0 1 min 1 mth

தேவனை நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக காண்கிறோம். சிலர் அவரை புகார் பெட்டியாக பார்க்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் இல்லாத காரியங்களை எல்லாம் அவரிடம் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தேவனை வியாபாரியாக காண்கிறார்கள். அதாவது எனக்கு இந்த காரியத்தை செய்தால், நான் இதை செய்கிறேன். எனக்கு 10,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தால், தசமபாகமும் காணிக்கையும் அளிக்கிறேன் என்பது போல.

சிலருக்கு தேவன் அந்நியனாக தெரிகிறார். அவர்களுக்கு தேவைப்படும் போது, ஜெபிப்பார்கள். தேவையானதை தேவன் தருவார். அதற்காக அவருக்காக பயபக்தியோடு வாழ வேண்டும் என்றெல்லாம் இல்லை என்கிறார்கள். இப்படி கிறிஸ்தவர்கள், கர்த்தரை பல மாதிரியாக காண்கிறார்கள்.

கேட்டது:

இவர்கள் இடையே 3 தலைமுறைகளை கண்ட ஒரு இரட்சிக்கப்பட்ட முதியவர் குறித்து அறிந்தேன். இளம் வயதில் தேவனை அறிந்த அவர், தனது முதிர் வயதிலும் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்.

இதை கண்ட பலருக்கும் இதற்கான காரணத்தை அறிய ஆவல் ஏற்பட்டது. அதற்கு பதிலளித்த முதியவர் இப்படி கூறினார். நான் இரட்சிக்கப்பட்ட சில ஆண்டுகளில், தேவன் என்னை முழுமையாக மாற்றினார்.

அதுவரை என்னால் விட முடியாமல் இருந்த பல பாவங்களில் இருந்து விடுபட்டேன். மேலும் எதிர்பாராத பல ஆசீர்வாதங்களால் தேவன் நிரப்பினார். இதனால் நான் தேவனிடம் குறிப்பிட்ட காரியங்கள் எனக்கு இல்லை என்று எதுவும் கூற முடியவில்லை.

ஏனெனில் கடந்த காலங்களில் அவர் நான் நினைத்ததை விட பெரிய காரியங்களை என் வாழ்க்கையில் செய்திருந்தார். தேவன் நன்மை செய்கிறார் என்பதற்காக, என் எதிர்பார்ப்பு அதிகரிக்கவில்லை. மாறாக, அவர் என் தேவைகளை அறிந்திருக்கிறார் என்ற விசுவாசம் அதிகரித்தது.

பல இக்கட்டான நேரங்களிலும், அவர் எனக்கு நல்லதை மட்டுமே செய்வார் என்ற நம்பிக்கை அதிகரித்தது. இதனால் பதட்டம், பயம், ஏமாற்றம் ஆகியவை ஏற்படுவது குறைந்தது. அவ்வப்போது அவர் செய்த நன்மைகளை நினைத்து, அவரை துதிப்பேன்.

இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தர் நல்லவர் என்ற வார்த்தை என் மனதில் வர தோன்றும். தேவனை துதிக்கும் போது மட்டுமின்றி, அவ்வப்போது கர்த்தர் நல்லவர் என்று வாயில் கூற ஆரம்பித்தேன்.

நான் சந்திக்கும் விசுவாசிகள் பலரும், தங்களின் வாழ்க்கையில் உள்ள குறைகளைக் கூறும் போது, நான் அவர்களை ஆறுதல்படுத்த கூறுவது, கர்த்தர் நல்லவர் என்பதே. இதனால் பலரும் ஆறுதலடைந்து, கிறிஸ்துவிற்குள் ஸ்திரப்பட்டார்கள்.

என் குடும்பத்தில் உள்ளவர்களும் என்னையே பின்பற்றினார்கள். இதனால் குடும்பத்தில் புதியவர்களின் சேர்க்கையும், அன்பானவர்களின் பிரிவும் எனக்கு பெரிய காரியமாக தெரியவில்லை. என்னையும் தேவன் ஒருநாள் தன்னோடு சேர்த்து கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளில் கர்த்தர் நல்லவராக இருக்கிறார். இனியும் இருப்பார் என்று கூறி முடித்தார் அந்த முதியவர்.

சிந்தித்தது:

மேற்கண்ட முதியவர் கூறியது போல, தேவன் எப்போதும் எல்லாருக்கும் நன்மை செய்கிறவர்களாகவே இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை நாம் பார்க்கும் பார்வை தான் மாறுகிறது.

அவர் செய்த நன்மைகளை அவ்வப்போது நினைத்து நன்றி கூறுவதோடு, கர்த்தர் நல்லவர் என்று கூறுவதன் மூலம் நம் மனதில் உள்ள அவிசுவாசங்களும் தேவையில்லாத துக்கங்களும் நீங்குகின்றன. மேலும் தேவனே நல்லவராக இருக்கும் போது நாமும் அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

தேவன் எனக்கு அது செய்யவில்லை, இது தரவில்லை என்று நாம் புலம்புவதன் மூலம் நமக்குள் இருக்கும் சமாதானத்தை இழக்கிறோம். மேலும் உலக நன்மைகளில் மட்டுமே நாம் அதிகமாக சார்ந்து வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

கர்த்தர் என் வாழ்க்கையில் செய்த எண்ணிலடங்கா நன்மைகளை எண்ணி பார்த்த போது, கர்த்தர் நல்லவர் என்று சொல்ல தோன்றுகிறது. அதை அவ்வப்போது சொல்வது கஷ்டமான காரியமும் அல்ல. இதை படிக்கும் நீங்களும் இனி அவ்வப்போது கர்த்தர் நல்லவர் என்று சொல்ல போகிறீங்க தானே?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *