0 1 min 11 mths

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். சங்கீதம்: 115.8

இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளில், முதலாவதாக எந்த விக்கிரகங்களையும் செய்யக் கூடாது என்ற கட்டளை இடம் பெற்றுள்ளதை காண முடிகிறது. ஆனால் அதை பின்பற்ற தவறிய இஸ்ரவேல் மக்களின் மீது தேவனுக்கு கோபம் ஏற்பட்டது.

தனது மக்களின் கீழ்படியாமை கண்டு மனம் வருந்திய தேவன், உலகில் உள்ள எல்லா மக்களும் பரலோகத்திற்கு செல்வதற்கான வழியை திறக்கும்படி தனது குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பினார். அவரது சிலுவை மரணத்தின் மூலம் நாமும் பாவத்தில் இருந்து இரட்சிப்பை பெற்று, தேவ பிள்ளைகளாக மாறி உள்ளோம்.

ஆனால் நம்மை சுற்றிலும் எத்தனையோ பேருக்கும் இயேசுவே உண்மையான தெய்வம் என்ற சத்தியம் தெரியாமல் உள்ளது. அதன் விளைவாக மண், கல், மரம் போன்றவற்றில் செய்யப்பட்ட விக்கிரகங்களை தெய்வம் என்று எண்ணி வணங்கி வருகின்றனர்.

ஆனால் அந்த விக்கிரகங்களால் தங்களின் கைகளை அசைக்க முடிவதில்லை. கால்களால் நடப்பதில்லை. வாயினால் பேசுவதில்லை. காதுகளால் கேட்பதில்லை. மூக்கினால் முகருவதில்லை. ஏனெனில் அவற்றிற்கு உயிர் இல்லை.

தேவன் தனது சொந்த சாயலில் மனிதனை உண்டாக்கினார் என்று நாம் ஆதியாகமத்தில் வாசிக்கிறோம். ஆனால் இன்று மனிதன், இறைவனை தனது சாயலில் உண்டாக்க விரும்புகிறான். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, பல மிருகங்களின் கலவை உடன் கூடிய மனித உருவங்களை உருவாக்கி, அதை தெய்வம் என்கிறான். ஆனால் தேவனை போல மனிதனால், தான் உண்டாக்கின உருவத்திற்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

உயிரில்லாத அது எப்படி தெய்வம் ஆகும்? தெய்வம் அல்ல, அது ஒரு மனிதனாக கூட மாற முடியாது. ஆனால் அதை யோசிக்க தவறும் மனிதர்கள், அவை தாங்கள் கேட்கும் ஆசீர்வாதங்களை அளிக்கும் என்று நம்புகிறார்கள். அதற்காக பல பூஜைகளையும், வேண்டுதல்களையும் செய்கிறார்கள். ஆனால் உயிரில்லாத மனித படைப்பான அதனால் எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை மனிதன் ஏற்க மறுக்கிறான்.

இதனால் இது போன்ற விக்கிரகங்களை செய்கிறவர்களும், அவற்றை வணங்குகிறவர்களும், அந்த விக்கிரகங்கள் எப்படிப்பட்ட தன்மைகளை பெற்றிருக்கிறதோ, அப்படியே இருக்கிறார்கள் என்று தியான வசனம் குறிப்பிடுகிறது.

அதாவது வேதம் குறிப்பிடும் சத்தியத்தை அவர்களால் கேட்க முடியாது. உண்மையான இரட்சகரான இயேசுவை காண முடியாது. அவரே பாவத்தில் மீட்கிறவர் என்பதை வாயால் அறிக்கையிட முடியாது. சுவிஷேசம் அளிக்கும் விடுதலையின் காற்றை சுவாசிக்க முடியாது. ஆவியில் தேவனுடைய தொடுதலை உணர முடியாது. தேவன் காட்டும் பாதையில் நடக்க முடியாது. நல்ல காரியங்களை கைகளால் பற்றி கொள்ளவும் முடியாது.

தேவன் தனது சாயலாக மனிதனை படைத்து, தன்னை போலவே மனிதனும் மகிமையான ஒரு நபராக உலா வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்த மகிமையை இழந்த ஆதி மனிதனின் பாவ பரம்பரையை திரும்ப, மகிமை மிகுந்த சந்ததியாக மாற்ற, பாவமற்ற இயேசு தனது ஜீவனை கொடுத்தார்.

எனவே இந்த சத்தியத்தை அறிந்த நாம், பாவ இருளில் இருக்கும் மக்களுக்காக ஜெபிக்க வேண்டும். மேலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம், இந்த இரட்சிப்பின் வழிகளை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு முன்பாக, நாம் ஒரு தேவனுடைய பிள்ளை என்ற சாட்சியின் வாழ்க்கையை வாழ வேண்டும். அப்போது எந்த மனிதனையும் பிரகாசிக்க பண்ணும் ஒளியாகிய இயேசுவிடம் பலரும் வந்து சேர வழிவகை உண்டாகும்.

ஜெபம்:

எங்களை பாவத்தில் இருந்து மீட்ட அன்பு தெய்வமே, இந்த உலகில் எத்தனையோ பேர் உண்மையான தெய்வத்தை அறியாமல் பாவ இருளில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மெய் தெய்வமாகிய இயேசுவிடத்திற்கு கொண்டு வரும் ஒரு விளக்காக எங்களை மாற்றும். எங்களை காண்கிற எல்லாரும் உம்மை காணும் வகையில், நாங்கள் சாட்சியாக வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *