறிய போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அந்த இரு பிள்ளைகளின் தந்தையும் உடன் இருந்த போதும், மொபைல்போனில் மிகவும் பிசியாக இருந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு, அவரை திசை திருப்பும் வகையில், இரு மகன்களை குறித்து அவரிடம் கேட்டேன். அவரோ மொபைலை பார்த்து கொண்டே பேசினார். என் முகத்தை கூட பார்க்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் மிகவும் துடிப்பாக இருக்கும் இந்த பிள்ளைகளை வீட்டில் எப்படி வைத்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் இவங்க அம்மா வேலை. நான் இவர்களை கண்டுகொள்வதே இல்லை என்று கூறினார். மேலும் நான் தொடர்ந்து அவருடன் பேச முயற்சி செய்த போது, அவரது வரிசையில் சற்று விலகி சென்ற பிள்ளைகளிடம் கோபம் அடைந்தார்.
ஒழுங்காக வரிசையில் நில்லுங்க, பிரதர் கிட்ட அப்பறம் பேசலாம். இல்லன்னா, அவர் கூட இரண்டு பேரும் போயிருங்க, நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்று பேச ஆரம்பித்தார். அவரது பேச்சில் இருந்து, பிள்ளைகளின் மீதான அன்போ, அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியோ அவருக்கு ஏற்படவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
ஏறக்குறைய 15 நிமிடங்கள், அந்த வரிசையில் பிள்ளைகளோடு நின்ற அவர், மொபைல்போன் பார்ப்பதில் தான் கவனம் செலுத்தினார். கடைசியில் சாப்பாட்டை வாங்கிய அவர், பிள்ளைகளை வேகமாக அழைத்து சென்றுவிட்டார்.
எனக்கு மரியாதை அளிக்கவில்லை என்பது என் வருத்தம் அல்ல. மாறாக, பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்களை விட, மொபைல்போன் அவ்வளவு முக்கியமாக தெரிந்ததே என்பது தான். இதற்கு முன் பல பெற்றோரும், பிள்ளைகளுக்கு செய்த ஊழியத்திற்கு நன்றி கூறி சென்ற நிலையில், இவர் இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் துக்கமாகிவிட்டது.
சிந்தித்தது:
பிள்ளைகளின் படிப்பு, வசதி, எதிர்காலத்திற்கான சொத்து உள்ளிட்டவற்றை சேர்த்து வைக்கும் இன்றைய பல கிறிஸ்துவ பெற்றோரும், அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு எப்படி உதவலாம் என்பதை யோசிக்க தவறுகிறார்கள். அந்த பட்டியலில் தான் நான் குறிப்பிட்ட சகோதரரும் உள்ளார்.
மொபைல்போனுக்கு அவ்வளவு நேரம் செலவிட்ட அவர், என்னிடம் தங்கள் பிள்ளைகள் எப்படி பாடினார்கள், எந்த மாதிரியான கருத்துகளை சொன்னீர்கள் என்று கேட்கவில்லை. ஏனெனில் அதெல்லாம் அவருக்கு முக்கியமாக தெரியவில்லை.
இன்று நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக இணையதளங்களை விட முக்கியமானது, நமது ஆவிக்குரிய வாழ்க்கை என்பதை மறக்க கூடாது. நம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதை தான் நம் பிள்ளைகளும் கற்று கொள்வார்கள்.
எனவே வசனத்திற்கு பஞ்சம் உள்ள இந்த கடைசி காலத்தில், நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் ஆட்களை தொடர்பில் வைத்து கொள்வது தான் புத்திசாலித்தனம். நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள் தானே?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.