0 1 min 1 yr

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம். 23:1

இந்த வசனத்தை படிக்காதவர்கள், தெரியாதவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பது அரிது. கிறிஸ்துவ வீடுகளில் சிறு வயது முதல் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு முக்கிய வசனங்களில் இதுவும் ஒன்று. இந்த வசனத்தில் எண்ணற்ற வெளிப்படுத்தல்கள் மறைந்து இருப்பதை மறுக்க முடியாது.

இந்த வசனத்தை நாம் ஒரு அறிக்கையாக தினமும் கூறலாம். அதே வேளையில் நமக்கும், தேவனுக்கும் இடையே உள்ள ஒரு உடன்படிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கர்த்தர் நம்மை மேய்ப்பவராக இருக்கிறார்.

தியானத்திற்கான வசனத்தின் அடுத்தடுத்த வசனங்களை படிக்கும் போது, அவர் நமக்கு தேவையான எல்லாவற்றையும் சரியான நேரத்தில் அளிக்கிறார் என்பதை காணலாம். இந்நிலையில் நாம் கர்த்தரின் பார்வையில் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பாவத்தின் பிடியில் சிக்கி, பிசாசின் பிள்ளைகளாக இருந்த நம்மை, தேவன் தமது அன்பின் கரத்தினால் மீட்டு எடுத்தார். விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து, அனுதினமும் நடத்தி வருகிறார்.

நாம் பாவ சுபாவங்களில் இருந்த போது, தேவ சித்தம் செய்யாதவர்களாக இருந்தோம். சொந்த இஷ்டம் போல வாழ்ந்தோம். சிங்கம், புலி, நரி, பன்றி உள்ளிட்ட மிருகங்கள் தங்களின் சொந்த இஷ்டத்தில் நடப்பவை. அவற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் போது, சிலர் ஆபத்தில் சிக்கி கொள்வதை பார்க்க முடிகிறது. நாமும் அப்படியே இருந்தோம். நம்மை திருத்த முயன்ற பலரையும் நாம் துன்புறுத்தி இருக்கலாம்.

இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளைகளாக மாறுவதற்கு முன் நமக்குள் கோபம், எரிச்சல், வைராக்கியம், பழிவாங்கும் பழக்கம், கசப்பு, பொய், பொறாமை என பல தேவையில்லாத சுபாவங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு சுபாவமும், ஒவ்வொரு மிருகத்திற்குள் இருப்பதை நாம் காணலாம்.

ஆனால் தேவன் நம்மை மேய்க்கும் மேய்ப்பராக இருக்கும் போது, நாம் ஆடுகளாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் இருந்து நாம் மாறும் போது, அவரிடம் இருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்கள் தடைப்படும். ஏனெனில் தேவன் நம்மை எப்போதும் அவர் மேய்க்கும் ஆடுகளாக இருக்கவே விரும்புகிறார்.

ஏனெனில் ஆடுகளில் தாழ்மையையும், கீழ்படிதலையும், தயவையும், மன்னிக்கும் தன்மையும் காண முடிகிறது. மேய்ப்பன் எந்த பாதையில் நடத்தினாலும், முறுமுறுப்பு இல்லாமல் அவரை பின்பற்றும் தன்மையையும் ஆடுகளிடம் காண முடியும்.

இரட்சிக்கப்பட்ட பிறகும், நமக்குள் காட்டு மிருகங்களின் பழக்கங்கள் அவ்வப்போது எழுப்பி வேலை செய்கிறதா? தேவ வசனத்திற்கு கீழ்படியாமல் உலகிற்கும், பிசாசின் ஆலோசனைக்கும் கீழ்படிகிறோமா? என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். நாம் எப்போதும் தேவனுடைய ஆடுகளாக இருந்தால் மட்டுமே, “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். ” என்று கூற முடியும்.

யாருக்கும் கட்டுப்பாடாத காட்டு மிருகங்களாக, கீழ்படியாமல் திரிந்த நம்மை, இயேசு என்ற மேய்ப்பன் தேடி வந்தார். அவரை போல தேவ ஆட்டுக் குட்டியாக மாறும்படி நமக்கு மாதிரியை காட்டி சென்றார். அவரது சாந்தமான வழியில் நடந்து சென்று அவர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள பரம நாட்டில் சென்று சேர கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வராக.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, நீர் எங்களின் நல்ல மேய்ப்பராக இருப்பதை நினைத்து நன்றியுள்ள இதயத்தோடு உம்மை துதிக்கிறோம். நீர் மேய்க்கும் ஆடுகளாக இருக்க வேண்டிய நாங்கள், சில நேரங்களில் அதை மறந்து காட்டு மிருகங்களாக மாறி விடுகிறோம். இந்த மாற்றத்தை நீர் விரும்பவில்லை என்பதை அறிந்து மன்னிக்க வேண்டுகிறோம். எப்போதும் நீர் மேய்க்கும் ஆடுகளாய், உமக்கு கீழ்படிந்து வாழ எங்களுக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *