0 1 yr

நம்மை நாமே அறிந்து கொள்ள:

தேவன் நம் வாழ்க்கையில் சோதனைகளை அனுமதிப்பதன் மூலம் அவர் மீதான அன்பையும் பக்தியோடு கூடிய பயத்தையும் நாம் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்று கடந்த வார செய்திகளில் பார்த்தோம்.

இந்நிலையில் நம்மை நாமே முழுமையாக அறிந்து கொள்ளும் வகையிலும், தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். இதை குறித்து உபாகமம்:8.3 வசனத்தில் காண்கிறோம்.

எகிப்தில் இருந்து பல அற்புதங்களைச் செய்து இஸ்ரவேல் மக்களை விடுவித்த தேவன், பாலைவனம் வழியாக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்கு நடத்தினார். அந்த வழியில் பல சோதனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதேபோல நம் மனதில் உள்ள காரியங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார்.

அந்தச் சோதனைகளின் போது, தங்களை அழிக்கவே தேவன் வனாந்தரத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார் என்று இஸ்ரவேல் மக்கள் பல இடங்களில் முறுமுறுத்தனர். ஆனால் அப்படி இஸ்ரவேல் மக்களை அழிப்பதற்கு தேவன் விரும்பி இருந்தால், அவர்களின் மீது பகலில் படர்ந்து காணப்பட்ட மேகஸ்தம்பம் மற்றும் இரவில் இருந்த அக்னி ஸ்தம்பத்தை நீக்கியிருந்தாலே சாத்தியமாகி இருக்கும்.

இதேபோல நம் வாழ்க்கையில் தேவனால் அனுமதிக்கப்படும் சோதனையில், நாம் புலம்பக் கூடாது. நம்மை அழிப்பதற்கோ, தீங்கு விளைவிக்கவோ தேவன் சோதனைகளை அனுமதிப்பதில்லை. மாறாக, அந்தச் சோதனைகளின் போது, நம் ஆழ்மனதில் இருக்கும் காரியங்களை நாமே புரிந்து கொள்ள முடிகிறது.

வெளியோட்டமாக எந்தளவிற்கு வேண்டுமானாலும் விசுவாசம் கொண்டவர்களாக காட்டிக் கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலையின் வழியாக நாம் கடந்து செல்லும் தான், அந்த விசுவாசம் செயல்பாட்டில் வரும்.

எடுத்துக்காட்டாக, எனது எல்லா தேவைகளுக்கும் தேவன் போதுமானவராக இருக்கிறார் என்று வாயில் கூறுவது எளிது. ஆனால் நமக்கு ரூ.1 லட்சம் அவசரமாக தேவைப்படும் சூழ்நிலையில் தான், தேவனுடைய கிரியைக்காக பொறுமையோடு காத்திருக்கும் மனநிலை நம்மிடம் காணப்படுகிறதா? என்பதை அறிய முடியும்.

இஸ்ரவேல் மக்களுக்கு எந்தச் சோதனைகளையும் அளிக்காமல், கானான் தேசத்திற்கு தேவன் அழைத்து சென்றிருக்க முடியும். ஆனால் எந்தக் காரியத்தையும் உழைப்பின்றி எளிதாக பெற்றுக் கொண்டால், அதன் மதிப்பு தெரியாது, இது மனித இயல்பு. எனவே அந்த மனநிலையோடு இருந்த இஸ்ரவேல் மக்களுக்கு, தங்களையே யார் என்று காட்ட சோதனைகளை தேவன் அனுமதித்தார்.

ஆனால் அந்தச் சோதனைகளில் தேவ கிரியைக்காக காத்திருக்க தவறிய இஸ்ரவேல் மக்கள், மோசே மற்றும் ஆரோனிடம் புலம்பினார்கள். அவர்களுக்கு தங்களின் மனதில் இருந்த அவிசுவாசத்தையும் தேவன் வைத்துள்ள மகிமையான எதிர்காலத்தையும் குறித்த தெளிவான வெளிப்படுத்தல் இருக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு எகிப்தில் இருந்த கஷ்டமான வாழ்க்கையில் இருந்து ஒரு விடுதலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே காணப்பட்டது.

இதனால் சோதனைகளை எதிர்கொள்ள தயங்கியதோடு, முறுமுறுத்தனர். 40 நாட்கள் மட்டுமே பயணிக்க வேண்டிய இஸ்ரவேல் மக்கள், 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். மேலும் எகிப்தில் இருந்து வெளியேறிய தலைமுறையில் யோசுவா மற்றும் காலேப் தவிர, மற்ற யாரும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழைய முடியவில்லை.

கானான் தேசத்தை வேவுப் பார்க்க சென்ற யோசுவாவும் காலேப்பும், அதை சரியாக செய்தார்கள். உடனிருந்தவர்கள் எல்லாரும், இஸ்ரவேல் மக்களை மனம் தளர்த்தும் காரியங்களைக் கூறிய போதும், விசுவாசத்தில் இந்த இரண்டு பேரும் தளர்ந்து போகவில்லை.

இதேபோல நம் வாழ்க்கையில் வரும் சோதனை நேரங்களில், நமது ஆவிக்குரிய நிலையை உணர்ந்து, அதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்போது நமக்காக வைக்கப்பட்டுள்ள பரலோகமாகிய நித்திய வீட்டிற்கு சென்ற சேர, ஏற்ற இருதயத்தைக் கொண்டவர்களாக நாம் மாறுவோம்.

(பாகம் – 4 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *