
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த ஃபினு கூறுகிறார்…
இன்று வரை நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே தேவ கிருபை தான். ஏனெனில் என் தாயின் கருவிலேயே அழிந்து போவேன் என்று டாக்டர்களால் எச்சரிக்கப்பட்டவன். எனவே எனது சாட்சியை இங்கே சுருக்கமாக கூறுகிறேன்.

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகரான ஏற்றுக் கொண்ட பெற்றோருக்கு நான் கருவில் தோன்றிய போது சந்தோஷம் பொங்கியது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநாட்களுக்கு தொடரவில்லை. ஏனெனில் நான் கருவில் வளர தொடங்கிய போது, என் தாய்க்கு உடலில் அடுத்தடுத்து பல தொந்தரவுகள் வர ஆரம்பித்தன.
இதனால் என் தாயினால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்த காரியத்தை குறித்து தொடர்ந்து ஜெபித்து வந்தார்கள். எனது தாயின் பெலவீனம் அதிகரிக்கவே, அவர்களை மருத்துவமனையில் சேர்ந்தார்கள்.
அங்கே பல மருத்துவ சோதனைகளை செய்த பிறகு, எனக்கு கருவில் சரியான வளர்ச்சி இல்லாத காரணத்தால், கருவை கலைத்துவிடுமாறு டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
இதை கேட்ட, எனது பெற்றோருக்கு, அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
தேவன் தந்த இந்த குழந்தையை, நாங்கள் கொல்லமாட்டோம் என்று கூறிவிட்டனர். நான் கருவில் வளர வளர, தாயினால் சரியாக உணவு உட்கொள்ள முடியாததால், எனக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களும் கிடைக்கவில்லை.
இதனால் ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும் போது, டாக்டர்கள் மிகவும் வருத்தத்தோடு எனது தாயை கவனித்தனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன் மருத்துவ சோதனை செய்த பிறகு, டாக்டர்கள் மற்றொரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
என் தாயின் கருவில் இருக்கும் கழுவு நீரை நான் குடித்துவிட்டதாகவும், இதனால் எனது மூளைக்கு சரியான வளர்ச்சி இருக்காது. அல்லது சரீரத்தின் ஒரு புறம் தளர்ந்து போன நிலையிலோ, பிறவி செவிடு அல்லது குருட்டு குழந்தையாக இருப்பேன். மேலும் எனது உருவம் ஒரு மனிதனை போல இல்லாமல், உடல் முழுவதும் முடியுடன் விகாரமான ஒரு குரங்கை போல இருப்பேன் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை கேட்ட, என் பெற்றோர் தேவனிடம் ஜெபத்தில் மன்றாடினர். என் தாயின் பிரசவ காலம் நெருங்கியது. டாக்டர்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல், எல்லா உறவினர்களையும் அழைத்து கொள்ளுங்கள். பிள்ளை இறந்த நிலையில் கூட பிறக்கலாம் என்று கூறிவிட்டனர்.
அதிர்ச்சியின் உச்சி கட்டத்திற்கு சென்ற என் பெற்றோருக்கு, அந்த நேரத்தில் உதவிக்கு தேவனை தவிர, வேறு யாரும் இருக்கவில்லை. அப்போது என் பெற்றோர் ஒரு முடிவுக்கு வந்தனர். இருவரும் சேர்ந்து ஜெபித்து, தேவனே இந்த குழந்தையை நல்ல நிலையில் எங்களுக்கு தந்தால், அவனை உமது ஊழியத்திற்காக தருவோம் என்று தீர்மானம் செய்தனர்.
எனது தாயின் பிரசவ வலி தொடங்கியது. மிகவும் கஷ்டப்பட்டாலும் சுக பிரசவத்தில் நான் பிறக்க, தேவன் உதவி செய்தார். டாக்டர்களால், தங்களின் கண்களையே நம்ப முடியாமல் திகைத்தனர். ஏனெனில் நான் நல்ல சிகப்பாக, அழகாக, எல்லா உறுப்புகளும் செயல்படும் குழந்தையாக பிறந்திருந்தேன்.
எதிர்காலத்தில் கூட இந்த குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். ஆனால் நான் இப்போது 30 வயதை தாண்டி, கேரளாவில் கர்த்தருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன். இதுவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கர்த்தர் என்னை நடத்தி வருகிறார்.
என் தாயின் கருவிலேயே என்னை கண்டு, முன் குறித்து அழைத்த தேவன், இன்று வரை, எனக்கு நல்லவராகவே இருக்கிறார். இன்றும் என்னை சுகத்தோடும், பலத்தோடும் நடத்தி வரும் என் தேவனை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.