0 1 min 2 mths

நமது தேவனைத் துதிக்கும் புதுப் பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். சங்கீதம். 40:3

உலகத்தின் இன்பங்களிலும், வேஷங்களிலும், அக்கிரமங்களிலும் உழன்று கொண்டிருந்த நம்மை, தேவனே மனிதனாக வந்து தன் ஜீவனை தந்து மீட்டெடுத்தார். விலையேறப்பட்ட இரட்சிப்பை நமக்கு தந்தருளினார்.

இந்த மீட்பை குறித்து ஆவியில் உணர்ந்தவராக, தாவீது ராஜா தனது சங்கீதத்தில் மேற்கண்ட வரிகளை பாடியிருக்கிறார். 40வது சங்கீதத்தின் 2வது வசனத்தில் நம்மை மீட்டெடுத்த அனுபவங்களையும், பின் வசனங்களில் கிறிஸ்துவிற்குள் நிலைபெற்ற புதிய மனிதனின் அனுவங்களையும் குறித்து வாசிக்கிறோம்.

கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் நிற்கும் ஒருவன் உறுதியாகவும், மனதில் எப்போதும் சந்தோஷமாகவும் இருக்கிறான். இதனால் “நமது தேவனைத் துதிக்கும் புதுப் பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார் ”என்று கூறுகிறான்.

எனவே நாம் எப்போதும் இயேசு கிறிஸ்து காட்டிய வழிகளில் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் அந்த வழியை விட்டு விலகாமல் இருக்கிறோமா? என்பதை அவ்வப்போது பரிசோதித்து கொள்வதும் நல்லது.

பலரும் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை ஆராய்ந்து பார்ப்பது, புதுவருட ஆராதனைகளில்தான். அப்போது தங்கள் பாவங்களை குறித்து அறிக்கை செய்து, புதிய தீர்மானங்களை எடுப்பார்கள். சில நாட்களுக்கு பிறகு, எடுத்த தீர்மானத்தை கூட மறந்து விடுவார்கள்.

இதனால் தேவன் விரும்பும் ஆவிக்குரிய வளர்ச்சியை நம்மால் முழுவதுமாக எட்ட முடிவதில்லை. இப்படி தேவன் விரும்பும் ஆவிக்குரிய வளர்ச்சி நம்மிடம் இல்லாமல், இயேசுவை பற்றி பிறருக்கு கூறும் போது, அது அவர்களுக்கு ஏற்று கொள்ள முடிவதில்லை. ஏனெனில் பிறருக்கு நாம் வாழ்க்கையில் இயேசுவின் சாயல் தெரியவில்லை.

சிலர் இரட்சிக்கப்பட்ட காலத்தில் பெற்ற அதே கிருபைகளையும், அபிஷேகத்தையும் மட்டுமே கொண்டிருப்பார்கள். இதன் விளைவால் பல போராட்டங்களின் வழியாக கடந்து செல்லும் போது, நாம் பிசாசை ஜெயிக்க முடியாமல், தோற்று போகிறோம். சில நேரங்களில் இரட்சிப்பின் அனுபவத்தையே இழந்து, பெயருக்கு சபைக்கு போகும் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறோம்.

இந்த நிலையில் இருந்து மாற நாம் என்ன செய்யலாம்? நம் ஆவிக்குரிய ஜீவியத்தை தினமும் திரும்பி பார்க்க வேண்டும்.

ஆண்டவரிடம் நமது ஆவிக்குரிய தீர்மானங்களையும், விருப்பங்களையும் தினமும் ஜெபத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும். அப்போது அவைகளை நாம் பெற்று கொள்ளும் வகையில் தேவன் தினமும் புதுபுது கிருபைகள், வல்லமைகள், ஆசீர்வாதங்களை தருகிறார். தேவனோடு நெருங்க நெருங்க, பாவங்களில் இருந்து, பிசாசின் பிடியில் இருந்தும் விடுதலை பெறுகிறோம்.

நம் கிறிஸ்துவ ஜீவியத்தில் இந்த அனுபவங்கள் இல்லாத காரணத்தால், அநேகர் கேலி, கிண்டல் செய்கிறார்கள். ஆனால் தியான வசனத்தின் 2வது பகுதியை பாருங்கள். “அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.” என்று வாசிக்கிறோம்.

நம் ஜீவியத்தில் தினமும் கர்த்தரை நோக்கி கூப்பிடும் அனுபவம் இருந்தால், புதிய அபிஷேகம், வல்லமை, ஆசீர்வாதம் மூலம் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தைகள் ஆகியவை கிறிஸ்துவை போல மாறிவிடும்.

அப்போது நம்மை சுற்றிலும் இருக்கும் கிறிஸ்துவை அறியாத மக்களிடையே தேவனை அறியும் பயம் ஏற்பட்டு, அவரை நம்புவார்கள். சுருக்கமாக கூறினால், நாம் ஒரு நடமாடும் கிறிஸ்துவின் சாட்சி பெட்டகமாக மாறி விடுவோம் என்பதாகும். இந்த அனுபவத்தை பெற தேவன் நமக்கு உதவி செய்வாராக.

ஜெபம்:

தேவனே, எங்களோடு பேசின நல்ல வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். பாவத்திலும், சாபத்திலும், அக்கிரமத்திலும் கிடந்த எங்களை தூக்கியெடுத்து கிறிஸ்துவாகிய பாறையின் மேல் நிறுத்தினீர். ஆனால் எங்கள் ஜீவியத்தை அனுதினமும் புதுபிக்க நாங்கள் தவறினது உண்டு. எங்களை மன்னியும். வரும் நாட்களில் தினமும் உமக்கு காத்திருந்து, தினமும் புது கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று கொள்ள உதவி செய்யும். அதன்மூலம் உமது வருகைக்காக எங்களை தகுதிப்படுத்தும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *