0 1 min 6 mths

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். சங்கீதம்.91.1

நாம் ஆராதிக்கும் தேவன் உன்னதமானவர். வானாதி வானங்களும் கொள்ளாத சர்வ வல்லவர். அவருக்கு முன்னால் எந்த மேன்மையும் பாராட்ட முடியாத நம் மீது அவர் காட்டும் இரக்கமும் கிருபையும் பெரியது.

நம் வாழ்க்கையில் கஷ்டங்களும் துயரங்களும் வரும் போது, தேவனை நோக்கி மன்றாடி ஜெபிக்கிறோம். நம் ஜெபத்தை கேட்கும் தேவனும் நமக்கு உயர்வையும் ஆஸ்தியையும் அளித்து மகிழ்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு, நமக்கென தனி மரியாதை, கணம் ஆகியவற்றை பிறரிடம் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம்.

மேலும் பிறருக்கு செய்த நன்மையான காரியங்களுக்காக, நம்மை மேன்மையாகவும் புகழ்ந்தும் பேச வேண்டும் என்ற ஆசை நமக்குள் ஏற்படுகிறது. அதற்காக பிறரிடம், நாம் செய்த காரியங்களை விவரித்து சொல்கிறோம்.

இந்நிலையில் 91வது சங்கீதத்தை எழுதியவர், உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்… என்று சங்கீதத்தை துவங்குகிறார். அதாவது, ஒரு மனிதனின் உயர்விலும் தாழ்விலும் தேவனுடைய மறைவில் இருக்க வேண்டும் என்கிறார்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு பின்னால் நாம் மறைந்து கொண்டால், எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு, நாம் தெரியமாட்டோம். மாறாக, நம்மை மறைத்திருக்கும் நபர் மட்டுமே தெரிவார். அதேபோல, உன்னதமானவரின் மறைவில் இருந்தால், நாம் எந்த காரியத்திலும் வெளியே தெரியமாட்டோம்.

நாம் உன்னதமானவரின் மறைவில் இருந்தால் மட்டுமே, சர்வ வல்லமையுள்ளவரின் நிழலில் தங்க முடியும். அவருடைய நிழலில் இருந்தால், நமக்கு எதிராக வரும் போராட்டங்களை அவர் எதிர்கொள்வார். இதனால் எந்த விதமான சத்துருவின் வல்லமையும் நம்மை மேற்கொள்ள முடியாது என்பதால் எந்தொரு நெருக்கத்தின் மத்தியிலும் சமாதானத்தோடு நாம் வாழ முடியும்.

இந்நிலையில், உன்னதமானவரின் மறைவில் நாம் எப்படி செல்ல முடியும்? என்ற சந்தேகம் ஏற்படலாம். இந்த உலகில் நாம் பெற்றவை எல்லாம் தேவன் தந்தவை என்பதை நினைவில் கொண்டால், நமக்குள் நான், என்னுடையது என்ற எண்ணம் மறையும்.

மேலும், பிறருக்கு உதவிகள் செய்யும் போது, இயேசு இந்த உலகில் நன்மை செய்கிறவராக வாழ்ந்தது போல, அவர் எனக்கு தருவதில் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்கிறேன் என்று கூறலாம். சுருக்கமாக கூறினால், நமது எல்லா செயல்பாட்டிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படும் வகையில் அவருடைய நாமத்தையே உயர்த்தினாலே போதும்.

அப்போது எந்த காரியங்களிலும் நம் சொந்த பெயர் வராது. எல்லா புகழும் கணமும் துதியும் அவருக்கே சென்று சேரும். அதே நேரத்தில் தேவனும் நம்மை மறந்துவிடுகிறவர் அல்ல. அவரும் நமக்கு தேவையான புகழ்ச்சியையும் கீர்த்தியும் தருகிறார். ஏனெனில் அவரை கணம் பண்ணுகிறவர்களை அவரும் கணம் பண்ணுகிறாரே.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் உன்னதமான தேவனே, உமது மறைவில் வந்து சேர்ந்து, சர்வ வல்லவரின் நிழலில் இளைப்பாற எங்களுக்கு உதவி செய்யும். அதற்கு எங்கள் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய திருத்தங்களை செய்து, நீர் தரும் கீர்த்தியையும் புகழ்ச்சியையும் பெற இரக்கம் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *