0 1 min 1 yr

எனது சிறு வயதில் மிகவும் குறும்பு செய்து கொண்டிருந்தேன். எனது பள்ளிப் பருவத்திலேயே, பெற்றோர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனால் தேவாயலத்திற்கு பெற்றோருடன் சென்று வருவேன். அங்கேயும், சிறுவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது, கூட்ட நேரத்தில் விளையாடுவது, அங்குமிங்கும் ஓடுவது என்று எனது குறுப்புத்தனம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது.

பாஸ்டர்களும், விசுவாசிகளும் எவ்வளவோ சொல்லியும், எனது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்பட இல்லை. ஒரு நாள் வீட்டில் இருந்த என்னை அழைத்த எனது தந்தை, ஒரு சிறிய கதையை கூறினார். அந்த கதையை கேட்ட பிறகு, எனக்கு தேவாலயத்திற்கு சென்றாலே, ஒருவிதமான தேவ பயம் ஏற்பட ஆரம்பித்தது.

அன்று மட்டுமல்ல, இன்றும் அந்த கதை எனது காதில் அவ்வப்போது ஒலிக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறி கொள்கிறேன். அந்த கதை நம் இணையதள வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

கதை இப்படி தொடங்குகிறது – பல ஆண்டுகளுக்கு முன் தேவாலயம் ஒன்றில் ஆராதனை நடைபெற்று வந்தது. அப்போது பாதிரியார் ஒருவர் வழக்கம் போல, தேவ சமூகத்து பணியில் ஈடுபட்டு வந்தார். ஓடு போட்டப்பட்ட சிறிய ஆலயமாக இருந்தாலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்தின் ஜெப நேரத்தில் சிலர் பேசிக் கொண்டும், வேறு சிலர் பலவிதமான சிந்தனைகளிலும், சிலர் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டும், சிலர் எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டும் இருந்தனர். அதிக மக்கள் கூட்டம் இருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே அங்கு நடந்த தேவ சமூகத்து பணிகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று பலத்த சத்தத்தோடு சிரித்தார். இதை கொஞ்சமும் எதிர்பாராத மக்களும், பாதிரியாரும் அதிர்ச்சியோடு அந்த மனிதனை உற்று பார்த்தனர். அந்த மனிதனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். பாதிரியார் கோபத்தை அடக்கிக் கொண்டு, ஆராதனையை எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டார்.

ஆராதனை முடிந்த உடனே, பலத்த சத்தத்தோடு சிரித்த நபரை தனியே அழைத்த பாதிரியார், அவர் சிரித்த காரணத்தை குறித்து விசாரித்தார். தனது தவறுக்கு பாதிரியாரிடம் முதலில் மன்னிப்பு கேட்டு விட்டு காரணத்தை கூற ஆரம்பித்தார் அந்த நபர்.

பாதர், உங்களின் அருளுரை கேட்டு வழக்கம் போல இன்றும் நன்றாக தூங்கிவிட்டேன். எனது ஆழ்ந்த உறக்கத்தில் நான் ஒரு கனவு கண்டேன். எனது கனவில் நான் இதே ஆலயத்தில் விழிப்புடன் இருந்தேன்.

அப்போது ஆலயத்தின் ஓட்டு கூரையை தாங்கி நிற்கும், குறுக்கு மரப் பலகையின் மேலிருந்து ஏதோ சத்தம் வந்து கொண்டிருந்தது. அது என்னவென்று மேலே பார்த்த போது, ஒரு கருப்பான உருவம் உட்கார்ந்திருந்தது. தலையில் இரு கொம்புகளும், ஒரு வாலுடனும் பார்க்கவே விகாரமாக இருந்தது. இதிலிருந்து அது ஒரு குட்டி பிசாசு என தெரிந்து கொண்டேன்.

அது தனது கையில் ஒரு தோல் சுருளை வைத்து கொண்டு, ஆலயத்தில் தூங்குபவர்கள், பேசுபவர்கள், அங்குமிங்கும் நடப்பவர்கள், ஏதோ யோசனையில் இருப்பவர்கள் ஆகியோரை கவனித்து பார்த்து எழுதிக் கொண்டிருந்தது. அவ்வாறு மேற்கூறியவர்களின் குற்றங்களை எழுதி எழுதி தோல் சுருளே தீர்ந்துவிட்டது.

என்ன செய்வதென்று யோசித்த பிசாசு, தனது பற்களால் தோல் சுருளின் ஒரு பகுதியை கடித்து பிடித்து கொண்டு, மற்றொரு முனையை கைகளால் இழுத்தது. அப்போது, தோல் சுருள் சற்று நீண்டதாகி இன்னும் குற்றங்களை எழுத இடம் கிடைத்தது. திரும்பவும் தொடர்ந்து குற்றங்களை எழுதவே, அந்த இடமும் காலி.

மீண்டும் தோல் சுருளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது பிசாசு. 5-6 முறை இழுத்து எழுதிவிட்டது. மீண்டும் தோல் சுருளில் இடம் தீர்ந்து போகவே, பற்களால் கடித்து மிகவும் சக்தியோடு இழுத்தது பிசாசு. அந்தோ பரிதாபம், தோல் சுருள் அறுந்து போய், பிசாசின் தலை கூரையில் இருந்த ஓடுகளின் மீது “படார்” என்ற சத்தத்தோடு பலமாக மோதியது. இந்த காட்சியை பார்த்த எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை பாதர். என்று மீண்டும் அந்த கனவு காட்சியை நினைத்து சிரித்து கூறி முடித்தார் அந்த மனிதர்.

அந்த கனவை கேட்ட பாதர், ஆலயத்திற்கு வந்த பிசாசு குறித்து அடுத்த வார ஆராதனையின் அருளுரையில் கூறினார். அதன்பிறகு அந்த ஆலயத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் ஒழுக்கமுடையவர்களாக மாறினார்கள். இப்படி அந்த கதையை முடித்தார் என் தந்தை.

இதன் கருத்து, நாம் தேவாலயத்திற்கு செல்லும் போது, அங்கே தேவ ஊழியர்கள், விசுவாசிகள், தேவன், தேவ தூதர்கள் ஆகியோர் மட்டும் வருவதில்லை. நாம் தேவனுக்கு செலுத்த வேண்டிய பய பக்தியோடு செல்லாவிட்டால், பிசாசு தன் தூதர்களும் கூட வந்து விடுகிறான். அவன் நம்மில் ஏற்படும் குற்றங்களை பதிவு செய்து, தேவனிடம் கூறி நமக்கு வர வேண்டிய ஆசீர்வாதங்கள் இழக்க செய்வான்.

எனவே தேவாலயத்தில் நாம் ஒழக்கமுடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் கற்களாலும், மண்ணாலும் கட்டிய ஆலயத்தை தவிர, நாம் கூட தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்று 1கொரிந்தியர்:3.17ல் வாசிக்கிறோம். தேவாலயத்திற்கு பிசாசு வருமா? என்ற குருட்டு கேள்விக்கு பதில் தேடாமல், தேவாலயத்திற்குள் பிசாசு வராமல் இருக்க நம்மையே பரிசுத்தமாக காத்து கொள்ள தேவ கரங்களில் ஒப்புக் கொடுப்போம். நான் கேட்டு, புரிந்து கொண்ட இந்த கதை உங்களுக்கும் புரிந்தது தானே?

– கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *