0 1 min 2 mths

சிலந்திப் பூச்சி:

பூமியில் மகா ஞானமுள்ளவைகளின் பட்டியலில் அடுத்தப்படியாக சிலந்திப் பூச்சியை வேதம் குறிப்பிடுகிறது. சிலந்திப் பூச்சிகளில் அப்படி என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்று காண்போம்.

தனக்கான கூட்டை தானே கட்டிக் கொள்ளும் சிறப்பை பெற்றது சிலந்திப் பூச்சி. அதற்காக பிறரின் உதவியை எதிர்பார்ப்பது இல்லை. இதுபோல நம்முடைய ஆவிக்குரிய வீட்டை கட்ட பிறரின் உதவியை எதிர்பார்க்க கூடாது.

பலருடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் பிறரை சார்ந்து மட்டுமே இருக்கிறது. எப்படி ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, தேவனோடு ஐக்கியமாக இருப்பது என்பது குறித்து எனக்கு சொல்லி தர ஆள் இல்லை என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கேன். அதேபோல, எங்கள் சார்பாக ஜெபிக்க ஆட்கள் இல்லை. இதனால் தான் நான் ஆலயத்திற்கு வருவது இல்லை என்று சாக்குப்போக்கு கூட கூறுவார்கள்.

தனக்கான கூட்டை கட்டிக் கொள்ளும் சிலந்திகள், அதை இரு வரிசைகளில் அமைக்கின்றன. ஒரு வரிசை ஒட்டும் தன்மைக் கொண்டதாகவும், இன்னொரு வரிசை ஒட்டாத தன்மைக் கொண்டதாகவும் இருக்கும். இதற்கான மூலப்பொருளாக தனது வாயில் இருந்து சுரக்கும் நீரை சிலந்திகள் பயன்படுத்துகின்றன.

இதேபோல நாம் தேவனுக்கு செலுத்தும் துதியின் மூலம் கிடைக்கும் தேவ கிருபை மற்றும் வல்லமையால் நம் ஆவிக்குரிய வீட்டை கட்ட முடியும். இதில் ஒரு பக்கத்தில் உள்ள வரிசைகள் முழுவதும் ஒட்டும் தன்மை கொண்டதாக இருப்பது போல, நாம் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல செயல்கள் பிறரை கவரும் வகையிலும், அவர்களை தேவ அன்புக்குள்ளாக ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஒட்டும் வரிசைகளின் மீது சிலந்தி பூச்சி கால்களை வைத்து நடப்பது இல்லை. ஏனெனில் அதில் உள்ள வழவழப்பான தன்மையில் சிலந்தியே சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. அதேபோல நமது நல்ல கிரியைகளின் மீது நாம் நம்பிக்கையை வைத்து, அதை பற்றி பெருமையாக பேசினால் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்துவிடும்.

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே பலரும் தாங்கள் செய்யும் நல்ல காரியங்களைக் குறித்து, பிறரிடம் பெருமையாக கூறிக் கொள்வார்கள். இதன்மூலம் ஆதாயம் தேடுபவர்களும் உள்ளார்கள். ஆனால் அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் பின்னாளில் அவப்பெயருக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

சிலந்திகள் எப்போதும் ஒட்டாத தன்மை கொண்ட மற்றொரு வரிசையில் மட்டுமே கால்களை வைத்து நடக்கும். அதை தேவனுடைய கிருபை என எடுத்து கொள்ளலாம். நாம் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் தேவ கிருபையே என்ற சிந்தை இருந்தால், நமக்குள் எந்த பெருமையான எண்ணங்களும் ஏற்படாது.

கூட்டை அமைத்த சிலந்திக்கு மட்டுமே எந்த வரிசை ஒட்டாத தன்மை கொண்டது என்பது தெரியும். எனவே நம் மீது தேவன் பாராட்டியுள்ள கிருபை எந்த அளவுக்கு ஆழமானது என்பது நமக்கு மட்டுமே உணர முடியும். இதனால் தான் தேவனுடைய கிருபையை பற்றி நாம் கூறும் போது, மற்றவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்வதில்லை.

சிலந்திகள் வாழும் தன் கூட்டிலேயே தனது கால்கள் ஒட்டாத வரிசையில் மட்டுமே கால்களை வைத்து செல்வது போல, நாமும் இந்த உலகத்தில் இருந்தாலும், அதனோடு ஒட்டி வாழக் கூடாது. எந்த நேரத்தில் தேவனுடைய வருகை இருந்தாலும், அவரோடு போக நாம் தயாராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட இந்த கூட்டின் தன்மையை பற்றி அறியாத பிற பூச்சிகள், சிலந்தியின் வலையில் ஒட்டும் வரிசையில் சிக்கி கொள்கின்றன. இதேபோல நம்மிடம் உள்ள ஆவிக்குரிய வல்லமையால் கவரப்பட்டு நம்மிடம் வருபவர்களை, தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு ஏற்றவர்களாக மாற்றி, இரட்சிப்பில் நடத்த வேண்டியுள்ளது.

சிலந்தி வலையில் ஏதாவது ஒரு பூச்சி சிக்கிக் கொண்டால், உடனே தனது கூட்டையே அசைக்கும் சிலந்தி, அந்த பூச்சியை நோக்கி விரைந்து வருகிறது. ஏனெனில் சிக்கியுள்ள பூச்சி அங்கிருந்து தப்பி போகாமல் இருக்க அப்படி செய்கின்றன.

இதுபோல நம்மிடம் வருபவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல காலதாமதம் செய்யக் கூடாது. நாம் தாமதிக்கும் போது, தேவனுடைய அன்பின் பிடியில் இருந்து அவர்கள் தப்பி செல்ல வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலந்தி வலையில் சிக்கும் பூச்சிகளை தனது வாயில் இருந்து சுரக்கும் திரவம் மூலம் சுற்றி விடுகிறது. இதனால் மேற்கொண்டு அசைய முடியாமல், சிலந்திக்கு இரையாகி விடுகின்றன. நம்மிடம் வருபவர்களை தேவ வசனத்தாலும், தேவனுடைய அன்பின் கயிறுகளாலும் கட்டி, அவர்களுக்குள் இருக்கும் உலக மனிதனை கொன்று, ஆவிக்குரிய புதிய மனிதனாக உருவாக்க வேண்டியுள்ளது.

உலகில் அரண்மனைகள் முதல் காடுகள் வரை எந்த இடத்திலும் சிலந்திகளின் வலையை காண முடியும். அதேபோல நமக்கு சாதகமான இடத்தில் மட்டுமே சுவிசேஷம் கூற முடியும் என்ற மனநிலையில் வாழாமல், தேவன் நடத்தும் எல்லா இடங்களிலும் ஊழியம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். இதன்மூலம் இயேசு கூறுவது போல, தேவனை எங்கும் தொழுதுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குதித்து சிலந்தி வலையை கட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. இதில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை அவை சந்திக்கின்றன. ஆனாலும் அவை விடா முயற்சியுடனும், பொறுமையுடனும் செயல்படுகின்றன. நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டியெழுப்ப பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம்.

அதில் சோர்ந்து, துவண்டு போனால், நம்மால் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பெற முடியாது. ஆவிக்குரிய சோதனைகளில் தொடர்ந்து போராடி கொண்டே இருந்தால் மட்டுமே, வெற்றிகரமான ஆவிக்குரிய நபராக நாம் மாற முடியும். நாமே ஆவியில் சோர்ந்து போனால், மற்றவர்களை தேவனுக்குள் நடத்துவது கேள்விக்குறியாகிவிடும்.

சிலந்தி பூச்சிகளின் குட்டிகள் வரும் போது, அவை வளரும்படி தன்னையே அவற்றிற்கு உணவாக அளித்து தன் வாழ்நாளை முடித்து கொள்கின்றன. இதை தான் இயேசு நமக்கு செய்து காட்டினார். தனது ஜீவனை நமக்காக அளித்து, இன்று நாம் பரலோக பாதையை காண உதவினார்.

இயேசுவை போல, பலரையும் இரட்சிப்பில் நடத்தி, அவர்களின் வளர்ச்சிக்காக இந்த உலகில் பல தியாகங்களை நாமும் செய்ய வேண்டியுள்ளது. நம் இறப்பிற்கு பிறகு கூட, அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டியெழுப்பும் வகையில், நம் செயல்பாடுகளும், முடிவும் சாட்சியாக இருக்க வேண்டியது அவசியம்.

இப்படி சிலந்தி பூச்சியிடம் உள்ள மேற்கண்ட நல்ல காரியங்கள், நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சி பெரும் பயனுள்ளவையாக உள்ளது. நம் வாழ்க்கையிலும் இந்த சிறந்த காரியங்கள் இருந்தால், நாமும் தேவனுடைய பார்வையில் மிகா ஞானமுள்ளவர்களாக காணப்படுவோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *