0 1 min 1 yr

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே காணப்படும் பேச்சு வழக்கை வைத்து, அவர்களின் ஆவிக்குரிய நிலையை கண்டறிவது எளிதாக உள்ளது. சிலரது வீடுகளுக்கு சென்றாலே, ஒரு தேவ மகிமையை காணலாம். ஆனால் சிலரது வீடுகளுக்கு சென்றால், ஏதோ தவறான இடத்திற்கு வந்தது போன்ற ஒரு அந்தகாரம் சூழ்ந்து காணப்படும்.

மேற்கூறிய அனுபவங்களை, ஆவியில் தெளிவான பகுத்தறிவு உள்ளவர்களால் உணர முடியும். ஆனால் சமீபத்தில் ஒரு போதகர் கூறிய சம்பவம் ஒன்று, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் அதை நகைச்சுவையாக கூறினாலும், அதில் ஒரு ஆழ்ந்த கருத்து இருந்தது.

கேட்டது:

அந்த சம்பவத்தை அவர் இப்படி தான் கூற ஆரம்பித்தார்… சமீபத்தில் பழைய விசுவாசிகள் இருவரின் வீட்டிற்கு நீண்டநாட்களுக்கு பிறகு சென்றிருந்தேன்.
முதல் வீட்டிற்கு சென்ற போது, அந்த வீட்டின் முன் பச்சைக் கிளி ஒன்றை கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். வீட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றதும், அந்த பச்சைக் கிளி கர்த்தாவே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று 5 அல்லது 6 முறை கத்தியது.

நான் ஆச்சரியத்தோடு நின்று கொண்டு இருந்த போது, அந்த வீட்டு சகோதரி வெளியே வந்து வரவேற்றார். அவரிடம் அந்த பச்சைக்கிளியை குறித்து கேட்டேன். அதற்கு அவர், எங்கள் வீட்டுக்காரர், அந்த கிளி மீது மிகவும் அன்பு வைத்துள்ளார். அவர் எந்த வேலை செய்யும் போது, ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருப்பார்.

இதனால் அவருடன் பழகிய, அந்த கிளியும் அப்படியே பழகிவிட்டது. யார் வீட்டிற்கு வந்தாலும், இப்படி குரல் எழும்பி தான் கூப்பிடும் என்றார். எனக்கு மிகவும் சந்தோஷமானது. ஜெபித்துவிட்டு, சில வீடுகளுக்கு அப்பால் உள்ள இன்னொரு விசுவாசியின் வீட்டிற்கு சென்றேன்.

அந்த வீட்டின் கேட்டை திறந்தவுடன், அங்கேயும் ஒரு கிளிக் கூண்டு காணப்பட்டது. நான் வீட்டு வளாகத்திற்குள் நுழைவதை கண்டதும், ——— மகனே, ——— வர்றீயா? என்று கெட்ட வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே சென்றது. என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கூட புரியவில்லை???

மனதில் இருந்த முழு சமாதானத்தையும், ஒரே நொடியில் இந்த கிளி கெடுத்துவிட்டதே? என்று யோசிப்பதற்குள், அந்த வீட்டு சகோதரி வெளியே வந்தார். அந்த கிளியை அவர் அதட்டியதும் அடங்கியது. வீட்டிற்குள் சென்ற நான், அந்த கிளியை பற்றி விசாரித்தேன். அதற்கு அவர், எல்லாம் அவர் பண்ணறது என்று தன் கணவர் மீது குற்றத்தை சுமத்தினார்.

அந்த வீட்டு சகோதரன், அப்பகுதியில் உள்ள பலருக்கும் கடன் கொடுத்துள்ளார். அதை அவர்கள் தாமதமாகவோ அல்லது அடுத்த மாதம் தருகிறேன் என்றோ கூறினால் – மனிதன் டென்ஷனாகி வாயில் வரும் எல்லா கெட்ட வார்த்தைகளை கொட்டி விடுவார்.

இந்த கெட்ட வார்த்தைகளை கேட்டு வளர்ந்த அந்த வீட்டு கிளியும், வீட்டிற்கு யார் வந்தாலும், அவர் வழக்கமாக கூறும் கெட்ட வார்த்தைகளை சொல்லியே வரவேற்க பழகியுள்ளது, என்றார். அரை மனதோடு அந்த வீட்டில் ஜெபித்துவிட்டு வந்துவிட்டேன் தம்பி என்று கூறிவிட்டு, அடுத்த பேச்சை தொடர்ந்தார் போதகர்.

சிந்தித்தது:

அந்த போதகர் கூறிய சம்பவத்தில் இருந்து நம் வீட்டில் எந்த மாதிரியான ஆவிக்குரிய நிலையை கொண்டிருக்கிறோமோ? அதையே தான் நம் பிள்ளைகளும், நாம் பழக்கும் நபர்களுக்கும் கற்பிக்கிறோம் என்ற கருத்து என் ஆழ்மனதில் பதிந்தது.

நமக்குள் எந்த மாதிரியான ஆவிக்குரிய நிலை இருக்கிறதோ, அது நம்மிடம் இருந்து குடும்பத்தினர், வேலை செய்யும் இடம், நண்பர்கள் என்று எல்லோரிடத்திற்கும் சென்று, மீண்டும் எதிரொலியாக நம்மிடம் திரும்ப வருகிறது. எனவே சூழ்நிலையை குற்றப்படுத்தாமல், முதலில் நம்மை நாமே பரிசுத்தம் செய்வோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *