
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் தாழ்மையோடு வாழ வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களில் எது தாழ்மை என்ற குழப்பம் உள்ளது.
தாழ்மை என்றவுடன் தேவாலயத்தில் அமைதியாக இருப்பது அல்லது எதிலும் கலந்து கொள்ளாமல் தனிமையாக வாழ்வதும் தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான ஆவிக்குரிய தாழ்மை என்பது நமக்குள் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடியது.
இதை இயேசுவின் வாழ்க்கையில் பல இடங்களில் காணலாம். இயேசு என்ன தான் தேவ குமாரனாக இருந்தாலும், தன் வாழ்நாளில் எங்கேயும் அதை வெளியே காட்டவில்லை. ஒரு மனிதனால் தெய்வீகமான சக்தியை எப்படி வெளிப்படுத்த முடியும் என்பது தான் இந்த உலகில் அவர் செய்த அற்புதங்களின் பின்னணி.
தாழ்மை என்பது வெளியோட்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக, இன்று பலரும் பிரயாசப்படுகிறார்கள். குறிப்பாக சபையிலும், ஊழியர்களின் முன்பாக தாங்கள் மிகவும் தாழ்மையானவர்கள் என்று காட்ட விரும்புகிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக, தேவ ஊழியர்களின் முன் உட்காரமாட்டார்கள். தாழ்ந்த குரலில் பேசுவது, ஊழியர்கள் என்ன சொன்னாலும் அதற்கு மறுத்து பேசமாட்டார்கள். ஆனால் அவர்களின் செயல்பாட்டில் மேற்கூறிய எதுவும் இருக்காது.
இதற்கு முக்கிய காரணம், தாழ்மை என்பது வெளியில் இருந்து வெளிப்பட வேண்டியது அல்ல. நம் மனதில் தேவ அன்பு நிறைவில், அது வெளியே வர வேண்டியுள்ளது.
பார்த்தது:
இது குறித்து கூறும் போது, ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை, தேவாலயத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன். கூட்டத்தின் முடிவில் எல்லாருக்கும் உணவு அளிக்கப்பட்டது. சாப்பிட்ட அனைவரும் தட்டுகளை ஆங்காங்கே வைத்து விட்டு போனார்கள்.
இதனால் பிற்பகுதியில் வருகிறவர்களுக்கு சாப்பிட தட்டு இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். சாப்பிட்ட தட்டுகளை கழுவ ஒரு குழுவினர் இருந்த போதும், அதை கழுவும் இடத்திற்கு கொண்டு செல்ல ஆட்கள் இல்லாமல் இருந்தார்கள்.
இதை கண்ட எனக்கு வீட்டு ஞாபகம் வந்தது. எங்கள் வீட்டில் சாப்பிட்டவர்கள், தட்டுகளை எடுத்து கழுவும் இடத்தில் வைப்பது வழக்கம். அப்படியிருக்க, தேவனுடைய ஆலயத்தில் அந்த பணியை செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று தோன்றியது.
உடனே ஆங்காங்கே சிதறி கிடந்த தட்டுகளை எடுத்து, அதில் இருந்து உணவு மீதங்களை ஒரு பக்கெட்டில் கொட்டிவிட்டு, கழுவும் இடத்திற்கு கொண்டு சென்று கொடுத்தேன். மற்றவர்கள் என்னை கவனிக்கிறார்களா? என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் யோசிக்கவில்லை. அது நமக்கு எந்த பயனும் தர போவதும் இல்லை என்று செயல்பட்டேன்.
சில நிமிடங்களில், அங்கிருந்த சில சிறுவர்களும் என்னுடன் இந்த பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அடுத்தடுத்து சாப்பிட வந்தவர்களுக்கு தட்டுகள் விரைவாக கிடைத்தன.
மேற்கூறிய பணியை பார்த்த ஒரு விசுவாசி என்னிடம் வந்து, இந்த பணிக்கு கர்த்தர் உங்களை இரட்டிப்பாக ஆசீர்வாதம் அளிப்பார் என்று ஊக்கப்படுத்தினார். ஆனால் எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
நான் அவரிடம், எனக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதால், தட்டுகளை எடுத்து வைக்கவில்லை. மாறாக, அவர் என்னை நன்றாக ஆசீர்வதித்து உள்ளார். தேவனுடைய வீட்டில் வேலை செய்ய தேவ அன்பு இருந்தால் போதும் என்று கூறினேன்.
மேற்கொண்டு யாரும் என்னை பாராட்டவோ, புகழவோ இல்லை. ஆனால் அதற்காக எனக்கு வருத்தமும் ஏற்படவில்லை. ஏனெனில் என் வீட்டில் நான் செய்வது போல, தேவாலயத்திலும் செய்தேன், அவ்வளவுதான்.
இதில் இருந்து உண்மையான தாழ்மையுடன் செயல்பட்டால், நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. இதனால் எந்த ஏமாற்றம் ஏற்படாது. அதை தவிர்த்து, நம் தாழ்மையை வெளியோட்டமாக காட்ட விரும்பும் போது, அதற்கான பலன் உடனே கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டாகும்.
சிந்தித்தது:
நம் மனம் தேவ அன்பால் நிறைந்து உண்டாகும் தெய்வீகமான தாழ்மை, எப்போதும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தரும். மேலும் தெய்வீகமான தாழ்மையோடு செய்யும் காரியங்களில் பெரிய திருப்தி உண்டாகும்.
வெளியோட்டமாக மனிதர்களுக்கு காட்ட நாம் தாழ்மையை காட்ட வேண்டுமானால், நாம் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதில் உண்மை தன்மை இருக்காது. இதனால் மனசஞ்சலமும், மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டால், அதற்காக துக்கமும் ஏற்படும்.
எனவே தேவ அன்பில் தினமும் நிரம்புவோம். எந்த சூழ்நிலையிலும் நமக்குள் இருக்கும் தெய்வீகமான தாழ்மையை காட்டுவோம். அப்போது நாம் இயேசுவின் பிள்ளைகள் என்பதை நாம் காட்ட தேவைப்படாது. நம் சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்கு தானாக தெரியும்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரர்