0 1 min 3 mths

இன்றைய கிறிஸ்துவர்களின் ஜெபமும், விண்ணப்பமும் என்னவென்றால், தேவன் எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என்பதே. நாம் கேட்கும் பல தேவ செய்திகளிலும், இதை குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் தேவன் எப்போதும் நம்மோடு இருந்தால், எப்படி இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

கேட்டது:

இது குறித்து கூறும் போது, ஒரு தேவ ஊழியரின் செய்தியில் கேட்ட ஒரு உண்மை சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. கேரளாவில் நடந்த அந்த சம்பவத்தை அவர் இப்படி தான் கூற துவங்கினார்…

தேவ ஊழியர் ஒருவரின் மகள், சின்ன வயதில் இருந்தே தேவ பயத்திலும், விசுவாசத்திலும் வளர்க்கப்பட்டாள். பள்ளிப் படிப்பை முடித்த அந்த பெண், கல்லூரி படிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பெற்றோரால் ஜெபத்துடன் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். கல்லூரிக்கு சென்ற பிறகும், தேவன் மீதான அன்பிலும், விசுவாசத்திலும் அவளுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்படவில்லை.

அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் உள்ள தோழிகள், பலவிதமான பாவங்களில் ஈடுபட்ட போதும், தான் அறிந்த சத்தியத்திற்கும், தேவனுக்கும் பயந்து வாழ்ந்த அவள், அவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதனால் கல்லூரியில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகினாள்.

எனினும் தேவனோடு உள்ள ஐக்கியம் அவளுக்கு, பெரிய ஆறுதலை அளித்தது. 3 ஆண்டுகள் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்தாள். கல்லூரியின் இறுதி தேர்வுகள் முடிவடைந்து, எல்லா தோழிகளும் வீடு திரும்பும் கடைசி நாளும் வந்தது. தோழிகள் இடையிலான பிரிவு வருத்தங்கள் நீங்க, எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமாவிற்கு போகலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தங்களுடன் தங்கிய தேவ ஊழியரின் மகளோ, வழக்கமாக இது போன்ற காரியங்களுக்கு மறுத்து விடுவாள். இதனால் தோழிகள் வருத்தமடைந்தனர். கடைசியாக, அவளது தோழிகள் எல்லாரும் சேர்ந்து, தங்களுடன் இன்று ஒரே ஒரு தடவை சினிமாவிற்கு வருமாறு, அவளை மிகவும் வேண்டினர்.

தோழிகளின் வேண்டுதலை தவிர்க்க முடியாமல் திணறிய தேவ ஊழியரின் மகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முடிவாக, தனது தந்தையிடம் போனில் அழைத்து அனுமதி கேட்டுவிட்டு, சினிமாவிற்கு செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

போனில் தனது நிலையை தெரிவித்த மகள் மீது வழக்கமான தந்தைகளை போல கோபப்படவோ, எரிச்சல் அடையவோ செய்யாத தேவ ஊழியர் சாந்தமாக எல்லாவற்றையும் கேட்டார். அதன்பிறகு அவர், நீ எப்போது எங்கு சென்றாலும் ஜெபித்துவிட்டு தானே செல்வாய்? அதேபோல இதற்கும் ஜெபித்துவிட்டு, தேவனையும் கூட அழைத்து செல் என்று கூறிவிட்டார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தேவ ஊழியரின் மகள், ஜெபிக்க துவங்கினாள். ஜெபத்தில் இயேசுவே, என்னோடு கூட வாரும், என்னை பாதுகாத்துக் கொள்ளும் என்று விண்ணப்பித்தாள். அப்போது தேவன், நான் தியேட்டரின் கேட் வரை தான் வருவேன்.

உள்ளே நீ தனியாக தான் செல்ல வேண்டும். கேட் வரை நான் உன்னை பாதுகாக்க முடியும். அதற்கு மேல் நீயே உன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அப்போது ஆவியில் உணர்த்தப்பட்ட அந்த பெண், தனது தோழிகளிடம் நீங்கள் எங்கே சென்றாலும் தனியாக தான் செல்வீர்கள். ஆனால் நான் எங்கு சென்றாலும், என்னை காக்கும் தேவன் என்னோடு வருவார்.

பாவத்திற்கு வழிவகுக்கும் இடங்களுக்கு நான் சென்றால், அவர் வரமாட்டார். அவர் பாவம் அறியாதவர், பாவம் செய்யாதவர், பாவத்தை வெறுத்து, பாவியை நேசிக்கிறவர் என்பதால், நான் உங்களுடன் வர முடியாத நிலையில் உள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள், என்றாள்.

இதை கேட்டு ஆச்சரியப்பட்ட தோழிகள், இவ்வளவு நல்ல தேவனை விட்டுவிட்டு, நீ எங்களோடு வர நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. நம் அறையிலேயே அமர்ந்து நேரத்தை செலவிடுவோம், என்றனர்.

முடிவில் துக்கத்தை நீக்கி சமாதானத்தை அருளும் இயேசுவை குறித்து, தோழிகளுக்கு அவள் கூறினாள். இதில் தோழிகளின் பிரிவு துக்கம் நீங்கி, எல்லாருடைய மனதிலும் தேவ வசனமாகிய விதை விதைக்கப்பட்டது, என்று கூறி அந்த சம்பவத்தை முடித்த தேவ ஊழியர், தனது பிரசங்கத்தை தொடர்ந்தார்.

சிந்தித்தது:

இந்த சம்பவத்தில் இருந்து, நம்மோடு தேவன் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்து ஜெபித்தால் மட்டும் போதாது. அவர் பரிசுத்தர் என்பதால், அவரை வரவேற்று நம்மோடு வைத்துக் கொள்ளும் வகையில், நாமும் பரிசுத்தமாக நம் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.

நம் வாழ்க்கையில் வரும் இக்கட்டான சூழ்நிலைகளில் சொந்தமாக ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிட்டு, பின்னால் வருத்தப்படாமல் ஜெபித்து தேவனிடம் ஆலோசனை கேட்போம். அப்போது அவர் நமக்கு தெளிவான ஆலோசனையை அளிப்பார்.

அதேபோல பெற்றோரிடம் இது போன்ற கேள்விகளை கேட்கும் பிள்ளைகளின் மீது கோபப்படாமல், தேவனிடம் ஆலோசனை கேட்கும் பழக்கத்தை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதில், பெற்றோரும் கவனமாக செயல்பட வேண்டும். அப்ப இனிமேல் தேவன் நம்மோடு இருக்க வேண்டும் என்று ஜெபிப்பதோடு நின்றுவிடாமல், அதற்கான செயலிலும் ஈடுபடுவீர்கள் அப்படி தானே?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *