
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில், சிலர் தேர்வுகளை எழுதியும் வருகிறார்கள். தேவ பிள்ளைகளாகிய நாம் மற்றவர்களை பார்த்து எழுதி மார்க் வாங்கி தேர்ச்சி பெறுவது தேவனுடைய பார்வையில் தவறு என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் நாம் நன்றாக படிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில், படிக்காமல் வந்த ஒருவர் தேர்வில் உதவி கேட்கும் போது, அவருக்கு உதவலாமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் உண்டு.
அனுபவித்தது:
நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, என்னுடன் அறையில் தங்கியிருந்த சிலர் தேர்வுகளில் பார்த்து எழுத உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். இதனால் குழப்பமடைந்த எனக்கு பல்வேறு சிந்தனைகள் வந்தன.
தேர்வில் மற்றவர்கள் நம்மிடம் உதவி கேட்பது என்பது, இயலாதவர்கள் நம்மிடம் உதவிக்காக வேண்டுவது போன்றது. உன்னைப் போல பிறனையும் நேசி என்று இயேசு கூறி இருக்கிறாரே(?). பிறருக்கு உதவுவதில் கர்த்தருடைய பிள்ளைகள் உதாரணக் குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நம்மிடம் கேட்கிறவனுக்கு கொடு என்றும் இயேசு கூறியிருக்கிறார் என்று இப்படி பல சிந்தனைகள் வந்தன.
ஆனால் மேற்கூறிய இந்த யோசனைகள் மூலம் எனக்குள் சமாதானம் இன்றி குழப்பமான மனநிலை ஏற்பட்டது. இதில் எனக்கு ஒரு தெளிவான விளக்கம் வேண்டுமே என்று மனதில் எண்ணினேன்.
கேட்டது:
அப்போது கிறிஸ்தவ ரேடியோ ஒன்றில் வரும் தேவ செய்திகளை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். இந்த குழப்பத்தோடு அன்று நிகழ்ச்சியை கேட்டு கொண்டிருந்தேன்.
அன்று தேர்வுக்கு தயாராகும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களுக்காக ஜெபித்துவிட்டு, தேவ ஊழியர் ஒருவர் செய்தி அளித்தார். அப்போது என் மனதில் இருந்த சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது.
அந்த செய்தியில், நாம் தேர்வில் மற்றவர்களுக்கு காப்பி அடிக்க உதவுவது எப்படிப்பட்டது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்க முடியும். ஒரு குடிகாரன் வந்து நம்மிடம் குடிப்பதற்கு பணம் கேட்கும் போது, நாம் கொடுப்பதில்லை. ஏன்? அவன் பாவம் செய்யாமல் இருக்க நாம் தடுக்கிறோம். இதேபோல, படித்த ஒவ்வொரு மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அறியவே, தேர்வு நடத்தப்படுகிறது.
அப்போது ஒவ்வொருவரும் எவ்வளவு படித்துள்ளார்களோ, அதை தான் எழுத வேண்டும் என்பது விதிமுறை. அப்படியிருக்க, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ வேண்டும் என்று நாம் நினைக்கும் நபர், படிக்காமல் சோம்பேறியாக இருந்து தாமாக அந்த கஷ்டத்தை வருவித்துள்ளார்.
அவருக்கும் வாய்ப்பு, வசதி இருந்தது. ஆனால் அதை அலட்சியமாக எண்ணியதால், இன்று கஷ்டப்படுகிறார். எனவே உண்மையில் அவர் கஷ்டப்படுகிறவர் அல்ல. தன் காரியத்தில் பொறுப்பு இல்லாமல் இருந்ததால், கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
இப்படியிருக்க அவருக்கு தேர்வில் காப்பி அடிக்க நாம் உதவி செய்யும் போது, அவரது தவறான செயலுக்கு நாமும் உடன்படுகிறோம். அவரது சோம்பேறித்தனமான போக்கை சரி என அங்கீகரிப்பதாக ஆகிவிடும்.
சுருக்கமாக கூறினால், நமக்கே தெரியாமல் மற்றவருக்கு உதவுகிறோம் என்ற எண்ணத்தில் அவரது பாவத்திற்கு துணை நிற்கிறோம். எனவே இது கூட ஒரு பிசாசின் சதி ஆலோசனை என்றே கூறலாம் என்று அந்த தேவ ஊழியர் கூறி என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.
சிந்தித்தது:
மேற்கண்ட அந்த செய்தியின் மூலம் என் மனதில் இருந்த குழப்பம் நீங்கி, தெளிவும் சமாதானமும் கிடைத்தது. என்னிடம் உதவி கேட்ட நண்பர்களிடம் அப்படி நான் செய்யக்கூடாது என்று கூறினேன்.
எனவே தேர்விற்கு செல்லும் தேவ பிள்ளைகள் ஜெபித்துவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால், தெரிந்த, படித்த காரியங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதுங்கள்.
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களின் உதவியை நீங்கள் கேட்காதீர்கள். பதில் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவும் போகாதீர்கள். இது இரண்டும், தேவ பார்வையில் பாவம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அப்போது நம் தேவைகளை அறிந்த தேவன், நமக்குள் நிறைவான ஆசீர்வாதங்களையும் மனதில் சமாதானத்தையும் தருவார். நம் வீடுகளில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கும், உங்களுக்கு தெரிந்த தேவ பிள்ளைகளுக்கும் இந்த காரியங்களை பகிருங்கள்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.