கோவையைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…

கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த நான், சிறு வயது முதலே எந்த காரியமானாலும் ஜெபித்த பிறகு, செய்து பழக்கப்பட்டேன். அதன்மூலம் பல நன்மைகளையும் தேவனிடமிருந்து பெற முடிந்தது.

எனது கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக சென்னையை அடைந்தேன். திருமண வயதை எட்டிய எனக்கு, பல இடங்களில் பெண் பார்த்தும், எதுவும் அமையவில்லை. இதனால் எனது திருமணத்தை தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.

எப்படியென்றால், “ஆண்டவரே, எனக்கு எந்த மாதிரியான பெண் பொருத்தமாக இருக்கும் என்பது என்னைவிட உமக்கு நன்றாக தெரியும். அவள் எந்த மொழியாகவும், எந்த ஊரை சேர்ந்தவளாகவும் இருக்கலாம். ஆனால் எனது வாழ்க்கையில் உள்ள குறைவான பகுதிகளை அவள் நிரப்புகிறவளாகவும், அவளது குறைவான பகுதிகளை நிரப்புகிறவனாக நானும் இருக்க வாஞ்சிக்கிறேன்.” – என்று ஜெபித்து வந்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்ததால், பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன். புதிய இடம், புதிய மொழி, புதிய சூழ்நிலை என என்னைச் சுற்றிலும் எல்லாம் புதுமையாக இருந்தன. ஆனால் தேவ நடத்துதல் மூலம் நான் பெங்களூரிலேயே தொடர்ந்து பணியாற்ற நேர்ந்தது. சில நாட்களாக தேடி, தேவனை உண்மையாய் ஆராதிக்கிற ஒரு சபையை, என் ஆபீஸிற்கு அருகிலேயே கண்டுபிடித்தேன்.

அங்குள்ள பாஸ்டரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு, பேச ஆரம்பித்தேன். என்னை விசாரித்த அவர், திருமணத்தைக் குறித்து கேட்டார். நான் வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினேன். அப்போது அவர் திடீரென யாரோ ஒருவருக்கு போன் மூலம் தொடர்புக் கொண்டு, அவரிடம் ஒரு பையனை குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், உடனே பெண்ணை குறித்த தகவல் அடங்கிய பயோடேட்டாவை கொண்டு வருமாறும் கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நான் குழப்பத்தில் இருந்த நிலையில், சர்ச்சிற்கு அருகிலேயே எனக்கு தங்குவதற்கான ஏற்பட்டையும் பாஸ்டர் செய்துவிட்டார். இந்நிலையில் போனில் பேசியவர் நேரில் வந்து பயோடேட்டாவை கொடுத்து விட்டு சென்றார். அதை என்னிடம் கொடுத்த பாஸ்டர், பெண்ணை பாருங்கள். பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்றார். நான் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த போட்டோவை வாங்கிக் கொண்டேன். ஆனால் போட்டோவை பார்க்கவும் இல்லை, அதை பற்றி யோசிக்கவும் இல்லை.

அதே வாரத்தில் நான் சொந்த ஊருக்கு சென்ற போது, வீட்டில் உள்ளவர்களிடம் காட்டினேன். அவர்களும் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறிவிடலாம் என்ற முடிவோடு பெங்களூர் திரும்பினேன். ஆனால் பயோடேட்டாவை ஊரிலேயே விட்டுவிட்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன்.

பாஸ்டரை சந்தித்த நான், பெண்ணை பிடிக்கவில்லை, வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் பெண்ணின் போட்டோவை கேட்கவே, அது வீட்டில் இருக்கிறது, தபால் மூலம் அனுப்புவார்கள் என்று கூறிவிட்டேன். இப்படியே சில வாரங்கள் கடந்தன. பெண்ணின் வீட்டில் பாஸ்டரிடம் அவ்வப்போது கேட்கவே, அவரும் மெளனம் சாதித்து வந்துள்ளார்.

எனக்கும், பயோடேட்டா அளிக்கப்பட்ட பெண்ணிற்கும் இடையே முன்பின் அறிமுகம் எதுவும் இருக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பயோடேட்டாவில் எனது தமிழ்நாடு மொபைல்போன் நம்பர் மட்டுமே கொடுத்திருந்தேன். பெங்களூர் சென்று நான் வாங்கிய புதிய செல்போன் நம்பர், என்னோடு தங்கியிருந்த நண்பன் ஒருவனுக்கும், ஊரில் உள்ள எனது பெற்றோருக்கும் மட்டுமே கொடுத்திருந்தேன்.

இந்த விஷயத்தில் எனக்கு இரு மனம் தொடரவே, இக்காரியத்தை தேவனிடம் ஒப்புக் கொடுத்தேன். எனது ஜெபத்தில் தேவனிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டேன். பயோடேட்டாவை அளித்த பெண்ணே எனக்கு நியமிக்கப்பட்ட பெண் என்றால், அந்த பெண்ணே எனது பெங்களூர் செல்போன் நம்பருக்கு ஒரு வாரத்தில் போன் செய்து பேச வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், இதில் தேவ சித்தம் இல்லை என்று முடிவு செய்வேன் என்றேன்.

ஒவ்வொரு நாளும் இப்படியே ஜெபித்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே வேளையில் எனது செல்போன் நம்பரை சபையில் புதியதாக யாருக்கும் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இந்நிலையில் நான் விதித்திருந்த கடைசி நாள் வந்தது. அன்று மதியம் ஆபீஸில் இருக்கும் போது, ஒரு புதிய எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கலக்கத்தோடு போனை எடுத்த எனக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

என்னிடம் திருமணத்திற்காக பயோடேட்டா அளிக்கப்பட்ட அதே பெண் லைனில் இருந்தார். எனக்கு பேச்சே வரவில்லை. தேவ சித்தத்தை புரிந்து கொண்ட நான், நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தரை துதித்தேன். அது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவித்த போது, அவர்கள் நம்பவில்லை. மேலும் தேவன் உனக்கு மட்டும் அடையாளம் காட்டுவாரா? எங்களுக்கு காட்டமாட்டாரா? என்று எதிர் கேள்விகள் எழுந்தது.

தேவ சித்தம் எப்படியும் நிறைவேறும் என்பதை அறிந்த நான், தொடர்ந்து ஜெபித்தேன். கர்த்தர் எனக்கும், எனது தாய்க்கும் தரிசனங்களின் மூலம் அவரது சித்தத்தை தெரியப்படுத்தினார். மேலும் பெண் வீட்டாருக்கும் தரிசனங்களை காட்டினார். இதனால் மொழி, இனம், இடம் என எல்லாம் வேறுபட்டாலும், கர்த்தரால் நாங்கள் கணவன், மனைவியாக இணைய தேவன் உதவி செய்தார்.

உண்மையாகவே தேவன் இணைத்த எங்கள் குடும்ப வாழ்க்கை இன்று வரை ஆசீர்வாதமாகவே இருக்கிறது. எங்கள் குடும்பத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப்படுத்துகின்றனர். எங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த எல்லா நன்மைகளுக்காக கர்த்தரை முழு இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன்.

திருமணத்தில் பலர் தங்களின் சொந்த சித்தத்தை செய்ய விரும்பி, இன்று எவ்வளவோ துக்கங்களையும் வேதனைகளையும் அடைகின்றனர். ஆனால் தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தால் எல்லாம் நன்மையாகவே முடியும் என்பதற்கு எங்களை தேவன் சாட்சியாக வைத்துள்ளார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *