உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?” சங்கீதம்.139:7

வானமும், பூமியும் படைத்த தேவனிடமிருந்து எந்த மனிதனாலும் தப்பி செல்ல முடியாது. அவரது கண்களுக்கு மறைவாக நாம் எதையும் செய்ய முடியாது. இந்த கருத்தை தான் சங்கீதக்காரன் இங்கே குறிப்பிடுகிறான்.சங்கீதக்காரனாகிய தாவீது ஏன் இப்படி கூறுகிறார்? “தப்பு செய்தவன் தடுமாறுவன்” என்று ஒரு வழக்கு சொல் உண்டு. தேவனுக்கு மறைந்து இருக்க ஒருவர் விரும்புகிறார் என்றாலே, அவருக்குள் ஏதோ ஒரு பாவம் மறைந்து இருக்கிறது என்றே அர்த்தம்.

உலகின் முதல் மனிதனாகிய ஆதாம், தேவனால் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனோடு நெருங்கி வாழ்ந்து வந்தான். தேவன் தினமும் காலையிலும், மாலையிலும் ஆதாமையும், ஏவாளையும் சந்தித்து மகிழ்ந்தார். அப்போது ஆதாமோ, ஏவாளோ பயப்படவில்லை.

ஆனால் அவர்கள் இருவரும் தேவனுடைய கட்டளையை மீறிய போது, அவர்களுக்குள் பாவம் பிரவேசித்தது. பாவம் பயத்தை கொண்டு வந்தது. தோட்டத்தில் தேவனுடைய சத்தத்தை கேட்டு, ஆதாமும், ஏவாளும் பயந்து ஒளிந்து கொள்ள இடம் தேடினார்கள் என ஆதியாகமம்.3:8ல் வாசிக்கிறோம். எனவே பாவம் எங்கே இருக்கிறதோ, அங்கே பயம் குடிகொள்ளும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தியானத்திற்கான வசனத்தில், தேவனுடைய ஆவிக்கு மறைய முடியாது என்று தாவீது குறிப்பிடுகிறார். நாம் தேவனோடு நெருங்கி வாழ தேவையான ஆலோசனைகளை அளிக்கவே நமக்கு பரிசுத்தாவின் வல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் மறந்துவிட கூடாது.

நாம் செல்லும் இடங்கள், செய்யும் வேலைகள், பேசும் வார்த்தைகள் என எல்லாவற்றையும் நம்முடன், நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் பார்த்து நமக்கு அவ்வப்போது ஆலோசனைகளை தருகிறார். மேலும் வேத வாசிப்பின் போது உணர்த்துவது, தேவனை துதிக்கும் பாடல்களின் ஆவியில் எழுப்புதல் அளிப்பது, ஊழியர்கள் மூலம் நம்மோடு பேசி நமது குறைகளை உணர்த்துவது போன்ற பணிகளை பரிசுத்தாவியானவர் நமக்குள் செய்கிறார். இந்நிலையில் பரிசுத்தாவியின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்தாலே போதும், நாம் தேவனோடு நெருங்கி வாழ முடியும்.

தேவனுக்கு கீழ்படியாமை காட்டினால், அவரை விட்டு விலகி செல்ல நேரிடும். அப்படி நாம் அவரது சமூகத்தை விட்டு ஓட நினைத்தாலும், தேவன் விடுவதில்லை. தகுந்த சிட்சையினால் தண்டித்து, திரும்ப தமது சமூகத்திற்கு கொண்டு வருகிறார். ஆதாம் தேவனை விட்டு விலகி செல்ல நினைத்த போதும், தேவன் திரும்ப தனது சமூகத்திற்கு கொண்டு வந்ததை நாம் வேதத்தில் காண்கிறோம்.

எனவே தேவனையும், நம்மையும் பிரிக்கும் பாவங்களை விட்டு விலகுவோம். பாவங்களை தேவன் உணர்த்தும் போது அதை அறிக்கையிட்டு இரக்கம் பெறுவோம். தேவனை விட்டு ஓட முயற்சி செய்வதை கைவிடுவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள இயேசுவே, உம்மை விட்டு மறைந்து வாழ நினைத்த எங்கள் செயல்களை மன்னியும். உமக்கும், எங்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கிய எங்கள் குறைகளையும், பாவங்களையும் மன்னியும். குறைகளை உணர்த்தும் தேவ சத்தத்திற்கு எங்களையே தாழ்த்தி ஒப்புக் கொடுத்து, பரிசுத்த தேவனாகிய உம்மை போல மாற, பரிசுத்தமடைய உதவி செய்யும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *