0 1 min 2 mths

ஆதி கிறிஸ்தவர்கள் செய்த ஊழியங்களுக்கு, இரட்சிக்கப்படாதவர்களால் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பல கஷ்டங்களையும் பாடுகளையும் சகித்து சுவிசேஷத்தை பரப்பினார்கள். இதனால் நாம் இன்று இயேசுவை அறிந்து, இரட்சிப்பை அடைய முடிந்தது.

ஆனால் இன்றைய சுவிசேஷ பணிக்கு, வெளியில் இருந்து வரும் தடைகளை விட, இரட்சிக்கப்பட்ட நபர்களால் தான் பல தடைகள் வருகின்றன. இன்னும் தெளிவாக கூறினால், சில தேவ ஊழியர்கள் கூட முட்டுக்கட்டையாக மாறி விடுகிறார்கள்.

கேட்டது:

இதை குறித்து கூறும் போது, ஒரு சில சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. என் வீட்டில் இருந்து ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதோ பகுதியில் இருந்த குடிசை பகுதியில் குழந்தைகளுக்கு ஞாயிறு பள்ளி ஊழியம் செய்ய எனக்கு விருப்பம் ஏற்பட்டது.

தேவ ஊழியங்களில் அதிக ஆர்வம் கொண்ட என்னோடு வேலை செய்த ஒரு இரட்சிக்கப்பட்ட சகோதரியிடம் இது பற்றி கூறினேன். முதலில் சந்தோஷப்பட்ட அவர், அதற்கு என்னை அழைக்க வேண்டாம் என்று கூறினார். அதற்கான காரணத்தை கேட்ட போது, அவரது பதில் என்ன ஆச்சரியமடைய வைத்தது.

அவர் சென்று கொண்டிருந்த சபையில் இருந்து, ஏற்கனவே நான் குறிப்பிட்ட இடத்திற்கு, தன் தோழிகளுடன் அவர் சென்று, அங்குள்ள பிள்ளைகள் இடையே சில நாட்கள் ஊழியம் செய்துள்ளார். அதை பற்றி அறிந்த சபை போதகர், அவர்களை கண்டித்துள்ளார்.

மேலும் சபையில் தரும் ஊழியங்களை மட்டும் செய்யுங்கள். உங்கள் இஷ்டத்துக்கு ஊழியங்களை செய்யக் கூடாது என்று போதகர் கூறியுள்ளார். இதனால் பயந்து, சோர்ந்து போன அந்த சகோதரி என்னோடு ஊழியம் செய்ய மறுத்தார். மேற்கொண்டு அந்த பகுதியில் எங்களால் ஊழியம் செய்ய ஒரு அறிமுகம் கூட கிடைக்காமல், அந்த எண்ணத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் மிஞ்சும் மற்றொரு சம்பவத்தை தேவ ஊழியர் ஒருவர் கூறினார். அவரது கிராமத்தில் இருந்த ஒரு சபையில், சிறப்பு கூட்டம் ஆயத்தப்பட்டுள்ளது. கூட்ட விவரங்கள் கொண்ட போஸ்டரை, அருகில் உள்ள மற்றொரு சபையின் சுவரில் ஒட்டியுள்ளார்கள்.

போஸ்டர் ஒட்டப்பட்ட சபையின் போதகருக்கு, இந்த செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிறப்பு கூட்டத்தின் போஸ்டரை கிழித்து எறிந்ததோடு, காரில் கிளம்பி உள்ளார். என் சர்ச்சு முன்னாடி, உங்க சபை போஸ்டரை ஏன் ஒட்டினீங்க? என்று கேட்டுள்ளார்.

இதற்கு ஒட்டிய போதகர், எங்க சபையில் நடக்கற கூட்டத்துல உங்க சபை விசுவாசிகள் கலந்துக்க கூடாதா? என்று பதில் அளித்துள்ளார். இதில் மேலும் கோபமடைந்த காரில் வந்த போதகர், காரில் இருந்த வீச்சு அரிவாளையும் எடுத்து வந்துள்ளார்.

இனிமேல் என் சபைக்கு முன்னாடி, உங்க சபை போஸ்டரை ஒட்டினா, அந்த கூட்டத்த நடத்த நீ இருக்கமாட்டே என்று கூறி சென்றுள்ளார். போஸ்டர் ஒட்டிய போதகரும், இரட்சிக்கப்படுவதற்கு முன் இருந்த தனது பழைய மனிதனின் சிறப்புகளை கூறி, சவால் விட்டுள்ளார்.

மற்றொரு சகோதரரும் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். குறிப்பிட்ட சபைக்கு சென்று கொண்டிருந்த அவர், சபையை சாராமல் தனியாக ஞாயிறு பள்ளி ஊழியம் செய்து வந்துள்ளார். இதை குறித்து அறிந்த சபை போதகர், சபையில் ஊழியம் செய்ய ஆளில்லை, வெளியே தனியா போய் எதுக்கு ஊழியம் செய்யறீங்க? என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவர், நான் செய்யும் ஊழியம் குறித்த தெளிவான தரிசனம் பெற்றிருக்கிறேன். மேலும் சபையில் உள்ள குழந்தைகளுக்கு ஊழியம் செய்ய பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் செய்யும் பகுதியில் ஊழியம் செய்ய யாரும் முன்வருவதில்லை என்று கூறியுள்ளார்.

இதில் கோபமடைந்த போதகர், நான் ஒரு ஊழியக்காரன் சொல்றேன். அத கேட்காம உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்கீங்க? ஊழியக்காரனுக்கு தெரியாதது உங்களுக்கு தெரிஞ்சிருச்சா? கேட்காமல் போய் ஏதாவது பண்ணுங்க, ஆண்டவரோட கோபத்தை வாங்கி கட்டிக்க போறீங்க என்று மிரட்டியுள்ளார். இதில் மனமுடைந்த விசுவாசி, மேற்கொண்டு எதுவும் கூறாமல் மௌனமாக வெளியேறி உள்ளார்.

சிந்தித்தது:

மேற்கூறியது போன்ற பல சம்பவங்களை இன்றைய கிறிஸ்தவ சபைகளில் நாம் காண முடிகிறது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம், ஒரு சபைக்கு வருபவர்கள், வேறொரு சபை உடன் எந்தொரு தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்பது தான். இதை தான் பெரும்பாலான போதகர்களும் விரும்புகிறார்கள்.

மேலும் தாங்கள் நடத்தும் சபைக்கு வரும் எல்லா விசுவாசிகளும் ஊழியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற எண்ணுகிறார்கள். இதனால் தேவனுக்கோ அல்லது தேவ நாமத்திற்கோ எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை என்பது தான் உண்மை.

தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வெளியே சென்றாலோ, வேறு ஊழியங்களுக்கு உதவினாலோ, தேவன் நியாயம் தீர்ப்பார். கர்த்தருடைய கோபம் உன் மேல் வரும் என்றெல்லாம் எந்த அடிப்படையும் இல்லாத காரியங்களை பல போதகர்களும் கூறுகிறார்கள்.

இதில் பயப்படும் பல விசுவாசிகளும், தங்கள் செய்து வரும் ஊழியங்களை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதனால் சுவிசேஷம் கூறி, பலரையும் இரட்சிப்பில் நடத்த வேண்டிய ஊழியர்களே, இன்று பலரின் இரட்சிப்பிற்கு தடைக்கல்லாக மாறி விடுகிறார்கள்.

சபை போதகர்களுக்கு இது போன்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க, முதலில் தாங்கள் செய்யும் ஊழியத்தின் மூலம் கிடைக்கும் சுய லாபத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். யார் ஊழியம் செய்தாலும் ஆண்டவருக்காக செய்கிறோம் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு போதகரிடம் தேவனால் அளிக்கப்பட்டுள்ள ஆடுகள், அவரிடம் மட்டுமே இருக்கும். அதை தேவன் பாதுகாப்பார் என்று ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்ற எண்ணத்தோடு, ஊழியம் செய்யும் போது, இது போன்ற பிசாசின் மறைமுகமான யோசனைகளை பின்பற்ற நேரிடும்.

எனவே நாம் செய்யும் எந்த ஊழியமானாலும், அது தேவனுக்காகவும், அவருடைய நாமத்தின் மகிமைக்காகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம்.

மற்றவர்களுக்கு நாம் அளிக்கும் ஆலோசனைகள், அவர்களையோ அல்லது ஒருவரின் இரட்சிப்பையோ தடுப்பதாக அல்லது கேடுப்பதாக அமையுமா என்பதை சிந்தித்து செயல்படுவோம்.

அப்போது நாம் ஒரே கூட்டமாக இணைந்து, தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்ட முடியும். சபைகளில் ஏற்படும் தேவையில்லாத மனவருத்தங்களும் நீங்கும்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *