0 1 min 11 mths

கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…

இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகு, எங்கள் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவை எல்லாவற்றிலும் தேவன் ஜெயத்தை தந்தார்.

அந்த சோதனைகளின் மூலம் எங்களின் குடும்பத்தில் தேவ அன்பு அதிகமானதே தவிர, குறையவில்லை! அந்த தேவ அன்பினால் எந்த மனிதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன், எனது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், கை, கால்கள் பலமிழந்து போயின. இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உருவானது. ஒரு கட்டத்தில் எனது பிள்ளைகளுக்கு மூன்று நேரம் உணவு கூட அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் என் மனைவி, பக்கத்து வீடுகளில் இருந்து பாக்கு கொட்டைகளை வாங்கி வந்து, அதை வெயிலில் காய் வைத்து, அதன் மண்டியில் மொத்தமாக விற்று வியாபாரம் செய்து பிழைத்து வந்தோம். எங்கள் குடும்பம் இவ்வளவு கஷ்டத்தில் சென்ற போதும், தேவனை மறக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கி வந்த பாக்கு கொட்டைகளை, எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் வெயிலில் காய வைத்துவிட்டு மாலையில் எடுக்க மறந்துவிட்டோம். இரவில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த எனக்கு, ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. எங்கள் வீட்டின் மேலே இருந்து சத்தம் வந்ததால், மெதுவாக நடந்து வெளி வந்து மேலே மாடியை நிமிர்ந்து பார்த்தேன்.

அப்போது எங்களின் வீட்டின் மேலே இருந்த ஒரு திருடன், மாடியில் காய வைத்திருந்த பாக்கு கொட்டைகளை ஒரு மூட்டையில் கட்டி, அதை தோளில் சுமந்து கொண்டு கீழே இறங்கி கொண்டிருந்தான்.

நான் திருடனை பார்த்துக் கொண்டே நிற்க, அவன் அப்படி கதிகலங்கி போய் நின்றுவிட்டான். திருடன் எதுவும் பேசவும் இல்லை, தப்பியோடவும் இல்லை. தோளில் இருந்த மூட்டையோடு நின்றுக் கொண்டே இருந்தான்.

அந்த நேரத்தில் எனது இருதயத்தில் தேவ அன்பு நிரம்பியது. என்னை கண்ட பிறகு அசையாமல் நின்ற திருடனை நோக்கி, கீழே இறங்கி வாங்க! என்று கூறினேன். அவனும் எந்த பதட்டமும் இல்லாமல் கீழே இறங்கி வந்தான். அவன் தப்பியோட கூட முயற்சிக்காமல் அப்படியே நின்றான். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் வந்துவிட்டனர்.

திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைப்போம் என்று எல்லோரும் ஆலோசனை கூறினர். அவனை அடித்து, உதைக்கவும் சிலர் தயாராகினர். அவர்களை தடுத்த நான், என் மனைவியிடம் திருடனுக்கு டீயும், சாப்பிடுவதற்கு ஏதாவதும் இருந்தால் கொடுக்க கூறினேன்.

பக்கத்து வீட்டார் அனைவரும் முறுமுறுத்து கொண்டே சென்றுவிட்டனர். நாங்கள் அளித்த டீயும், சில திண்டிகளையும் தர்மசங்கடத்தோடு சாப்பிட்டு விட்டு, திருடன் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

சில நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு வந்த ஒரு நபர், வந்தவுடனேயே என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அதிர்ச்சியுடன் நீங்கள் யார் என்று கேட்டான்.

அதற்கு அவர், சில நாட்களுக்கு முன் உங்கள் வீட்டில் பாக்கு கொட்டைகளை திருட வந்து சென்ற நபர் நான் தான். என்னை மன்னித்துவிடுங்கள். நான் பல இடங்களில் திருடி, அடி, உதை எல்லாம் வாங்கி இருக்கிறேன். ஆனால் உங்கள் வீட்டில் திருட வந்த பிறகு எனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவம் மூலம், நான் திருடுவதையே விட்டுவிட்டேன். என்னை எப்படி உங்களால் மட்டும் அப்படி எதுவும் செய்யாமல் திரும்ப அனுப்ப முடிந்தது? என்று கேட்டார்.

அப்போது இயேசுவின் அன்பை குறித்து விளக்கி, அவருக்கு சுவிஷேசம் அறிவித்தேன். அன்றிலிருந்து தேவாலயத்திற்கு வர ஆரம்பித்த அவர், இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளையாக மாறினார். இன்று அநேகருக்கு இயேசுவை அறிவிக்கும் ஒரு சாட்சியாக உருமாறி உள்ளார்.

பாக்கு கொட்டையை திருட வந்த நபரை பிடித்து, போலீஸில் ஒப்படைத்திருந்தால் கூட அவர் திருந்தி இருக்கமாட்டார். ஆனால் தேவனுடைய அன்பினால் மன்னித்த போது, இயேசுவின் பிள்ளையாக மாறினார்.

தேவன் என்னில் அளித்த அவரது அன்பை பகிர்ந்தளிக்க ஒரு வாய்ப்பை அளித்து, அதன்மூலம் அந்த சகோதரனை இரட்சிப்பிற்குள் நடத்த முடிந்ததை எண்ணி நன்றியுள்ள இருதயத்தோடு அவரை துதிக்கிறேன்.

இன்று என் குடும்பம் நல்ல நிலையில் வளர்ந்து, கஷ்டங்கள் எல்லாம் மறைந்துள்ளன. கர்த்தர் என் வாழ்க்கையில் செய்த எல்லா நன்மைகளுக்காக, அவரை நன்றியுள்ள இருதயத்தோடு மீண்டும் துதிக்கிறேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *