
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…
நான் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் மீதான விசுவாசத்தில் வளர, தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் ஐக்கியம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால் அவ்வப்போது தேவாலயத்திற்கு சென்று என்னால் முடிந்த சிறுசிறு வேலைகளை செய்து வருவது எனது வழக்கம்.
இந்நிலையில் ஒருநாள் தேவாலயத்தில் தேவ ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு மரக் கிளையினால் பெரும் தொந்தரவு ஏற்படுவதாகவும், அதை வெட்ட வேண்டும் என்றும் கூறினார். அதற்காக மரம் வெட்டும் ஆட்களை அழைத்து, குறிப்பிட்ட மரக்கிளையை மட்டும் கவனமாக வெட்ட வேண்டும் என்று கூறினார்.
அதற்கு நான், மரக்கிளையை வெட்டுவதற்காக எதற்கு வேலையாட்களை அழைக்கிறீர்கள்? நானே வெட்டுகிறேன் என்றேன். அதற்கு தேவ ஊழியர், உங்களுக்கு மரம் வெட்டுவதில் அவ்வளவு பழக்கம் இல்லையே? என்றார். பரவாயில்லை, நான் வெட்டுகிறேன் என்று கூறி, ஆயுதங்களுடன் மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்ட ஆரம்பித்தேன்.
மரக்கிளை சரிந்து விழும் நேரத்தில், கிளை முறியும் இடத்தில் இருந்த ஒரு சிறிய மரத் துண்டு எதிர்பாராத வண்ணம், எனது ஒரு கண்ணின் கருவிழியில் குத்திவிட்டது. எப்படியோ வலியை பொறுத்து கொண்டு மரக்கிளையை முழுமையாக வெட்டிவிட்டு கீழே இறங்கினேன். மரத்தை விட்டு கீழே இறங்கிய பிறகு தான், எனக்கு ஒரே ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருப்பது தெரியவந்தது.
உடனே அங்கிருந்த எனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சென்றேன். என் கண்ணில் இருந்த சிறிய மரத்துண்டை வெளியே எடுத்த ஒரு பெண் டாக்டர், என் பாதிக்கப்பட்ட கண்ணை பரிசோதித்துவிட்டு, உடனடியாக ஒரு ஆப்ரேஷன் தேவைப்படுகிறது என்றார்.
ஆப்ரேஷன் செய்தால் என்னால் இழந்த கண் பார்வையை திரும்ப பெற முடியுமா என்று கேட்டதற்கு, 99% வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தேவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், என்றார் டாக்டர்.
இந்த இக்கட்டான நிலையை தேவ ஊழியருக்கு போன் மூலம் தெரிவித்து, ஜெபிக்குமாறு கூறினேன். மேலும் ஆப்ரேஷனுக்கான பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்றேன். அதை கேட்டு துக்கமடைந்த தேவ ஊழியர், திடீரென்று என்னிடம், நீங்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்து தேவாலயத்திற்கு திரும்ப வாருங்கள். ஆப்ரேஷன் செய்வது குறித்து சிந்திக்கலாம் என்றார்.
தேவ ஊழியரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, டாக்டரிடம் மீண்டும் வருவதாக கூறிவிட்டு, ஒரு கண்ணில் இருந்த பார்வையை வைத்து கொண்டு தேவாலயத்திற்கு வாகனத்தில் திரும்பினேன். தேவாலயத்திற்கு செல்லும் போதே எனக்குள் ஒரு பெரும் விசுவாசம் ஏற்பட துவங்கியது. தேவாலயத்தை நெருங்க நெருங்க, அது மிகவும் அதிகரித்து, கர்த்தர் என்னை குணமாக்க வல்லவர் என்ற பலத்த விசுவாசம் என் மனதில் உண்டானது.
ஒரு கண்ணில் பார்வையுடன் நான், தேவ ஊழியரை நோக்கி நடந்து சென்ற போது, அவர் இரு கரங்களையும் நீட்டி, கர்த்தருக்காக பணியாற்றிய போது உண்டான உங்கள் காயத்தை தேவனே குணமாக்குவார் என்று ஒரு விசுவாச வார்த்தையை கூறினார். அதை கணப்படுத்திய தேவன், அதுவரை பார்வையில்லாமல் இருந்த எனது கண்ணில் உடனே பார்வை கிடைக்க செய்தார்.
தேவாலயத்திற்குள் சென்று தேவன் செய்த மகா பெரிய இரக்கத்திற்காகவும், அற்புத சுகத்திற்காகவும் நன்றி தெரிவித்துவிட்டு, முகத்தை கழுவி கொண்டு, கண் மருத்துவமனைக்கு திரும்ப சென்றேன். அங்கு என்னை பரிசோதனை செய்த டாக்டர், எனது வருகைக்காக காத்திருந்தார்.
அவரிடம் எனது கண்களை மீண்டும் ஒரு முறை பரிசோதிக்குமாறு கூறினேன். அவர் பரிசோதித்து விட்டு, ஆச்சரியத்தில் வாயடைத்து போனார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கண்ணின் முழு கருவிழியும் பாதிக்கப்பட்டு, கண் பார்வைக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த உங்களுக்கு இப்போது எப்படி கண் பார்வை மீண்டும் கிடைத்தது? என்று கேட்டார்.
அதற்கு நான், டாக்டர் நீங்கள் தான் உன் தேவனிடம் வேண்டிக்கோள் என்றீர்களே! நாங்கள் தேவாலயத்தில் சென்று ஜெபித்தோம். எங்கள் தேவன் என்னை குணமாக்கினார். இப்போது நான் காண்கிறேன், என்றேன். அதற்கு அவர், உண்மையிலேயே உங்கள் தேவன் சுகம் கொடுக்கிறவர் தான் என்று கூறி, ஆச்சரியத்தோடு என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அன்று முதல் இன்று வரை எனது கண்களில் மீண்டும் எந்த பிரச்சனையும் வராமல் கர்த்தர் காத்து வருகிறார்.
தேவனுக்காகவும், தேவ ஊழியங்களுக்காகவும் நாம் செய்யும் ஒவ்வொரு பணியின் போதும் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க, தேவன் வல்லமையுள்ளவர் என்பதை எனது வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அறிந்து கொண்டதோடு, மற்றவர்களுக்கும் தெரிவித்து வருகிறேன்.