இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார்…” மாற்கு.10.51

இந்த உலகத்தில் நம்பிக்கை என்ற வார்த்தை வளர்ச்சியை விரும்பும் மனிதர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல ஆவிக்குரிய உலகில் விசுவாசம் என்ற வார்த்தையும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்பிக்கை, விசுவாசம் என்ற இரண்டும் வளர்ச்சிக்கு பயன்படும் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

ஆனால் சில கஷ்டமான சூழ்நிலைகளில் நமக்கு இருக்கும் விசுவாசம் கரைந்து போகிறது. இனி இதற்காக தேவனை நம்பிக் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை என்ற நிலைக்கு வந்து விடுகிறோம். காணாத தேவன் மீது விசுவாசம் வைத்து கொண்டிருப்பதை விட, கண்ணில் தெரியும் மனிதர்களின் மீது நம்பிக்கை வைப்பது பரவாயில்லை என்று நினைக்கிறோம்.

அப்படி மனிதர்களின் மீது நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைந்தால் கூட, அதை பெரிய விஷயமாக நாம் எடுத்து கொள்வதில்லை. ஆனால் ஆண்டவரிடம் நாம் ஜெபித்த காரியங்கள் நடக்கவில்லை என்றால், மனம் சோர்ந்து போகிறோம்.

இயேசுவின் ஊழிய நாட்களில் குருடனாக இருந்த ஒரு மனிதன், இயேசுவின் வருகையை பற்றி அறிந்து, அவரிடம் தனது குறையை கூறி முறையிடுகிறார். அவனுக்கு இருக்கும் குறை என்னவென்று இயேசுவுக்கு தெரிந்தாலும், அவனுடைய விருப்பத்தை அறிய இயேசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

இதுபோல நம் வாழ்க்கையில் உள்ள தீராத நோய் அல்லது தீர்க்க முடியாத கடன் பாரம், சிக்கலான குடும்ப சூழ்நிலை என்று எதுவாக இருந்தாலும், அதை தேவனிடம் எடுத்து சொல்வோம். ஏனெனில் நமது மன விருப்பத்தை தேவன் அறிய விரும்புகிறார். தேவனிடம் நாம் காரியங்களை கூறும் போது, நமக்கு நன்மையானதை அவர் செய்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைத்தது நடக்காமல் போகலாம். அதற்காக தேவன் நம் ஜெபத்தை கேட்கவில்லை என்று அர்த்தமல்ல. ஏனெனில் மனித மூளையில் நாம் யோசிப்பதை விட, நம்மை படைத்த தேவனின் திட்டங்கள் பெரியதாக இருக்கும்.

நம் காரியங்களை தேவனிடம் கூறாமல், நான் இவ்வளவு கஷ்டப்படுவது தேவனுக்கு தெரியாதா? என்று சிலர் கூறுவதை கேட்டு இருக்கிறேன். வழியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்திமேயுவும், அந்த வழியாக சென்று இயேசுவை அப்படி நினைத்திருந்தால், அவனுடைய வாழ்க்கை பிச்சை போடும் மனிதர்களை நம்பியே தீர்ந்திருக்கும்.

இயேசுவை நோக்கி கூப்பிடும் பர்திமேயுவை, அவனை சுற்றிலும் இருந்தவர்கள், பேசாமல் இருக்கும்படி அநேகர் அதட்டியதாக தியான வசனத்தின் மேலே உள்ள வசனங்களில் காணலாம்.

நம் ஜெபத்தை கூட பலரும் தடுக்கிறார்கள். இப்படி ஜெபித்து கொண்டே இருந்தால் எப்படி? அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டியது தான் என்று ஆலோசனை கூறுபவர்கள் அநேகர். அதில் சிலர் அதட்டியும், சிலர் அன்பாக கூறியும் நம் ஜெபத்தை எப்படியோ தடுத்து விடுகிறார்கள்.

ஆனால் பர்திமேயு தொடர்ந்து முன்னிலும் அதிகமாக கூப்பிட்ட போது, இயேசு நின்று அவனை அழைக்கிறார். நம் ஜெபமும் இப்படி முழு மனதோடு கூடியதாக இருந்தால், இயேசு நம்மை வழியில் கதறவிட்டு கடந்து போகிறவர் அல்ல.

தம்மிடம் அழைத்து நம் தேவை இன்னது என்று அறிந்து செய்கிறவரை தான் நாம் ஆராதிக்கிறோம். எனவே எந்த சூழ்நிலையிலும் நம் ஜெபத்தில் விசுவாசத்தை கைவிடக் கூடாது. மனிதனை நம்பி ஏமாறுவதை விட, தேவனை விசுவாசித்து காத்திருந்தால், நாம் எண்ணி முடியாத அதிசயங்களை காண முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களுடைய தேவைகளை முழு மனதோடு, திடமான விசுவாசத்தோடு ஜெபத்தில் உமக்கு தெரிவித்து, அவற்றை நினைப்பதற்கு மேலாக பெற்று கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். அதற்காக எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

By admin