0 1 min 4 mths

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப் போல புல்லை மேய்வாய்;… தானியேல்: 4.32

பாவத்தில் இருந்து இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் எல்லாரும், இராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. எனவே அதற்கான ஒரு மேன்மையான வாழ்க்கை முறை நம்மிடம் இருக்க வேண்டும்.

அப்படியில்லாத பட்சத்தில், அந்த விலையேறப்பட்ட இரட்சிப்பை நாம் இழக்க நேரிடம். அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக, பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக இருந்த நேபுகாத்நேச்சாரைக் கூறலாம்.

நேபுகாத்நேச்சாருக்கு அவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை அருளி, இஸ்ரவேல் மக்களை சிறையிருப்பில் அனுப்பியவர் கர்த்தர். ஆனால் தியான வசனங்களுக்கு முந்தைய வசனத்தில், தற்பெருமையான வார்த்தைகளை ராஜா கூறுகிறார். அப்படி அவர் கூறிய மறுநொடியில், வானத்தில் இருந்து உண்டான சத்தத்தைக் குறித்தே தியான வசனத்தில் காண்கிறோம்.

நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்ட தற்பெருமையின் விளைவாக 3 சாபங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

1. மனிதர்களில் இருந்து தள்ளப்படுவாய்:

மண்ணில் இருந்து தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன், முழுமையாக இருந்தான். அவனில் எந்தக் குறைப்பாடும் இருக்கவில்லை. ராஜா நேபுகாத்நேச்சாருக்குள் பெருமை வந்த போது, மனிதன் என்ற ஒரு முழுமையான தேவ சிருஷ்டிப்பில் இருந்து அவர் தள்ளப்பட்டார். அதாவது மனிதருக்குள் இருக்க வேண்டிய ஆவிக்குரிய மற்றும் சரீரத்திற்குரிய எல்லா அம்சங்களும் மறைந்துவிட்டன.

ஒரு மனிதனுக்குள் பெருமை வரும் போது, தான் யார் என்பதையே மறந்து விடுவான். தேவனை தேடுவதற்கு பதிலாக சொந்த முயற்சிகளில் ஈடுபடுவார்கள் அல்லது மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். ஆனால் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதால், தேவன் இல்லாத முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன.

2. வெளியின் மிருகங்களோடு ஐக்கியம்:

வெளியின் மிருகங்களுக்கு குறிப்பிட்ட தங்குமிடம் என்று எதுவும் இருக்காது. எங்காவது தூங்கி, ஏதாவது சாப்பிட்டு, எப்படியோ வாழும் தன்மைக் கொண்டவை. பெருமையின் விளைவாக, மனிதர்களில் இருந்து தள்ளப்பட்டு, தோல்விகளை அடையும் போது, மேற்கூறிய வாழ்க்கையைக் கொண்டவர்களோடு ஐக்கியம் கொள்ள நேரிடும்.

மிருகங்களாக வாழ்பவர்களுக்கு வேதம் கூறும் இரட்சிப்பு, பரிசுத்தாவியின் சந்தோஷம், நித்திய வாழ்க்கை போன்ற காரியங்கள், வீண் பேச்சுகள் அல்லது மூட நம்பிக்கை என்றே தோன்றும். ஏனெனில் அவர்கள், தேவன் சிருஷ்டித்த போது, இருந்த மனித தன்மையில் இல்லை. அவர்களோடு ஐக்கியம் வைத்து கொள்பவர்களும், நாளடைவில் அவர்களை போலவே மிருங்களாக மாறி விடுவார்கள்.

3. மாடுகளைப் போல புல்லை மேய்வாய்:

பரலோகத்தைக் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழும் மிருகத்தைப் போன்ற ஒருவருக்கு, இந்த உலகில் உள்ள நன்மைகள் மட்டுமே கண்களுக்கு தெரியும். அவற்றைப் பெறுவதற்காக, அல்லும் பகலும் ஓடுவார்கள். ஆனால் 23வது சங்கீதத்தில் தாவீது, தேவன் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்ப்பதாக கூறுகிறார்.

இந்த உலகில் நமக்கு தேவையான எல்லா நன்மைகளையும் தேவன் அளிக்கிறார். தேவனை தேடாமல் அவற்றைத் தேடி ஓடினால், இந்த உலக நன்மைகளை மட்டுமின்றி, பரலோகத்தில் நமக்காக வைக்கப்பட்டுள்ள ஜீவ கிரீடத்தையும் இழக்க நேரிடும்.
மேலும் மாடுகளைப் போல, கண் கண்ட இடங்களில் எல்லாம் மேய்ந்து திரிய வேண்டிய நிலை உருவாகும். ஆபத்தான நேரங்களில் தேவனுடைய பாதுகாப்பின் கரமும் நம்மோடு இருக்காது.

மேற்கண்ட 3 காரியங்களும் நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்ட பெருமைக்கு, பரிசாக கிடைத்தவை. இதனால் ஒரு ராஜாவிற்கு இருக்க வேண்டிய சகல மேன்மைகளையும் இழந்து, ஒரு காட்டு மிருகத்தைப் போல நேபுகாத்நேச்சார் அலைந்து திரிந்தார் என்று அதே அதிகாரத்தில் காண முடிகிறது.

நம் வாழ்க்கையில் தேவன் பல நன்மைகளை அளிக்கிறார். தகுதியில்லாத பதவிகளையும் உயர்வுகளையும் நமக்கு அருளுகிறார். அவற்றைக் கண்டு, ஆசீர்வாதங்களுக்கு உறைவிடமாகிய தேவனை நாம் மறந்து, சொந்தமாக பெருமைப் பாராட்டினால், அதுவே நமது மோசமான வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்.

சக்ரவர்த்தி நேபுகாத்நேச்சாருக்கும் இதே பிரச்சனை தான் வந்தது. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கிறார். இதை எப்போதும் நிலையில் வைத்து கொள்வோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தெய்வமே, நீர் எங்களுக்கு அளிக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் நினைத்து நன்றியுள்ள இருதயத்தோடு உம்மைத் துதிக்கிறோம். அந்த ஆசீர்வாதங்களை எண்ணி, பெருமை கொள்ளாமல், எப்போது உமது சமூகத்தில் தாழ்மையாக வாழ கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *