
அதிகாலத்தில் சுவிசேஷம் அறிவிக்க கிறிஸ்தவர்களுக்கு அதிக பாடுகளும், தடைகளும் இருந்தன. அவை வெளியில் இருந்து வந்ததால், கிறிஸ்தவர்கள் தேவ நாமத்தின் மகிமைக்காக அவற்றை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.
கிறிஸ்தவம் ஒரு மதம் என்ற உருவத்தை பெற்ற போது, அதற்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. மேலும் அதன் உண்மையான சத்தியத்தில் இருந்து விலகி, பல சமரசங்களை ஏற்றது. அது ஆளுகையை தரும் மதமாக மாறிய போது, இன்னும் அதன் நிலை மோசமானது.
இப்படி வெளிப்புற மற்றும் உட்புற தாக்குதலில் சிக்கிய கிறிஸ்துவ மார்க்கம், இன்று அடிப்படை சத்தியத்தையே குழப்பும் பல கற்பனை கருத்துக்களை சகித்து வருகிறது என்றால் தவறில்லை.
சந்தித்தது:
சமீபத்தில் என்னிடம் சுவிசேஷம் கூறுவதாக வந்த இருவரிடம், நான் ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட நபர் என்றேன். அதை கண்டுகொள்ளாத அவர்கள், புதியவர்களிடம் சுவிசேஷம் சொல்லவில்லை என்றும், சத்தியத்தை அறியாத கிறிஸ்தவர்களை சந்திக்கிறோம் என்று கூறினார்கள்.
இன்றைய கிறிஸ்துவர்களுக்கு தெரியாத பல காரியங்களை, வேத ஆதாரத்துடன் நாங்கள் விளக்கி கூறுகிறோம். இதற்காக கிறிஸ்தவர்களின் வீடுகளில் வேதப்பாடங்கள் நடத்துகிறோம் என்று கூறினார்கள்.
புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் பல வசனங்களைக் சுட்டிக்காட்டி, தேவனுக்கு ஏற்ற நாள் சனிக்கிழமை என்றும், அன்று தான் அவரை ஆராதிக்க வேண்டும் உட்பட பல காரியங்களை கூறிவிட்டு, கடைசியாக இயேசுவை, நாம் ஒரு சாதாரண மனிதனாக பார்க்க வேண்டும் என்றார்கள்.
கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வந்துள்ள அவர்களிடம், இயேசு இரட்சகர் அல்ல என்றால், நீங்கள் கிறிஸ்தவர் என்றே கூற முடியாதே. புதிய ஏற்பாடு தேவையில்லையே என்றேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை.
பேச்சை மாற்றிய அவர்கள், பழைய ஏற்பாட்டிலேயே நடக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் தேவன் தந்துவிட்டார் என்று மழுப்பினார்கள். அப்படியென்றால், பழைய ஏற்பாட்டின் பலியும், ஆண்டுதோறும் கொண்டாட வேண்டிய பண்டிகைகளையும் கொண்டாட வேண்டுமா? என்று கேட்டால், பலி தேவையில்லை.
ஆனால் பஸ்கா பண்டிகையை தாங்கள் ஆண்டுதோறும் ஆசரிப்பதாக கூறினார்கள். அதற்கு ஆதாரமாக, இயேசு பஸ்காவை ஆசாரித்தார் என்பது அவர்களின் வாதம்.
பழைய ஏற்பாடு மட்டும் தேவனுக்கு போதும் என்றால், யூதர்களுக்கு மட்டுமே சுவிசேஷம் கூறி, அவர்களை மட்டுமே பாவத்தில் இருந்து மீட்டெடுத்து இருப்பாரே? இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தையே மாற்றுகிறீர்களே? இயேசு இல்லாமல் ஒரு கிறிஸ்தவ மார்க்கமா? என்று கேட்டால், அவர்களிடம் அதற்கு பதில் இல்லை.
இப்படி சில வேத வசனங்களை வைத்து கொண்டு, தற்போது உள்ள கிறிஸ்தவர்கள் யாரும் பரலோகத்திற்கு போகமாட்டார்கள் என்றும், எல்லாரும் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்கள்.
கடைசியாக, இந்த மதிப்பு மிகுந்த சத்தியத்தை உங்களுக்கு கூறுமாறு, நீங்கள் போகும் அதே சபையைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியதாகவும் கூறினார்கள். அடுத்தடுத்து பல கேள்விகளை, வேதத்தில் இருந்து கேட்ட போது, மேற்கொண்டு விளக்கம் சொல்ல தெரியாமல், பிறகு வருகிறோம் என்று கூறி சென்றுவிட்டார்கள். இதுவரை வரவில்லை.
கேட்டது:
இதேபோல, நன்கு பழக்கமான ஒரு ஏழ்மையான தேவ ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது, இயேசு மட்டுமே தேவன், பிதாவும், பரிசுத்தாவியும் தேவையில்லை என்று ஒருவர் மணிக்கணக்கில் தன்னிடம் ஒருவர் பேசியதாக கூறினார். வேத வசனங்களை தெளிவாக எடுத்து கூறிய போது, மேற்கொண்டு பேச முடியாமல் பின்வாங்கி போனார் என்று கூறினார்.
மற்றொரு சகோதரனின் வீட்டிற்கும் இதேபோல 2 சகோதரிகள் ஒரு புத்தகத்துடன் வந்து, வேதத்திற்கு புறமான பல கற்பனையான காரியங்களை கூறி குழப்பி உள்ளனர். குழப்பமடைந்த அவர்கள், என்னிடம் வந்து அதே கேள்விகளுக்கு விளக்கம் பெற்றார்கள்.
இது போன்ற பலரும், இப்படி வேதப்பாடம் எடுக்கிறேன் என்ற பெயரில், தங்களின் சொந்த மனதில் தோன்றிய சில காரியங்களுக்கு சில வசனங்களை ஆதாரமாக வைத்து பேசி வருகிறார்கள். அவர்களின் இலக்கு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமே என்பது தான் வருத்தமான விஷயம்.
சிந்தித்தது:
ஒரு தேவ ஊழியரிடம் இது குறித்து பேசி கொண்டிருந்த போது, இதற்கான காரணத்தை அவர் கூறினார். அது ஏற்கும் வகையில் இருந்தது.
இந்த காலத்தில் இரட்சிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கும் தெளிவான வேத அறிவு இருப்பதில்லை. கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை காரியங்கள் கூட தெரியாமல் இருப்பவர்கள் தான், இவர்களிடம் எளிதாக சிக்கி கொள்வார்கள்.
இதற்கு முக்கிய காரணம், சபைகளில் வேத வசனத்தை எடுத்துக் கூறும் போது, பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. மேலும் பிரசங்கம் செய்யும் இவரும், இவரோட பசங்களும் ஒழுக்கமா? என்று தேவ சமூகத்தில் இருக்கும் ஊழியர்களை மனதில் புறக்கணிப்பது.
பரிசுத்த வேதாகமம் வாசிக்கும் பழக்கமும், தியானிக்கும் பழக்கமும் இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே மிகவும் குறைவு. உலக காரியங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை தெய்வீக காரியங்களுக்கு தருவதில்லை.
அப்படி வேத வசனங்களை உண்மையாக தியானித்தால், அது நம்மில் உள்ள பலவீனங்களையும், குறைகளையும் குத்திக் காட்டும். இதை புரிந்து கொள்ளாத சிலர், ஆசீர்வாதம் மட்டுமே தேவை என்று வாழ்க்கிறார்கள்.
இதை எல்லாம் கடந்து, தெளிவான வேத அறிவில்லாத சிலர், ஒரு வேகத்தில் சொந்தமாக ஊழியம் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் புதிய ஆத்துமாக்களை சந்தித்து, அவர்களை இரட்சிப்பில் நடத்துவது கடினம் என்பதால், தங்களுக்கு மனதில் தோன்றும் காரியங்களை உபதேசம் என்ற பெயரில் பேசி, இரட்சிக்கப்பட்ட பிற சபைகளுக்கு செல்லும் மக்களை குழப்பி கும்பல் சேர்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட சிலருக்கு, பிசாசின் வல்லமைகளும் உதவ, அவர்களின் நிலையும், அவர்களை சார்ந்து உள்ளவர்களின் நிலையும் பரிதாபமாக மாறி விடுகிறது என்று கூறினார் அந்த தேவ ஊழியர்.
மேற்கண்ட இது போன்ற ஆவிக்குரிய குழப்பத்தை ஏற்படுத்தும் உபதேசங்களை கண்டறிய, தினமும் வேத வசனங்களை வாசித்து, அதை தியானிப்பது முக்கியம். நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவை மேம்படும் தனி ஜெபம் கட்டாயம் தேவை. இவை இரண்டும் இருந்தால், பெரும்பாலான தவறான உபதேசங்களை எளிதாக கண்டறிந்து விடலாம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.