0 1 min 6 mths

என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். சங்கீதம்: 63.6

ஒருநாளின் காலை முதல் இரவு வரை, நாம் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறோம். இதனால் சரீரத்தில் அதிக களைப்பும், சோர்வும் உண்டாவது இயற்கை. அதை நீக்க, இரவில் நாம் ஒவ்வொருவரும் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கிறோம்.

ஆனால் அந்த நேரத்தில் தான், நமக்குள் பல்வேறு யோசனைகள் வருகின்றன. நாம் பழகும் நபர்கள், பகல் முழுவதும் செய்த காரியங்கள், நமக்கு நேர்ந்த தோல்விகள், கிடைத்த வெற்றிகள், எதிர்கால திட்டங்கள் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை விட, எதிர்காலத்தைக் குறித்த சிந்தை தான் இதில் அதிகம் இடம்பிடிக்கிறது.

எதிர்காலத்தில் எனக்கு என்னவாகும், நான் எப்படியிருப்பேன் என்று எட்டாத காரியங்களை யோசித்து, சிலருக்கு தூக்கமே கெட்டுப் போகிறது. இந்நிலையில் நமது தியான வசனத்தைப் பாடிய சங்கீதக்காரன், படுக்கையில் தேவனை குறித்து நினைப்பதாக கூறுகிறார்.

பொதுவாக நாம் நேரில் பார்த்த நபரைக் குறித்து தான், நம்மால் அதிகமாக சிந்திக்க முடியும். ஆனால் தேவனை நேரில் பார்க்காவிட்டாலும், அவர் செய்த நன்மைகளை எண்ணி பார்க்கிறார் சங்கீதக்காரன். இதனால் அவருக்குள் எந்தத் தூக்கமின்மைப் பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் இரவு முழுவதும் தேவனை தியானிக்க முடிகிறது. இதனால் அவரது தூக்கம் அல்லது ஓய்வு நேரம் இன்பமானதாக அமைகிறது.

உடல் பலவீனப்பட்டு அல்லது வியாதிப்பட்டு இருக்கும் பலருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறும் முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை. நேரமில்லாமல் வாழ்க்கை முழுவதும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களுக்கு, தூக்கமின்மை ஒரு பெரியப் பிரச்சனையாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மேற்கூறியது போன்ற பல்வேறு காரியங்களைக் குறித்த தேவையற்ற யோசனை எனலாம். எனவே நாம் ஓய்வெடுக்க செல்லும் முன் நம் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளையும் அவர் நடத்திய அற்புதமான பாதைகளையும் எண்ணி துதிப்போம்.

அப்படியொரு நன்றியுள்ள இருதயத்தோடு நாம் படுக்கைக்கு செல்லும் போது, நம் மனதில் பெரிய ஒரு சமாதானம் கிடைக்கிறது. கர்த்தர் எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் என்று விசுவாசத்தோடு, தூங்க முடிகிறது.

நாம் தூங்கினாலும், நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில், தேவனுடைய வல்லமை கிரியைச் செய்து, தேவனை இராமுழுவதும் தியானிக்க முடிகிறது. இதன்மூலம் நாம் நடக்க வேண்டிய வழிகளைத் தேவன் நமக்கு உணர்த்தி தருகிறார்.

எனவே இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுவதாக உணர்ந்தால், உடனே தேவன் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள். அப்போது தேவையற்ற யோசனைகள் நம்மில் இருந்து நீங்கும். ஒரு நிம்மதியான உறக்கம் கிடைப்பதோடு, தேவ சமூகத்தின் பாதுகாப்பையும் உணர முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்களுடைய எல்லா காரியங்களையும் தேவைகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் அதை உணராமல், வரும் காரியங்களைக் குறித்து தேவையில்லாமல் யோசித்து, எங்கள் ஓய்வு நேரத்தைச் சஞ்சலத்தோடு தூக்கமின்றி தவித்த நாட்கள் உண்டு. நீர் செய்த நன்மைகளைத் தியானித்து நன்றியுள்ள இருதயத்தோடு தூங்கச் செல்லும் போது, பெரிய சமாதானம் கிடைக்கும் என்று நீர் பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். வரும் நாட்களில் இதை எங்கள் வாழ்க்கையில் பயிற்சிக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *