0 1 min 3 weeks

நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தேவைகளும் குறிப்பிட்ட நேரம் வரை, நம்மை மிகவும் ஏங்க வைக்கின்றன. இதனால் சில தேவைகளின் போது, மற்ற எல்லா காரியங்களையும் விட்டுவிட்டு, அதற்காக மட்டும் ஜெபிக்கிறோம். அது கிடைக்க வேண்டும் என்றும் காத்திருக்கிறோம். அது கிடைத்த பிறகு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால் அவ்வளவு சிக்கலான நேரத்தில் நம்மை விடுவித்த தேவனை, அதற்கேற்ப துதிக்கிறோமா? என்றால் பலரும் மவுனமாக இருந்து ‘இல்லை’ என்ற பதிலை வெளியிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று ஆலோசித்தால், தேவைகளின் போது நமக்கு இருக்கும் மன ஏக்கத்தின் அளவு, அது கிடைத்த பிறகு குறைந்து போகிறது.

இதனால் தேவன் எப்படியோ நடத்தினார் என்று ஒரு சாதாரண வார்த்தையில் கூறுகிறோமே தவிர, தேவையின் போது இருந்த நிலையை நாம் உணர முடிவதில்லை.

பார்த்தது:

இந்நிலையில் சமீபத்தில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வழக்கமாக நாம் எல்லா வீடுகளிலும் காண்பது போன்ற அலங்கார பொருட்களால், அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த ஷோக்கேஷ் நிரம்பி வழிந்தது. சற்று நேரம் செலவிட்டு, அவைகளை கவனமாக ஆராய்ந்த போது, அதன் நடுவே இருந்த ஒரு சிறிய பெட்டி, என் கவனத்தை ஈர்த்தது.

அந்த பெட்டியில், முழங்கால் கடிதம் இ-மெயிலை விட வேகமாக வேலை செய்யும் (Knee mail works faster than E-mail) என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பெட்டியை எடுத்து பார்த்த போது, அதில் பல கடிதங்கள் போடப்பட்டிருந்தன. இது குறித்து நண்பரிடம் கேட்டேன். அப்போது அந்த பெட்டியை குறித்து நண்பர் விளக்கினார்.

நம் வாழ்க்கையில் அனுதினமும் எவ்வளவோ பிரச்சனைகள், தேவைகள், நெருக்கங்கள் ஆகியவற்றை சந்திக்கிறோம். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்திற்கு நம்மை மிகவும் பாதிப்பவையாக உள்ளன. ஆனால் அந்த சந்தர்ப்பத்தை கடந்த பிறகு, நமக்கு அது ஏற்படுத்திய பாதிப்பு பெரிய விஷயமாக தெரிவதில்லை.

எனவே எங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு தேவைகளின் போதும், நாங்கள் இருக்கும் சந்தர்ப்பத்தை விளக்கமாக எழுதிய ஒரு ஜெபக்குறிப்பை இந்த பெட்டியில் போட்டு ஜெபிக்கிறோம். அந்த ஜெபத்திற்கு பதிலும் கிடைத்த பிறகு ஏற்படும் மகிழ்ச்சியையும் அந்த கடிதத்தை எடுத்து குறிப்பிடுவோம்.

இப்படி இந்த பெட்டியில் உள்ள எல்லா கடிதங்களையும் ஒரு ஆண்டின் முடிவிலோ அல்லது மனசோர்ந்து போய் தேவனை விட்டு விலகும் நேரத்திலோ எடுத்து பார்க்கும் போது, எங்களுக்கு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களின் போது இருந்த மனஉணர்வு திரும்ப நினைவிற்கு வருகிறது.

மேலும் அன்று நடத்திய தேவன் இன்றும் நடத்துவார் என்ற விசுவாசமும் ஏற்படுகிறது. ஆண்டின் இறுதியில் நேரத்தை செலவிட்டு, எல்லா கடிதங்களை படித்து பார்க்கும் போது, இவ்வளவு நன்மைகளை என் தேவன் செய்தாரே என்ற நன்றியுள்ள இருதயம் ஏற்படுகிறது, என்றார் நண்பர்.

சிந்தித்தது:

இவ்வளவு நாள் என்னை தேவன் எப்படியெல்லாம் நடத்தி வந்தார் என்பதை யோசித்து பார்த்தேன். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களையும் என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை. எனவே நானும் ஒரு ஜெபக் குறிப்பு பெட்டியை வீட்டில் வைக்க முடிவு செய்தேன்.

உண்மையிலேயே நண்பர் கூறியது போல, அந்த பெட்டியின் மூலம் ஒரு நன்றியுள்ள இருதயம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தேன். அப்ப இந்த ஐடியாவை நீங்களும் பின்பற்றலாமே?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *